Election bannerElection banner
Published:Updated:

தோனி க்ளீன் போல்ட்... 40 வயது, கணிக்கத்தவறும் கண்கள்... தடுமாறும் கேப்டன் CSK-வை கரை சேர்ப்பாரா?!

தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்

''என்னால் பந்துகளை மிடில் செய்யமுடியவில்லை. பந்துகளை வேகமாக ஓங்கி அடிக்க முயற்சிக்கிறேன். ஆனால், டைமிங் செய்யத்தவறுகிறேன்'' - மகேந்திர சிங் தோனி

சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் சிஎஸ்கே விளையாடிய பிராக்டீஸ் மேட்ச் காட்சிகள் இன்னும் கண்களைவிட்டு அகலவில்லை. 22 வயது வேகப்பந்து வீச்சாளர் ஷரிஷங்கர், கேப்டன் மகேந்திர சிங் தோனிக்குப் பந்துவீசினார். சற்றே ஸ்விங்காகி லெக் ஸ்டம்ப்பை நோக்கி, நல்ல பவுன்சில் வந்தப்பந்தை தோனி கணிக்கத்தவற அவரது பேட்டைத்தாண்டி உள்ளே புகுந்த பந்து லெக் ஸடம்ப்பைப் பெயர்த்தெடுத்தது. பெய்ல்ஸ் எகிறி, ஸ்டம்புகள் பறந்த இந்த காட்சி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை கலங்கவைத்திருக்கிறது.

தற்போது 40 வயதான தோனி, 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமலேயே இருந்தார். ''2020 அக்டோபரில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் எண்ணம் தோனிக்கு இருக்கிறது. 2020 ஐபிஎல்-ல் தனது திறமையை நிரூபித்துவிட்டு உலகக்கோப்பை டி20 அணியிலும் இடம்பிடிப்பார்'' என்றார்கள் அவரது நலம்விரும்பிகள். ஆனால், கொரோனா காரணமாக டி20 உலகக்கோப்பை ஓராண்டு ஒத்திவைக்கப்பட, கடந்த ஆண்டு ஐபில் தொடங்குவதற்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார் தோனி.

2020 ஐபிஎல் போட்டிகளோடு தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ''2021 ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் ஆறு மாதங்கள்தான் இருக்கிறது. அதற்குள் நான் என் ஃபிட்னஸை இழந்துவிடுவேனா என்ன... ஓய்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை'' என்றார் தோனி. ஃபிட்டாக இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், தோனி ஃபார்மில் இருக்கிறாரா என்கிற கேள்விக்கு விடைதேட வேண்டிய நேரம் இது.

பயிற்சி போட்டியில் தோனி
பயிற்சி போட்டியில் தோனி

'ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஒரு இளம் பெளலர் தோனியை க்ளீன் போல்டாக்கிவிட்டார் என்பதற்காக இப்படியெல்லாம் யோசிக்கவேண்டுமா' என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். ஆனால், உண்மையில் தோனி தடுமாற ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பேட்டிங்கில் மட்டுமல்ல கேப்டனாகவும் அவர் எடுத்த சில முடிவுகள்தான் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கடந்தாண்டு சிஎஸ்கே படுதோல்விகளைச் சந்திக்கக் காரணம்.

கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனை ஒருமுறை ரீவைண்டு செய்து பார்ப்போம். முதல்முறையாக லீக் சுற்றோடு வெளியேறிய சிஎஸ்கே-வின் கேப்டனாக 14 போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடினார் தோனி. இதில் மொத்தமாக அவர் அடித்த ரன்கள் 200. அதாவது ஒரு போட்டிக்கு ஆவரேஜாக 25 ரன்கள். தோனி அடித்த அதிகபட்ச ரன்கள் 47. அவரது ஸ்ட்ரைக் ரேட் 116.

ராஜஸ்தான் ராயல்ஸுடனான போட்டியில் 17 பந்துகளில் 29 ரன்கள் அடித்தார் தோனி. 3 சிக்ஸர்கள் இதில் அடக்கம். ஆனால், இந்த 3 சிக்ஸர்களுமே சென்னையின் தோல்வி உறுதிசெய்யப்பட்டபின், அதாவது 4 பந்துகளில் 36 ரன்கள் எடுக்கவேண்டும் என்று எல்லாம் கைமீறிப்போனப்பின் பிரஷர் இல்லாமல் தோனி அடித்த சிக்ஸர்கள்.

அதேப்போல் ஐதரபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் 166 ரன்களை சேஸ் செய்தது சிஎஸ்கே. சேஸ் செய்யமுடியாத ஸ்கோர் அல்ல இது. தோனியும் களத்தில் இருந்தார். ஆனால், 36 பந்துகளில் 47 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தாரே தவிர தோனியால் சிஎஸ்கேவை வெற்றிபெறவைக்கமுடியவில்லை.

''என்னால் பந்துகளை மிடில் செய்யமுடியவில்லை. பந்துகளை வேகமாக ஓங்கி அடிக்க முயற்சிக்கிறேன். ஆனால், டைமிங் செய்யத்தவறுகிறேன்'' என்று தோல்விக்குப்பிறகு சொன்னார் தோனி.

தோனி
தோனி

கடந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக தோனி ஆடிய இரண்டு போட்டிகளிலும் வருண் சக்ரவர்த்தி அவரை போல்டாக்கினார். பல போட்டிகளில் தோனி கீப்பர் அல்லது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்துத்தான் அவுட் ஆனார். இதற்கு முக்கியமானக் காரணம் அவரது கண்கள் பந்தை சரியாகக் கணிக்கத் தவறுவதுதான்.

ஒரு கிரிக்கெட் வீரரின் கரியர் என்பது 35 வயதுவரைதான். அதற்கு மேல் உடல் ஃபிட்டாக இருந்தாலும் கண்கள் ஒத்துழைக்காது. பெளலர் பந்தை ரிலீஸ் செய்து, பந்து அருகில் வந்தப்பிறகுதான் அந்தப்பந்தை எந்தத்திசையில் அடிப்பது என்பதை தோனியால் முடிவெடுக்கமுடிகிறது. அவர் முடிவெடுக்கக் கிடைக்கும் நேரம் ஒருசில மைக்ரோ விநாடிகளே. இதனால்தான் பெரும்பாலானப் பந்துகளை அவரால் டிஃபெண்ட் அல்லது சிங்கிளுக்கு தட்ட முடிகிறதே தவிர பழையபடி பவர் ஹிட் செய்யமுடியவில்லை. இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் கண்களில் ஏற்படும் முதிர்வும், அதற்கேற்றபடி உடலின் ரிஃப்ளெக்ஸ் குறைவதும்.

22 வயதான ரிஷப் பன்ட்டால் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்தையே ரிவர்ஸ் ஸ்வீப் செய்யமுடிகிறது என்றால் அதற்குக் காரணம், பந்தை பெளலர் கை விரல்களில் இருந்து ரிலீஸ்செய்யும் கணமே அது எப்படி வரப்போகிறது என்பதை அவரது கண்கள் கணித்துவிடுவதுதான். ஆனால், வயது கூடக்கூட இந்தக் கணிப்புகள் தடுமாறும். தோனிக்கு இப்போது நிகழ்வது அதுதான்.

தோனி எப்போதுமே அதிரடி முடிவுகளை எடுப்பவர். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்துகொண்டிருந்தபோது, பாதியிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதாக அறிவித்தவர் தோனி. அதேப்போல் 2017-ல் இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை ''19.29 மணி நேரத்தில் இருந்து நான் ஓய்வுபெற்றுவிட்டதாக நீங்கள் கருதலாம்' என ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டோடு முடித்தார்.

தோனி
தோனி

இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் அப்படி ஒரு அதிரடியான அறிவிப்போடு தோனி ஓய்வுபெறும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

2021 சீசனைப் பொருத்தவரை தன்னால் பவர்ஹிட்டராகத் தொடரமுடியவில்லை என்றாலும், கடந்த ஆண்டைக்காட்டிலும் கொஞ்சம் பேலன்ஸான அணியை உருவாக்கியிருப்பதால் வெற்றிகள் கிடைக்கும் என நம்புகிறார் தோனி. ராபின் உத்தப்பாவின் வருகை ஷேன் வாட்சன் இல்லாத டாப் ஆர்டர் பிரச்னைகளைத் தீர்க்கும் என்றும், சுரேஷ் ரெய்னாவின் வருகை மிடில் ஆர்டரில் கைகொடுக்கும் என்றும் நம்புகிறார். கூடுதலாக மொயின் அலி, சாம் கரண் என ஆல்ரவுண்டர்கள் அணிக்குள் இருப்பது கடந்த ஆண்டு பிரச்னையாக இருந்த மந்தமான பேட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பது தோனியின் கணிப்பு.

கடந்த ஆண்டே சில போட்டிகளில் 6-வது, 7-வது பேட்ஸ்மேனாக களத்துக்குவந்தார் தோனி. இந்தமுறையும் அதுவே தொடரும் என எதிர்பார்க்கலாம். உத்தப்பா, டுப்ளெஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, ருத்துராஜ் கெயிக்வாட், மொயின் அலி, பிராவோ, சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் என சென்னையின் இந்த லைன் அப்பில் கடைசி பேட்ஸ்மேனாக, அதாவது ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இறங்கக்கூடிய இடத்தில்தான் இப்போது தோனி இருக்கிறார்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் என்பது தோனிக்கு மிகப்பெரிய சவால். பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அவர் தான் யார் என்பதை நிரூபிக்க அவருக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. சாம்பியனாகவே ஓய்வுபெற வேண்டும் என நினைக்கிறார் தோனி. அவர் நம்பிக்கை பொய்க்காது என்றே நம்புவோம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு