Published:Updated:

IPL 2021: சஞ்சு சாம்சன்களின் கவனத்துக்கு... கிறிஸ் மாரிஸ் சிக்ஸர்கள் அடிப்பார், மேட்ச் ஜெயிப்பார்!

கிறிஸ் மாரிஸ்
கிறிஸ் மாரிஸ்

இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்தை ரபடா வீச, இரண்டு சிக்ஸர்கள் உட்பட 15 ரன்களை எடுத்தது மாரிஸ் - உனத்கட் கூட்டணி. இறுதி ஓவரின் மூலம், 12 ரன்கள் தேவை என ஆட்டம் க்ளைமேக்ஸுக்கு வர டாம் கரண் வந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லி Vs ராஜஸ்தான்... ஒரு நிமிடம் போட்டி வான்கடேவில் நடக்கிறதா அல்லது சேப்பாக்கத்தில் நடக்கிறதா என்னும் சந்தேகம் எழும் அளவிற்கு போட்டியின் போக்கு நகர்ந்து கொண்டிருந்தது. அதிக ரன்களை வாரி வழங்கும் வான்கடே மைதானம், நேற்று ரன்களே தராத சேப்பாக்கம் மைதானம் போல மாற, மற்றொரு கடைசிஓவர் திரில்லிங் போட்டியாக நடந்து முடிந்திருக்கிறது டெல்லிக்கும் ராஜஸ்தானுக்கும் இடையேயான போட்டி.

ஐந்து விக்கெட்களை, அரக்கப்பறக்க அவசரகதியில் பத்து ஓவர்களுக்குள் இழந்தாலும், கில்லர் மில்லரின் கில்லாடி ஆட்டத்தாலும், மாரிஸ் எனும் மாயக்காரரின் கடைசி நிமிட மாயாஜாலத்தாலும், தொடரில் தனது முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது ராஜஸ்தான்.

பேட்டிங்கிற்குச் சாதகம், சேஸ் செய்வது சுலபம் என்பதை மனதில் நிறுத்தி, டாஸ் வென்ற சாம்சன், பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். டெல்லியின் சார்பில், ரபடா, அறிமுக வீரர் லலித் யாதவுக்கு வழிவிட்டு, ஹெட்மெயர், அமித் மிஸ்ரா வெளியேறியிருந்தனர். ராஜஸ்தானிலோ, காயமடைந்த ஸ்டோக்ஸுக்கு பதிலாக மில்லரோடு, வேகத்துக்கு மைதானம் ஓரளவு ஒத்துழைக்குன் என்பதால், ஷ்ரேயாஸ் கோபாலை வெளியே அனுப்பி, உனத்கட் சேர்க்கப்பட்டிருந்தார்!

தவான் - ப்ரித்வியை ஓப்பனர்களாக அனுப்பி டெல்லி தொடங்க, சகாரியா - உனத்கட்டைக் கொண்டு இருமுனைத் தாக்குதலைத் தொடங்கினார் சாம்சன். ஆரம்பம் முதலே அட்டாக்கிங் பௌலிங்கைக் கையிலெடுத்த ராஜஸ்தான், பவர்ப்ளே ஓவர்களில் ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தியது! சகாரியா சரமாரியாக பந்துகளைக் கணையாக்கித் தாக்கி, ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினார் என்றால், மறுமுனையில், உனத்கட், உக்கிரமானவராக மாறி, விக்கெட்வேட்டை நிகழ்த்தினார்.

பன்ட் - சாம்சன்
பன்ட் - சாம்சன்

தான் வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்தில் ப்ரித்வியை ஸ்லோபால் மூலமாக அகற்றியவர், தனது இரண்டாவது ஓவரின் முதல்பந்தில், அவுட்சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் வீசிய ஒரு பந்தின் மூலமாக தவானையும் சேர்த்தே அனுப்பினார். தனது வலப்பக்கம் தாவி, ஒருகையில் சாம்சன் பிடித்த அற்புதமான கேட்சால், வெறும் 9 ரன்களுடன் தவான் வெளியேறினார். 138 ரன்களை போன போட்டியில் இணைந்தெடுத்த ஓப்பனர்களை, தன்னுடைய அடுத்தடுத்த இரண்டே பந்துகளில், சுருட்டியனுப்பினார் உனத்கட்.

மொமன்டத்தை அப்படியே கொண்டு செல்லும் நோக்கோடு, இன்னுமொரு ஓவரை உனத்கட்டுக்கு சாம்சன் அளிக்க, ஸ்லோபாலினால் ரஹானேவை காலி செய்தார் உனத்கட். ஆறு ஓவர்களின் முடிவில் 36/3என முடங்கி முனங்கியது டெல்லி. கேட்சுகள் கைவிடப்படவில்லை, மிஸ்ஃபீல்டென்று ஏதுமில்லை, அதிரடி ஃபீல்ட் செட்அப்போடு அசத்தலாக ஆடியது ராஜஸ்தான்.

புதிதாக இணைந்த, ஸ்டாய்னிஸ் - பன்ட் கூட்டணியும் வெகுநேரம் நிலைக்கவில்லை. முஸ்தஃபைஸுர் வீசிய கட்டர் பாலில், கட்டானது இந்த இணை! ஸ்டோய்னிஸும் வெளியேற, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்காக ஏங்கித் தவிக்கத் தொடங்கியது டெல்லி. அது ஏற்படாமலே தகர்த்தது ராஜஸ்தான்!

வந்தவரெல்லாம் வெளியேறிக் கொண்டேயிருக்க, மறுபுறம், பன்ட்டோ பரிதாபகரமாக நின்று கொண்டிருக்க, லலித்யாதவ் வந்து சேர்ந்தார். தான் சந்தித்த மாரிஸின் ஐந்து பந்துகளில், இரண்டை பவுண்டரி லைனுக்கு வெளியே கம்பி நீட்ட வைத்து, அசத்தலாய்த் தொடங்கினார் லலித். இந்தப் பார்னர்ஷிப்பையும் உடைக்கும் நோக்கத்தில், சாம்சன் உனத்கட்டின் மிஞ்சியிருந்த ஒரு ஓவரை, அவரை வீசவைக்க, அவரிடம் அடக்கிவாசித்த இந்தக்கூட்டணி, மூன்று ரன்களை மட்டுமே எடுத்தது.

விக்கெட்வேட்கை அடங்காத சாம்சன், இம்முறை சுழல்சாட்டை எடுக்க திவேதியாவை அழைக்க, விட்டதை எல்லாம், பிடித்துவிடும் நோக்கத்தில், அவரது ஓவரை ஒருபிடி பிடித்தார் பன்ட். ஹாட்ரிக் உள்ளிட்ட நான்கு பவுண்டரிகளை விளாசி, தன் ரன்பசியை அந்த ஓவரிலெடுத்த இருபது ரன்கள் மூலம், தணித்துக் கொண்டதோடு, 30 பந்துகளில், அரைசதத்தையும் அடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனினும், பன்ட் ஃபீவர் வெகுநேரம் நீடிக்கவில்லை. ரியான் பராக்கின் பந்தை பன்ட் அடிக்க, அது தன் கைக்கு வந்த வேகத்தில், ஸ்டம்புக்கு பராக் எறிய, டைரக்ட் ஹிட்டில் தகர்ந்தது ஸ்டம்ப். ஐம்பது ரன்கள் பார்ட்னர்ஷிப் முறிய, டெல்லி பெரிய பின்னடைவைச் சந்தித்தது‌.

'பாலுண்டு ஆளில்லை!' என ஏழு ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், லலித்தும் டாம் கரணும் களத்திலிருந்தனர். பெரிய இன்னிங்ஸ் ஆடி தன்னை நிரூபிப்பார் என்ற நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கி, 100 ரன்களை அணியின் ஸ்கோராக்கிய சந்தோஷத்தில், மாரிஸின் பந்தில், லலித் வெளியேற, கிறிஸ் வோக்ஸ் வந்து சேர்ந்தார்.

அவசரப்பிரிவிலிருந்த அணிக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் கடைசிக்கட்ட முயற்சியில், இந்த இருவரணி ஈடுபட்டது. 21 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்து, சிறிய நம்பிக்கைகீற்றை இவர்கள் காட்ட, டாம் கரணை க்ளீன் போல்டாக்கி முஸ்தஃபைஸுர் அசத்தினார். ஒரு பவுண்டரி அடித்த திருப்தியில் வந்த வேகத்தில், அஷ்வினும் ரன் அவுட்டாகி வெளியேற, இறுதி ஓவரில் சேர்த்த பதினோரு ரன்களோடு, ஒருவழியாக, 147 ரன்களோடு முடித்தது டெல்லி கேபிடல்ஸ்.

பன்டைத் தவிர்த்த அத்தனை டாப் 5 வீரர்களும், ஒற்றை இலக்கோடு வெளியேறி, மோசமாகச் சொதப்பியிருந்தனர். வான்கடேவில் நடந்துள்ள ஐபிஎல்போட்டிகள் வரலாற்றில், ஒரு சிக்ஸர்கூட அடிக்கப்படாமல், ஒரு இன்னிங்ஸ் முடிவுக்குவந்தது இதுவே முதல்முறை. மறுபுறம், உனத்கட்டின் உத்வேகம் சேர்ந்த வேகத்தால் அசத்தலாகப் பந்துவீசியிருந்தது ராஜஸ்தான். 3.8 எனும் மிரளவைக்கும் எக்கானமியோடு, மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழத்தியிருந்த அவருக்கு அப்போதே ஆட்டநாயகன் விருதை எடுத்துக் கொடுத்திருக்கலாம்!

தவான்
தவான்

148 என்னும் எளிய இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது மருந்தின் நெடியை அவர்களுக்கே காட்டுவது போல், பேக் டு பேக் பவுண்டரி அடித்து மிரட்டிய வோஹ்ராவையும், ஒருபந்து இடைவேளைவிட்டு, அடுத்த ஓப்பனர் பட்லரையும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்கச் செய்து மிரட்டினார். 'நான் மட்டும் விடுவேனா?' என ரபடா, வீசிய மூன்றாவது பந்திலேயே, சத வீரன் சாம்சனை, சம்ஹாரம் செய்து அனுப்ப, வாங்கிய அடியை, இடியாய் டெல்லி திருப்பித்தந்தது. சரியத் தொடங்கியது ராஜஸ்தான் கோட்டை. வழக்கம்போல முதல் போட்டியில் நம்பிக்கையளித்த சாம்சன், இந்தப் போட்டியில், ஏமாற்றமளித்து பழைய ஃபார்முக்குத் திரும்பினார்!

கில்லர் மில்லரும், ஷிவம் துபேவும் ஜோடி சேர்ந்தனர். ஆறு ஓவர்களில், 26 ரன்கள் என அழுது வடிந்தது போட்டி! இரு இடக்கை ஆட்டக்காரர்களுக்கும் குறிவைக்கும் எண்ணத்தில், அஷ்வினை ஆறாவது ஓவரிலேயே பன்ட் கொண்டுவர, அவுட் ஆஃப் சிலபஸில், அவேஷ்கான் அதற்கடுத்த ஓவரில், ஷிவம் துபேவைத் தூக்க, நான்காவது விக்கெட்டை இழந்து விக்கித்துநின்றது ராஜஸ்தான். "வி மிஸ் யூ நவ் ஸ்டோக்ஸ்" என்றனர் ராஜஸ்தான் ரசிகர்கள்!

பத்தே பந்துகள்தான் இந்தப் பாரட்னர்ஷிப்பின் ஆயுட்காலம். அவேஷின் ஸ்லோவர் பால், பராக்கைப் பேக் செய்ய, நாள்முழுவதும் ஸ்லோ பால்கள், பௌலர்களுக்கான ஸ்லோ பாய்சனாக மாறிக் கொண்டிருந்தன. போன போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும், மூன்று கேட்ச்களைப் பிடித்து அசத்தி, கப்பாராய் தர்பார் நடத்தினார் தவான்! டெல்லிக்கு நடந்துமுடிந்த இரண்டு போட்டிகளில், பிடிக்கப்பட்ட 8 கேட்ச்களில், 6 தவான் பிடித்தவைதான்!

