Published:Updated:

ஸ்மித் ஆர்வக்கோளாறுகள்... டெல்லியின் பெளலிங்கையே சேஸ் செய்ய நினைத்த ராஜஸ்தானின் சோகம்! #RRvDC

#RRvDC
#RRvDC

டியூ காரணமாக சேஸிங்கைத் தேர்ந்தெடுத்த ஸ்மித்தின் முடிவு சரிதானோ என்கிற சமிஞ்சைகளோடு தொடங்கியது டெல்லியின் பேட்டிங். ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணம் என்ன?

2020 ஐபிஎல் சீசனில் டெல்லியின் மிகப்பெரிய பலமாக இருப்பது அதன் பெளலிங். குறைவோ, அதிகமோ எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதை டிஃபெண்ட் செய்யக்கூடிய பெளலர்களைக் கொண்டிருக்கிறது டெல்லி. ரபடா, நோர்க்கியா, அஷ்வின், ஸ்டாய்னிஸ், அக்ஸர் பட்டேல் என சிறந்த பெளலர்களால் முதலில் பேட்டிங் செய்த அத்தனைப்போட்டிகளிலும் வென்றிருக்கிறது டெல்லி. இதுவரை ஹைதராபாத்துக்கு எதிராக சேஸ் செய்த ஒரே ஒரு போட்டியில்தான் தோற்றிருக்கிறது.

இந்த சூழலில்தான் ஷார்ஜாவில் 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் சேஸ் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் டாஸ் வென்றதும் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். டெல்லி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்க, நீண்ட நாட்களாக பென்ச்சிலேயே இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வருண் ஆரோனுக்கும், ஆண்ட்ரு டை-க்கும் வாய்ப்பளித்தது ராஜஸ்தான். வருண் ஆரோன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச்களில் களமிறக்கப்படவேண்டியவர். ஆனால், முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஷார்ஜா பிட்ச்சில் இறக்கப்பட்டார் ஆரோன். இவர்கள் உள்ளே வந்ததால் டாம் கரணும், அங்கித் ராஜ்புத்தும் அணியில் இருந்து வெளியே போனார்கள். டாம் கரணை முழுமையான பெளலர் என சொல்லிவிடமுடியாது. அவர் பெளலிங் ஆல்ரவுண்டர். இந்த ஐபிஎல்-லிலேயே கொல்கத்தாவுக்கு எதிராக 50 ரன்கள் அடித்தவர் டாம் கரண். ஷார்ஜா பிட்ச்சில் விளையாடவேண்டிய சரியான ஆல்ரவுண்டர். ஆனால், டாம் கரணை பென்ச்சில் உட்காரவைத்தது ராஜஸ்தான்.

IPL 2020
IPL 2020

டியூ காரணமாக சேஸிங்கைத் தேர்ந்தெடுத்த ஸ்மித்தின் முடிவு சரிதானோ என்கிற சமிஞ்சைகளோடு தொடங்கியது டெல்லியின் பேட்டிங். தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் என டெல்லியின் டாப் ஆர்டர் 10 ஓவர்களுக்குள் சரிந்தது. இதில் பிரித்வி, தவானின் விக்கெட்டை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீழ்த்த, ஷ்ரேயாஸ் ஐயரை அற்புதமான டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் ஆக்கினார் ஜெய்ஸ்வால். ரிஷப் பன்ட் ஒரு சிங்கிளுக்கு அவசரப்பட்டு ஓட, ஸ்டாய்னிஸ் மறுக்க ரன் அவுட் ஆனார். நான்காவது விக்கெட்டாக பன்ட் ஆட்டமிழக்கும்போது டெல்லி 9.2 ஓவர்களில் 79 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஷார்ஜாவில் ராஜாஸ்தான் பெளலர்கள் அற்புதமாக பந்துவீசுகிறார்களே என நினைக்க ஆரம்பித்த தருணத்தில்தான் டெல்லி ரன் அடிக்க ஆரம்பித்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 39 ரன்கள் அடிக்க, ஷிம்ரான் ஹெட்மெயர் 24 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரின் ஆட்டம் மற்றும் அக்ஸர் பட்டேலின் கேமியோவால் கடைசி 10 ஓவர்களில் 97 ரன்கள் அடித்து 184 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது ராஜஸ்தான்.

#DCvRR
#DCvRR

பவர்ப்ளே ஓவர்களில் 2 ஓவர் வீசி 25 ரன்கள் கொடுத்துவிட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக வருண் ஆரோனை அதன்பிறகு ஸ்மித் பயன்படுத்தவேயில்லை. ஆனால், ஆண்ட்ரூ டை 4 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்தார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மிக சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ஷார்ஜாவில் 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதே ஒரு சாதனைதான் என்பதால் ராஜஸ்தான் பெளலர்கள் பாராட்டப்படவேண்டியவர்களே.

ஷார்ஜாவில் ஈஸியாக அடிக்கக்கூடிய டார்கெட் என்கிற கெத்தோடுதான் சேஸிங்கைத்தொடங்கியது ராஜஸ்தான். கடந்தப்போட்டியில் ஃபார்முக்கு வந்த ஜோஸ் பட்லர் சிக்ஸர்களை சிதறவிடுவார் என எதிர்பார்க்க, 3-வது ஓவரிலேயே ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். ஒன் டவுன் பேட்ஸ்மேனாக வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தார். 17 பந்துகளில் 24 ரன்கள் அடித்தவர் நார்க்கியாவின் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த சாம்சன் 5 ரன்களில் அவுட். கடைசி நான்கு போட்டிகளாக சாம்சனின் ஸ்கோர் சிங்கிள் டிஜிட்டிலேயே தொடர்கிறது. அடுத்து இளம் வீரர் லாம்ரோரும் அஷ்வினின் பந்துவீச்சில் அவுட். ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதைப்போல 36 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

#DCvRR
#DCvRR

முதல் விக்கெட்டாக பட்லர் விக்கெட் வீழ்ந்ததில் இருந்தே ராஜஸ்தானின் சேஸிங் எந்த ஒரு கட்டத்திலும் டெல்லியை அச்சுறுத்தவில்லை. தொடர்ந்து விக்கெட்கள் விழுந்துகொண்டேயிருந்தது. ரபடா 3 விக்கெட்டுகள் எடுக்க, அஷ்வினும், ஸ்டாய்னிஸும் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்கள். 138 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது ராஜஸ்தான்.

ஷார்ஜா பிட்சில் சும்மா அடித்தாலே சிக்ஸ்போய்விடும் என்கிற நினைப்பில் சேஸிங் செய்ய ஆரம்பித்ததுதான் ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணம். ரபடா, நோர்க்கியா, அஷ்வின் என மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகிறார்கள் என்பதை உணராமலேயே விளையாடி மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.

சென்னையைப்போலவே 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது ராஜஸ்தான். முதல் சுற்று முடிந்ததுமே பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டோக்ஸ்தான் இனி ராஜஸ்தானை காப்பாற்றவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு