Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021 : கம்மின்ஸையே சிக்ஸர்களால் சாத்திய காஷ்மீரி கிரிக்கெட்டர்... யார் இந்த அப்துல் சமத்? #SRH

அப்துல் சமத்
அப்துல் சமத்

பேட் கம்மின்ஸ்க்கு எதிராக 3 சிக்சர்கள், பும்ரா மற்றும் நார்க்கியாவுக்கு எதிராக தலா 2 சிக்சர்கள், ரபாடாவுக்கு எதிராக ஒரு சிக்சர் என அடித்த சிக்சர்களெல்லாம் மற்ற பேட்ஸ்மேன்கள் தொடத் தயங்கும் பெரிய தலைகளுக்கு எதிராக.

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது. பேர்ஸ்ட்டோ, மணீஷ் பாண்டே இருவரும் சன் ரைசர்ஸ் சார்பில் அரைசதங்களை அடித்திருந்தனர். ஆனாலும், ரசிகர்கள் அப்துல் சமத்தை சீக்கிரமே இறக்கியிருந்தால் சன்ரைசர்ஸ் வென்றிருக்கும் என புலம்பும் அளவுக்கு பர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்பிவிட்டார். இரண்டே சிக்சர்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த அப்துல் சமத் யார்?

சன்ரைசர்ஸ் அணி வெற்றிபெற கடைசி இரண்டு ஓவர்களில் 38 ரன்கள் தேவை என்ற நிலையிலேயே அப்துல் சமத் களமிறங்கினார். 19-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். எப்படியும் கொல்கத்தா அணிதான் வெற்றி பெறும் என்ற சூழலில், கம்மின்ஸ் வீச அப்துல் சமத் சந்தித்த முதல் பந்தையே மிட் விக்கெட் மேல் சிக்சராக்கினார். அதே ஓவரில் கம்மின்ஸ் யார்க்கராக வீசிய இன்னொரு பந்தையும் லாங் ஆனில் சிக்சராக்கினார். வெற்றி உறுதி என்ற நிலையிலிருந்த கொல்கத்தா அணியை இந்த இரண்டு சிக்சர்கள் மூலம் பதற்றத்துக்குள்ளாக்கினார் அப்துல் சமத். கடைசி ஓவரை ரஸல் சிறப்பாக வீச சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நம்பர் 5-ல் நபியை இறக்கியிருந்தார் வார்னர். அதன்பிறகு விஜய் சங்கர் இறங்க, நம்பர் 7-ல் தான் அப்துல் சமத் இறக்கப்பட்டிருந்தார். வார்னரின் இந்த முடிவுதான் இப்போது விவாதமாகியுள்ளது. அப்துல் சமத் நம்பர் 5-ல் இறக்கப்பட்டிருந்தால் அவர் ஆட்டத்தையே மாற்றியிருப்பார் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 8 சிக்சர்களை அடித்திருக்கிறார் அப்துல் சமத். யாரையெல்லாம் சிக்சர் அடித்திருக்கிறார் என பார்த்தால் வியப்பாக இருக்கும். பேட் கம்மின்ஸ்க்கு எதிராக 3 சிக்சர்கள், பும்ரா மற்றும் நார்க்கியாவுக்கு எதிராக தலா 2 சிக்சர்கள், ரபாடாவுக்கு எதிராக ஒரு சிக்சர் என அடித்த சிக்சர்களெல்லாம் மற்ற பேட்ஸ்மேன்கள் தொடத் தயங்கும் பெரிய தலைகளுக்கு எதிராக.

அப்துல் சமத் - தோனி
அப்துல் சமத் - தோனி

இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்ஃபான் பதானே அப்துல் சமத்தின் கிரிக்கெட் கரியர் தொடங்குவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஜம்மு காஷ்மீர் அணியின் ஆலோசகராக இர்ஃபான் பதான் இருந்தபோது, 2018-ம் ஆண்டு ஒரு தேர்வு முகாமில்தான் 17 வயதே ஆன அப்துல் சமாத்தை பார்த்திருக்கிறார் பதான். அவரின் அதிரடி மற்றும் பவர் ஹிட்டிங்கை கண்டு வியந்தவர் அவரை ஜம்மு காஷ்மீர் அணிக்கு பரிந்துரை செய்திருக்கிறார். இப்படித்தான் சமத்தின் கிரிக்கெட் கரியர் ஆரம்பித்திருக்கிறது.