ரபடா - மாரிஸ்
ரபடா - மாரிஸ்

மில்லரும், திவேதியாவும், பதற்றத்தோடே ஆடிக் கொண்டிருந்தனர். தேவையான ரன்ரேட் ஒரு ஓவருக்கு 11-ஐ எட்டித் தொட்டது. எனினும், 33 பந்துகளில், 48 ரன்களைக் குவித்த இந்தக்கூட்டணி, சின்னதாக வெற்றிஆசையை ராஜஸ்தான் ரசிகர்கள் கண்களில் காட்ட, அதைக் கலைக்கும் நோக்கோடு, ரபடாவை உள்ளே இறக்கினார் பன்ட். ரபடாவுக்கு விழாத விக்கெட்டா? எதிர்பார்த்ததைப் போலவே, ஷார்ட் பாலால் திவேதியாவை, ரபாடா பெவிலியனுக்கு திரும்பவைத்தார்.

மாரிஸ் உள்ளே வர, அந்தச்சமயம், முரட்டு மில்லரின், அசத்தல் அரைச்சதமும் வந்து சேர்ந்தது! அதோடு 212 பந்துகளாக, பவுண்டரி எல்லைகள் பார்க்கக் காத்திருந்த சிக்ஸரும் வந்துசேர்ந்தது, மில்லரின் மிரட்டலடியால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமென, அடுத்தடுத்து இரண்டு! தற்போது பதற்றம் தொத்திக் கொண்டது டெல்லியின் பக்கம். பன்ட், பக்கா கேப்டன் மெட்டீரியலாக, அவேஷின் தோளில்கை போட்டு, சின்னதாய் ஒரு வியூகம் வகுக்க, அடுத்த பந்தே மாயம் செய்தது.

வெறியடங்காது அதனை மில்லர், சிக்ஸருக்குத் தூக்க, அது லாங் ஆனில் கேட்ச் ஆனதோடு, கிட்டத்தட்ட ராஜஸ்தானுக்கு எண்ட் கார்டும் போட்டு விட்டது டெல்லி. எனினும், அந்தக் கட்டத்தில், மில்லரின் சிக்ஸர்களின் அருளால், 25 பந்துகளில் 44 ரன்கள் என எட்டக்கூடியதாகவே இருந்தது. மாரிஸும், உனத்கட்டும் களத்தில் இருந்தனர். பரபரப்பாகப் போய்க் கொண்டிருந்த ஆட்டத்தில், திருப்புமுனையாக அமைந்தது, உனத்கட்டை ரன்அவுட் செய்யும் அருமையான வாய்ப்பை பன்ட் தவறவிட்ட நிகழ்வு! பந்தைக் கொண்டு ஸ்டம்பைத் தகர்க்காமல், வெறும்கையோடு பன்ட் அதைத்தகர்த்து, ஒரு விக்கெட்டைக் கோட்டை விட்டார்.

இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்தை ரபடா வீச, இரண்டு சிக்ஸர்கள் உட்பட 15 ரன்களை எடுத்த இக்கூட்டணி, இறுதி ஓவரின் மூலம், 12 ரன்கள் தேவை என வந்து நிறுத்தியது!

திக் திக் த்ரில்லிங் நொடிகள் தொடங்கின. டாம்கரண் அந்த ஓவரை வீச, முதல் பந்தில் இரண்டு ரன்களை அடித்த மாரிஸ், இரண்டாவது பந்தில் சிக்ஸரைத் தூக்கினார். மூன்றாவது பந்து டாட் பால், இறுதியில் மூன்று பந்தில் நான்கு ரன்கள் தேவையென்ற நிலையில், பொறுமையில்லை எனக்கு என்று பந்தை சிக்ஸருக்குத் தூக்கி, அணியை இலக்கை எட்ட வைத்து விட்டார்!

போன போட்டியில், ஸ்ட்ரைக்கை சாம்சன், மாரிஸிடம் கொடுத்திருக்க வேண்டுமோ என எல்லாரையும் நினைக்க வைத்து விட்டார் மாரிஸ். இவருக்கு ஏன் ஐபிஎல்-ல் இவ்வளவு விலை என்ற கேள்விக்கும் பதில் அளித்து விட்டார். மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு