Published:Updated:

150 கோடிகளைத் தாண்டிய தோனி... ஐபிஎல் மூலம் அதிகம் சம்பாதித்த டாப் 10 வீரர்கள் யார் யார்?!

தோனி - கோலி
தோனி - கோலி

ஐபிஎல் மூலம் அதிக வருமானம் ஈட்டிய டாப் 10 வீரர்களில் 7 பேர் இந்தியர்கள். மற்ற மூவர் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத்தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். இதில் மூன்று வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வுபெற்றுவிட்டார்கள்.

2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது இந்தியன் பிரிமியர் லீக். 2021 ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் இதுவரை இந்தத்தொடர் மூலம் சம்பளமாக மட்டுமே அதிக வருமானம் பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. விளம்பரங்கள், ஸ்பான்சர்களிடம் இருந்து வீரர்களுக்கு கிடைக்கும் பணம் எல்லாம் இதில் சேர்க்கப்படவில்லை. வெறும் ஐபிஎல் அணிகள் வழங்கிய சம்பளம் மட்டுமே கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த டாப் 10 வீரர்கள் பட்டியலில் 7 பேர் இந்தியர்கள். மற்ற மூவர் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத்தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். இதில் மூன்று வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வுபெற்றுவிட்டார்கள்.

இப்போது டாப் 10 பட்டியலைப் பார்ப்போம்!

1. தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், மொத்த வருமானம் : 152 கோடியே 84 லட்சம் ரூபாய்
தோனி
தோனி
twitter.com/ChennaiIPL

14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக விளையாடயிருக்கும் மகேந்திர சிங் தோனிதான் ஐபிஎல் மூலம் அதிகம் சம்பாதித்தவர். 2008 முதல் 2015 வரை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்த தோனி, இடையில் இரண்டு ஆண்டுகள் சென்னை அணிக்குத் தடைவிதிக்கப்பட்டதால் புனே அணியில் இருந்தார். முதன்முதலாக 2008-ம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் 6 கோடி ரூபாய்க்கு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார் தோனி. இதுதான் அந்த சீசனில் மிகப்பெரிய ஏலத் தொகை. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை அதிக சம்பளத்துக்கு இவரை ரீடெய்ன் செய்துகொண்டே வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 15 கோடியாக சம்பளம் பெற்றுவரும் தோனியின் ஒட்டுமொத்த ஐபிஎல் வருமானம் 150 கோடியைத் தாண்டியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கியிருக்கும் வீரர் தோனிதான்.

2. ரோஹித் ஷர்மா, மும்பை இந்தியன்ஸ் மொத்த வருமானம் : 146 கோடியே 66 லட்சம் ரூபாய்
ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடங்கிய முதல் மூன்று சீசன்கள் டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் இருந்தார் ரோஹித் ஷர்மா. முதல் சீசனில் 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவரை, 9 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு 2011-ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். அதில் இருந்து தொடர்ந்து 11 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரோஹித் ஷர்மா, கேப்டனாகப் பொறுப்பேற்று 5 முறை சாம்பியன்ஷிப் கோப்பையை அந்த அணிக்குப் பெற்றுத்தந்திருக்கிறார். இந்த சீசனோடு சேர்த்து இவரது சம்பளம் 146 கோடியைத் தாண்டயிருக்கிறது.

3. விராட் கோலி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, மொத்த வருமானம் : 143 கோடியே 20 லட்சம் ரூபாய்

  விராட் கோலி
விராட் கோலி

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒரே அணிக்கு விளையாடிவரும் ஒரு சில வீரர்களில் முக்கியமானவர் விராட் கோலி. 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இவரை வெறும் 12 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது அப்போதைய விஜய் மல்லையா தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி. முதல் மூன்று சீசன்களுக்கு 12 லட்சம் ரூபாயாக இருந்த இவரது சம்பளம் 2011 சீசனில் அப்படியே பல மடங்கு அதிகரித்து 8 கோடியே 28 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. 2014 சீசனின்போது 12 கோடியே 50 லட்சமாக உயர்ந்த கோலியின் சம்பளம் தற்போது ஆண்டுக்கு 17 கோடி ரூபாய். முதல் மூன்று சீசன்களில் மிகவும் குறைவான சம்பளம் வாங்கிய காரணத்தால் இவரது ஒட்டுமொத்த ஐபிஎல் சம்பளம் இன்னும் 150 கோடியைத் தாண்டவில்லை.

4. சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ், சம்பளம் : 110 கோடியே 74 லட்சம் ரூபாய்
சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா
Twitter

தோனியைப்போன்றே முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்தவர், 2016 மற்றும் 2017 சீசன்களில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடினார். 2018 சீசனில் மீண்டும் சிஎஸ்கே திரும்பியவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட துபாய் வரை சென்றவர் திடீரென விலகினார். முதல் சீசனில் இவரை 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது இந்தியா சிமென்ட்ஸ். 2017-ல் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியபோது இவரது சம்பளம் 12 கோடியே 50 லட்சம். ஆனால், 2018 சீசனில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவர் திரும்பியபோது சம்பளம் 11 கோடியாகக் குறைந்தது. அதுவே இந்த சீசன் வரை தொடர்கிறது.

5. ஏபி டி வில்லியர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ், மொத்த வருமானம் : 102 கோடியே 51 லட்சம்
டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்

ஐபிஎல் மூலம் அதிக சம்பளம் பெற்ற வீரர்களில் 100 கோடி ரூபாய் வருமானத்தை தாண்டியிருக்கும் ஒரே வெளிநாட்டு வீரர் ஏபி டி வில்லியர்ஸ். தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் ஏபிடி வில்லியர்ஸ் முதல் மூன்று ஆண்டுகள் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்தார். முதல் சீசனில் இவரது சம்பளம் 1 கோடியே 20 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய். 2011-ம் ஆண்டு ஏலத்தில் இவரை 5 கோடி ரூபாய்க்கு எடுத்தது பெங்களூரு அணி. அதில் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரு அணிக்காக ஆடிவருகிறார் ஏபிடி. தற்போது இவரது சம்பளம் 11 கோடி ரூபாய்.

6. சுனில் நரைன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வருமானம் : 95 கோடியே 24 லட்சம்
சுனில் நரைன்
சுனில் நரைன்

டாப் 10 லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கும் ஒரே கரீபிய வீரர் சுனில் நரைன். ஆல் ரவுண்டரான சுனில் நரைன் ஐபிஎல் தொடரின் முதல் 4 சீசன்களில் விளையாடவில்லை. 2012 முதல் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். முதல் சீசனில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சுனில் நரைனின் தற்போதைய சம்பளம் ஆண்டுக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்.

7. கெளதம் கம்பீர், டெல்லி கேபிடல்ஸ் (ஓய்வு), மொத்த வருமானம் : 94 கோடியே 62 லட்சம் ரூபாய்
கம்பீர்
கம்பீர்

2008 முதல் 2018 வரை மொத்தம் 11 ஐபிஎல் சீசன்களில் விளையாடியவர் கெளதம் கம்பீர். இவரது கேப்டன்சியின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. 2008-ல் டெல்லி அணியில் தொடங்கிய இவரது பயணம் 2011-ல் கொல்கத்தாவுக்குப் போய் மீண்டும் 2018-ல் டெல்லிக்கே திரும்பி வந்தது. முதல் மூன்று சீசன்களில் இவரது சம்பளம் 2 கோடியே 90 லட்சம் ரூபாய். 2011-ல் இவரது சம்பளம் 11 கோடியாக அதிகரித்து 2017 சீசனில் 12 கோடியே 50 லட்சமாக உயர்ந்தது. 2018 சீசனின் பாதியிலேயே தொடர் தோல்விகளால் கேப்டன்ஸியில் இருந்தும், மோசமான ஃபார்மால் அணியில் இருந்தும் விலகினார் கெளதம் கம்பீர்.

8. யுவராஜ் சிங், மும்பை இந்தியன்ஸ் (ஓய்வு), மொத்த வருமானம் : 84 கோடியே 60 லட்சம்
யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

தோனிக்கு இணையாக ஐபிஎல் ஏலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் யுவராஜ் சிங். 2011 வரை உச்சத்தில் இருந்தவர் அதன்பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துமீண்டு வந்தார். ஆனால், பழைய ஃபார்முக்கு அவரால் திரும்பமுடியவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணி ஏலத்தில் எடுப்பது பின்னர் விடுவிப்பது என்றே இவரது கரியர் தொடர்ந்து. 2008 முதல் 2019 வரை ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டார் யுவராஜ் சிங். மொத்தம் 7 அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். முதல் மூன்று சீசன்களில் பஞ்சாப் அணியில் இருந்தவரின் சம்பளம் 4 கோடியே 25 லட்சம். 2014 ஐபிஎல் ஏலத்தின்போது இவரை 14 கோடிக்கு வாங்கி பெங்களூரு அணி சர்ப்ரைஸ் கொடுக்க, 2015-ல் 16 கோடி ரூபாய்க்கு வாங்கி அதிர்ச்சி கொடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. கடைசி சீசனான 2019 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த யுவராஜ் சிங்கின் சம்பளம் 1 கோடியாகக் குறைந்தது.

9. ராபின் உத்தப்பா, சென்னை சூப்பர் கிங்ஸ், மொத்த வருமானம் : 78 கோடியே 27 லட்சம்
உத்தப்பா
உத்தப்பா

சில பேர் பெரிதாக பர்ஃபார்ம் செய்யமாட்டார்கள். ஆனால், சத்தம் இல்லாமல் அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட அபூர்வ பிரிவைச் சேர்ந்தவர்தான் ராபின் உத்தப்பா. 2008 முதல் தொடர்ந்து 14 சீசன்களாக ஐபிஎல் அணிகளில் இடம்பிடித்துவருகிறார் உத்தப்பா. 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. அதன்பிறகு பெங்களூரு, புனே, கொல்கத்தா, ராஜஸ்தான் என சுற்றி தற்போது சென்னைக்கு வந்திருக்கிறார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிவரை டிரேட் மூலம் வாங்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

10. ஷேன் வாட்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் (ஓய்வு), மொத்த வருமானம் : 77 கோடியே 13 லட்சம்
ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்
2008 முதல் கடந்த சீசனான 2020 வரை 13 ஐபிஎல் தொடர்களில் விளையாடியவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்ஸன். 2008 முதல் 2015 வரை தொடர்ந்து 8 ஆண்டுகள் இவர் ராஜஸ்தான் அணியிலேயே இருந்தார். முதல் சீசனில் 50 லட்சம் ரூபாயில் இருந்த இவரது சம்பளம் 2014 சீசனில் 12 கோடியே 50 லட்சமாக உச்சம் தொட்டது. ஆனால், அதன்பிறகு அடுத்தடுத்த சீசன்களில் குறைய ஆரம்பித்த இவரின் கடைசி ஆண்டு சம்பளம் 4 கோடி ரூபாய்.
அடுத்த கட்டுரைக்கு