Published:Updated:

CSK v MI: பேட்டர்களின் தப்பாலே ரன் இல்ல இப்பாலே... போராடிய தோனியும், இளம் பந்துவீச்சாளர்களும்!

CSK v MI

இன்னும் நான்கு ஓவர்கள் இருந்த நிலையில் தட்டித் தட்டி ஆடியிருந்தால்கூட இன்னும் ஒரு 20 ரன்கள் வந்திருக்கும். சென்னை அணி ஐ.பி.எல்லில் எடுக்கும் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது. முதல் குறைந்த ஸ்கோர்பட்ச ஸ்கோர் 79. அதுவும் மும்பை புண்ணியத்தில்தான்.

CSK v MI: பேட்டர்களின் தப்பாலே ரன் இல்ல இப்பாலே... போராடிய தோனியும், இளம் பந்துவீச்சாளர்களும்!

இன்னும் நான்கு ஓவர்கள் இருந்த நிலையில் தட்டித் தட்டி ஆடியிருந்தால்கூட இன்னும் ஒரு 20 ரன்கள் வந்திருக்கும். சென்னை அணி ஐ.பி.எல்லில் எடுக்கும் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது. முதல் குறைந்த ஸ்கோர்பட்ச ஸ்கோர் 79. அதுவும் மும்பை புண்ணியத்தில்தான்.

Published:Updated:
CSK v MI
ஐ.பி.எல்லில் அதிக ரசிகர்களைக் கொண்ட, அதிக கோப்பைகளை வென்ற, அதிலும் பைனலில் அதிக தடவை மோதிய இரு அணிகள் என்பதால் சென்னை - மும்பை போட்டிக்கு எப்போதுமே ஆரவாரம் அதிகமாய் இருக்கும். இந்தமுறையும் தொடரின் முதல் போட்டிக்கு முன்புவரை 'சரிவிடு பங்காளி, நாம பாகுபலியும் பல்வாள்தேவனும் மாதிரி ப்ளே ஆப் போயிட்டு மோதிக்கலாம். புதுசா வந்திருக்கிற ரெண்டு பேரை மொதல்ல போட்டுத் தள்ளுவோம்' என்றபடிதான் உள்ளே வந்தார்கள். ஆனால் காலமோ கடைசியில் மிர்ச்சி சிவாவையும் சதீஷையும் போல இரு அணிகளையும் வைத்து பாகுபலி ஸ்பூப் எடுத்துவிட்டது. தொடர் தொடங்கியதிலிருந்து இறுதிவாரம் வரை இந்த இரண்டு அணிகளும்தான் கடைசி இடங்களில் இருக்கும் என மற்ற அணிகளில் அதிதீவிர விசுவாசிகள்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
CSK v MI
CSK v MI

முதல் அணியாய் வெளியே போய்விட்டதால், , 'சும்மா போகமாட்டேன், பெட்ரோல் ஊத்தி கொளுத்திகிட்டு வந்து உன்னையும் கட்டிப்பிடிப்பேன்' என சிங்கமுத்து போலவே சுற்றிக்கொண்டிருந்தது மும்பை. கொல்கத்தா நைசாக நழுவிவிட அடுத்ததாக லிஸ்ட்டில் இருந்தது சென்னை. தொடர் முழுக்க 'சுந்தரா டிராவல்ஸ்' வினுசக்ரவர்த்தி போல போவோர் வருவோரிடமெல்லாம் அடிவாங்கிக்கொண்டிருந்தாலும் சென்னை அணியோடு மட்டும் 'நாட்டாமை' வினுசக்ரவர்த்தி போல மிரட்டும் மும்பை. இந்த வரலாறெல்லாம் ஞாபகம் வர, ஜெயித்தால் மட்டுமே ப்ளே ஆப் கனவு என்கிற ரியாலிட்டியும் பிரஷர் ஏற்ற பல்லைக் கடித்தபடி காத்திருந்தார்கள் ரசிகர்கள்.

களத்தில் டாஸ் போட தாமதமாக மேட்ச் அபிஷியல்களும் இரு கேப்டன்களும் சீரியஸாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அது என்ன என்பது முதல் ஓவரிலேயே தெரிந்தது. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. வான்கடேயில் இந்தத் தொடரில் இதுவரை ஆடப்பட்ட 12 ஆட்டங்களில் ஏழில் முதலில் பவுலிங் செய்த அணிகளே வென்றிருக்கிறன. ஆனால் ஏழுக்கு ஐந்து என்பது பெரிய வித்தியாசமில்லை என்பதால் சென்னை அணி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எதிர்பார்த்தபடியே பொல்லார்ட் வெளியே உட்காரவைக்கப்பட, உள்ளே வந்தார் தென்னாப்பிரிக்காவின் இளம் சென்சேஷன் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ். முருகன் அஸ்வினுக்கு பதில் ஹ்ர்திக் செளகீன். சென்னை அணியிலும் இப்படியெல்லாம் மாற்றங்கள் செய்யலாம்தான். ஆனால் ஏலத்தில் எடுத்தவர்கள் எல்லாம் பேயிங் கெஸ்ட் போல இரண்டு நாள்கள், மூன்று நாள்கள் என தங்கிவிட்டு மட்டும்போக, இப்போது இருப்பதே 11 பேர்தான் என்கிற நிலையில் எங்கிருந்து மாற்றங்கள் செய்வது?

படுமொக்கையாக இருந்த மும்பையின் பவுலிங்கை தொடரின் இறுதிக்கட்டத்தில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் பும்ராவும் டேனியல் சாம்ஸும். முதல் ஓவரை சாம்ஸ் வீச, இரண்டாவது பந்து ஸ்டம்ப் லைனில் பிட்ச்சாகி கான்வே பேடில் பட்டது. 'அட இது எல்.பி.டபிள்யூ கிடையாதே' என ஸ்டேடியத்தை ரோட்டில் கடந்து சென்றவர்கள் வரை எல்லாருக்கும் தெரிந்தது, அம்பயரைத் தவிர. வேகவேகமாக அவுட் கொடுத்தார். 'என்னது' என அதிர்ச்சியான ரசிகர்களுக்கு அடுத்தும் அதிர்ச்சி. டிஆர்எஸ் இல்லை. ரிவ்யூ இல்லாததால் கான்வே வேறுவழியே இல்லாமல் நடையைக் கட்ட, பார்த்தவர்கள் அனைவருமே உச் கொட்டினர். இத்தனைக்கும் ரோஹித்தே போய் அம்பயரிடம், 'கண்டிப்பா அவங்க ரிவ்யூ எடுக்கமுடியாதா?' எனக் கேட்டார்.

கரன்ட் இல்லாததால் டிஆர்எஸ் இல்லை, ஹாக் ஐ வேலை செய்யவில்லை என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டன. இப்படி இந்தத் தொடரில் நடப்பது இது இரண்டாவது முறை. அனேகமாய் நாளை மகாராஷ்டிரா மின்துறை அமைச்சர் அணில் மீதோ காகம் மீதோ இதற்கான பழியைப் போடக்கூடும். ஓவரின் நான்காவது பந்தில் சாம்ஸ் ஷார்ட் பாலை வீச அது தன்னை நோக்கி வரும்வரை 'ப்ளைட் டிக்கெட் எத்தனாம்தேதி போடலாம்?' என யோசித்தபடி இருந்தார் மொயீன். 'சரி நைட்டே கிளம்பிடுவோம்' என நினைத்தார் போல. சட்டென தொட்டுவிட அழகாய் செளகீனின் கையில் தஞ்சம் புகுந்தது பந்து.

CSK v MI
CSK v MI

அடுத்த ஓவரில் பும்ரா வீசிய அருமையான ஸ்விங் பாலில் உத்தப்பா எல்.பி.டபிள்யூ. 'ச்சே... இப்போ டிஆர்எஸ் மட்டும் இருந்திருக்கணும்' என உத்தப்பா கறுவ, 'டிஆர்எஸ் எடுத்தாலும் இது அவுட்டுதான். சத்தமில்லாம வந்து உட்காரவும்' என கையில் எழுதிக் காட்டினார் கோச் ப்ளெமிங். ராயுடுவும் கெயிக்வாட்டும் பொறுமையாக ஆடக்கூடியவர்கள் என்பதால் சென்னை ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அதிலும் கிணற்றுத்தண்ணியை வாளியில் மோண்டு ஊற்றினார் சாம்ஸ். ப்ளிக் ஷாட் அடிக்க முயன்ற ருத்துவை ஏமாற்றி எட்ஜாகி இஷானிடம் சரணடைந்தது பந்து.

'ஹை எல்லாருக்கும் விக்கெட் விழுகுது' என ஆசையாய் மெரிடித் ஓடிவர, 'பாவம் பச்சமண்ணு, ஏமாந்து போயிடுவான்ல' என அவுட்டாகி வெளியேறினார் ராயுடு. ஸ்கோர் 29/5 பவர்ப்ளே முடிவில். ஏழாவது ஓவரில் விக்கெட் இல்லை. 'ஏதே விக்கெட் இல்லாம இந்த மேட்ச்சுல ஒரு ஓவரா? இன்னொருதடவை இந்தத் தப்பு நடக்கக்கூடாது' என எட்டாவது ஓவரில் ஊப்பர்கட் அடிப்பதாய் போக்கு காட்டி அவுட்டானார் ஷிவம் தூபே. 4*50 மீட்டர் ரிலே ரேஸ் போல பேட்டை மற்றும் மாற்றி மாற்றிவிட்டு பேட்ஸ்மேன்கள் போய்க்கொண்டே இருக்க, மறுமுனையில் கடுப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார் தோனி. விளைவு, 1746-வது முறையாக பிரஷர் அவர் தலையில்.

CSK v MI
CSK v MI

கார்த்திகேயாவின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் ஸ்டைலாய். ஹ்ரித்திக் வீசிய முதல் ஓவரில் அழகாய் நடந்து வந்து லெக் சைடில் ஒரு சிக்ஸ் என அத்தனையையும் மறந்து ரசிகர்களை கொண்டாட வைத்தார். அவரைப் போலவே பிராவோவும் இறங்கி வந்து இழுக்க சிக்ஸ். டாஸாகி வந்த அடுத்தப் பந்தை தன் ஸ்டைலில் ஆப் சைட் பக்கம் சுற்றினார் ப்ராவோ. அதை கப்பென பிடித்தார் திலக் வர்மா. ஸ்கோர் 78/7. 'ஐயோ இருங்க ஸ்கோரர். அவசரப்பட்டு ஸ்கோர் போட்றாதீங்க' என வந்தவேகத்தில் சிமர்ஜித்தும் கிளம்பினார். 'சரி நீ மட்டும் ஏன் சும்மா இருக்க?' என ரோஹித் ரமன்தீப்பை கூட்டிவர, 'வா வா, உன்னை ட்ரைவ் அடிக்கிறேன்' என காத்திருந்து அடித்து ரோஹித்திடம் கேட்ச் கொடுத்தார் தீக்‌ஷனா. அந்தப்பக்கம் இருந்து முறைத்த தோனியை, 'ட்ரைவ் அடிக்கிறேன்னுதான் சொன்னேன். அதுல அவுட்டாக மாட்டேன்னு சொன்னேனா?' என புலம்பிவிட்டு நடையைக் கட்டினார்.

CSK v MI
CSK v MI

முகேஷ் சவுத்ரிக்கு எட்ஜில் பட்டு பவுண்டரி வர ஒருவழியாய் நகர்ந்தது ஸ்கோர். அதன்பின் இன்னும் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து மேட்ச்சை உயிர்ப்பாக வைத்திருந்தார் தோனி. ஸ்கோர் 97/9 15.5 ஓவர்கள் முடிவில். கடைசி பந்தில் பை ரன் ஓடிவர தோனி முயல கீப்பர் கிஷன் கரெக்ட்டாக ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார். முகேஷ் ரன் அவுட். 97 ரன்களுக்கு சென்னை ஆல் அவுட். இன்னும் நான்கு ஓவர்கள் இருந்த நிலையில் தட்டித் தட்டி ஆடியிருந்தால்கூட இன்னும் ஒரு 20 ரன்கள் வந்திருக்கும். சென்னை அணி ஐ.பி.எல்லில் எடுக்கும் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது. முதல் குறைந்த ஸ்கோர்பட்ச ஸ்கோர் 79. அதுவும் மும்பை புண்ணியத்தில்தான்.

சப்பையாய் ஜெயித்துவிடும் மும்பை என்றுதான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்றார்போல இரண்டாவது பந்திலேயே பவுண்டரி தட்டினார் இஷான். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் முகேஷின் பந்து சூப்பராய் அவுட் ஸ்விங் ஆக கிஷனின் பேட்டில் பட்டு தோனியிடம் கேட்ச் போனது பந்து. 'சரி லோ ஸ்கோர் மேட்ச்தானே' என டேனியல் சாம்ஸை ஒன் டவுனில் இறக்கினார்கள். அந்த கேப்பில் அடுத்தடுத்து நான்கு பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை ஏற்றினார் ரோஹித். சிமர்ஜித் வந்து ரோஹித்தையும் எட்ஜாக்க தோனி அதையும் கேட்ச் ஆக்கினார்.

CSK v MI
CSK v MI

அடுத்த ஓவரில் முகேஷ் வீசிய ஸ்விங்கில் சாம்ஸ் எல்.பி.டபிள்யூ. இப்போது டிஆர்எஸ் வேலை செய்கிறது என சொல்லப்பட்டதால் ரிவ்யூ எடுத்தார்கள். அதிலும் அவுட்! தன் முதல் போட்டியில் இறங்கிய ட்ரிஸ்டனையும் அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ ஆக்கினார் முகேஷ். ரோஹித், பட்லர் வரிசையில் ஐ.பி.எல்லில் தன் போட்டியிலேயே டக் அவுட்டான பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் ட்ரிஸ்டன். ஸ்கோர் 5 ஓவர் முடிவில் 34/4. செளகீனும் திலக் வர்மாவும் களத்தில் இருந்தார்கள். சிமர்ஜித் வீசிய அடுத்த ஓவரில் செளகீனைத் தாண்டி லெக் சைடில் பந்து செல்ல, முதலில் வைட் காண்பிக்க வந்த அம்பயர் அடுத்து அவுட் காண்பித்தார். 'இதென்ன புது டிசைனா இருக்கு?' என மும்பை ரிவ்யூ எடுக்க நாட் அவுட்.

CSK v MI
CSK v MI

பந்தைக் கணிக்கவும் ஆபத்தான முகேஷை ஒப்பேற்றவும் இருவரும் நேரம் எடுத்துக்கொண்டார்கள். அதனால் அடுத்த சில ஓவர்கள் ரன்களும் பெரிதாய் இல்லை, விக்கெட்டும் இல்லை. ஓவருக்கு ஒரு பவுண்டரி போவதை மட்டும் உறுதிபடுத்திக்கொண்டார்கள். ப்ராவோ வீசிய ஒன்பதாவது ஓவரில் ஒன்பது ரன்கள். தீக்‌ஷனா வீசிய பத்தாவது ஓவரில் 11 ரன்கள் வர கிட்டத்தட்ட வெற்றி உறுதியானது. கடைசியாய் பவுலிங் சேஞ்ச் என தோனி மொயினைக் கொண்டுவர செளகீன் மட்டும் பலியாகி வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் பலகோடி ரூபாய் கொடுத்து எடுத்த பாவத்திற்கு அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடிக்க, ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று சென்னையில் ப்ளே ஆப் கனவுக்கு ஷட்டரை சாத்திவிட்டது மும்பை. ஆட்டநாயகன் டேனியல் சாம்ஸ்.

துவண்டு போயிருந்த மும்பை அணிக்கு பரமவைரிகளை ஜெயித்த இந்த மகிழ்ச்சி கொஞ்சம் ஆறுதல். ஆனாலும் டிஆர்எஸ் இருந்திருந்தால் முடிவுகளில் மாற்றம் இருந்திருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. போட்டியின் சில நிமிடங்களுக்கு மட்டும் டிஆர்எஸ் கிடையாதென்பது ஏதோ ஒரு அணிக்கு எப்படியும் பாதகம்தான் எனும் நிலையில் சமநிலை காக்க, இதில் ஐ.பி.எல் நிர்வாகம் முடிவெடுத்தே ஆகவேண்டும். Fairplay எல்லாம் கொடுக்கத் தெரிந்தவர்களுக்கு இதுதான் Fairplay வாக இருக்கமுடியும்.

CSK v MI
CSK v MI

மறுபக்கம் ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது மட்டுமல்ல சென்னை முகாமில் இருக்கும் பிரச்னை. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தது, கேப்டன்ஷிப் குழப்பங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக நிர்வாகத்திற்கும் ஜடேஜாவிற்கும் இப்போது மோதல் எனப் பரவும் தகவல்கள் என ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள். தோனிக்காகவே உருவாகி தோனிக்காகவே வளர்ந்து இன்றும் தோனிக்காகவே வார்க்கப்படும் அணி இது. இத்தனை நாள்களாய் பலமாய் இருந்த தோனி பேக்டர் இனி எப்படி இருக்கப்போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அடுத்த சீசனில் பங்கேற்பது குறித்து இன்னமும் தோனி எதுவும் சொல்லியிராத நிலையில் இத்தனைக் குழப்பங்களுக்கும் சேர்த்து விடைதேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சி.எஸ்.கே நிர்வாகம். 'நீங்கள் நீங்களாகவே இருங்கள் என வீரர்களிடம் சொன்னேன்' என ஆட்டம் முடிந்தபின் சொன்னார் தோனி.

தோனி ப்ளேயிங் லெவனில் இல்லையென்றால் சிஎஸ்கே சிஎஸ்கேவாக இருக்குமா என்பதைப் பார்க்கவாவது டைம் மெஷின் கண்டுபிடிக்கவேண்டும் போல. கூடவே கோடிக்கணக்கான இதயங்கள் எதிர்பார்க்கும் 'அடுத்த சீசனும் தோனி ஆடுகிறார்' என்கிற அந்த உத்தரவாதத்திற்காகவும்தான்!