2018-19 சீசனிலேயே ரஞ்சி, லிஸ்ட் A, டி20 போட்டிகள் என ஜம்மு காஷ்மீர் அணிக்காக அத்தனை ஃபார்மேட்களிலும் அறிமுகமாகிவிட்டார் அப்துல் சமத். அறிமுக ரஞ்சி சீசனிலேயே 3 சதங்களுடன் 592 ரன்களை எடுத்தார். ஜம்மு காஷ்மீர் அணிக்காக அந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் அவரே. இந்த சீசனில் மட்டும் 36 சிக்சர்களை அடித்திருந்தார். வேறெந்த வீரரும் இத்தனை சிக்சர்களை அடிக்கவில்லை.

சையத் முஷ்தாக் அலி டி20 தொடரிலும் 40 ரன் ஆவரேஜோடு சிறப்பாக ஆடியிருந்தார். இந்நிலையில்தான், சன்ரைசர்ஸ் அணியின் வி.வி.எஸ்.லட்சுமணன் தங்கள் அணிக்கு ஃபினிஷர் ரோலில் ஆட ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தார். சன்ரைசர்ஸ் நடத்திய தேர்வு முகாமில் அப்துல் சமத் கலந்துக்கொண்டு அதிரடியாக 48 ரன்களை விளாசியிருக்கிறார். இர்ஃபான் பதானும் சமத் குறித்து லட்சுமணனிடம் நல்லபடியாக சொல்ல, 2019-ம் ஆண்டு ஏலத்தில் சமத்தை 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி.

அப்துல் சமத் - இர்ஃபான் பதான்
அப்துல் சமத் - இர்ஃபான் பதான்

கடந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் லோயர் மிடில் ஆர்டரில் இறக்கப்பட்டார். மிரட்டலான பௌலர்களுக்கு எதிராக பெரிய சிக்சர்களை அடித்து கவனத்தை ஈர்த்தார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தோனி க்ரீஸில் நிற்க வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் அப்துல் சமத்திடம் பந்தை கொடுத்தார். தோனிக்கு எதிராக 18 வயதே ஆன ஒரு இளம் வீரர் அதுவும் பார்ட் டைம் ஸ்பின்னர் என்றால் சொல்லவே வேண்டாம் பந்து மைதானத்தை விட்டு வெளியே பறந்துவிடும். ஆனால், அந்த ஓவரை நன்றாக வீசி சன்ரைசர்ஸ் அணியை வெற்றிபெற வைத்தார் சமத்.

ஒரு ஆல்ரவுண்டராக பிக் ஹிட்டராக சன்ரைசர்ஸ் அணி சமத்தை இன்னும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் நின்று அதிக பந்துகளை சந்திக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் போன்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். இதை நேற்றையப் போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் அணியும் உணர்ந்திருக்கும். எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் சமத்தை நம்பர் 4-5ல் கூட எதிர்பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீர் மாதிரி எந்நேரமும் தீவிரவாதமும் பதற்றமும் சூழ்ந்த பகுதியிலிருந்து ஒரு விளையாட்டு வீரர் உருவாகி வருவதே மிகப்பெரிய விஷயம். ஐபிஎல் தொடரில் இதுவரை 3 ஐம்மு காஷ்மீர் வீரர்கள் மட்டுமே ஆடியிருக்கின்றனர். அவர்களில் பெரிதாக கவனம் பெற்ற வீரர் அப்துல் சமத் மட்டுமே. இந்திய அணிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்கவகையில் எந்த ஜம்மு காஷ்மீர் வீரரும் ஆடவில்லை. எப்படி தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு கிராமத்திலிருந்து நடராஜன் கிளம்பி வந்தவுடன் தமிழகத்தின் இளம் வீரர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு புது நம்பிக்கை பிறந்ததோ, அதேமாதிரி ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்திலிருந்து வந்து அப்துல் சமத் வெல்லும் போது அங்கும் இளைஞர்களின் கவனம் விளையாட்டின் பக்கம் திரும்பி புது எழுச்சியை உண்டாக்கியிருக்கிறது!

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு