Published:Updated:

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு வெறித்தன CSK ரசிகை... ட்விட்டர் சண்டைகளும், சுவாரஸ்யங்களும்!

Kate Cross & Alexandra Hartley
Kate Cross & Alexandra Hartley

தமிழ்ப்புத்தாண்டு அன்று, ‘இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என்று தமிழிலேயே ட்வீட் செய்த கேட் கிராஸ், நேற்றைய போட்டிக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க என்று தங்கிலீஷில் ட்வீட் செய்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்படும் வெளிநாட்டு கிரிக்கெட்டர்களோ இல்லை, வடநாட்டு வீரர்களோ தமிழில் அல்லது தங்கிலீஷில் ட்வீட்டுவது உலக நியதி. 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' தாஹிர் தொடங்கி, பஞ்சாப்காரர் ஹர்பஜன் வரை ரசிகர்களை உற்சாகப்படுத்த அடிக்கடி தமிழில் ட்வீட் செய்வார்கள். இன்று எல்லைகள் கடந்து, இங்கிலாந்தில் இருந்தும் தங்கிலீஷில் #CSK-வை ஆதரித்து ஒரு ட்வீட் வந்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் போடச்சொல்லி நேற்று ட்வீட்டியிருக்கிறார், யெல்லோ ஆர்மியின் வெறித்தன ரசிகையான இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை கேட் கிராஸ்.

இங்கிலாந்து மகளிர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேட் கிராஸ் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிதீவிர ரசிகை. சி.எஸ்கே ஆடும்போதெல்லாம் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். நம்ம ஊர் சென்னை ரசிகர்களைப் போல்தான் அவரும்! தோனியின் 'கடினச் சாவு ரசிகை' (டை ஹார்ட் ஃபேனாம்). அதனால், கிட்டத்தட்ட சென்னைவாசியாகவே மாறிவிட்டார்.

தமிழ்ப்புத்தாண்டு அன்று, ‘இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என்று தமிழிலேயே ட்வீட் செய்த கிராஸ், நேற்றைய போட்டிக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க என்று தங்கிலீஷில் ட்வீட் செய்திருக்கிறார்.

கேட் கிராஸை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களுக்கு அவர் சாதாரண ரசிகை இல்லை என்பது தெரியும். நம்மைப்போல் நண்பர்களோடு #IPL சண்டைப்போடும் ஆள்தான் அவர். தன் அணியின் சக வீராங்கனையான அலெக்சாண்ட்ரா ஹார்ட்லி ஆர்சிபி ரசிகை. இதுபோதாதா அடித்துக்கொள்ள!

ஐபிஎல் தொடங்கிவிட்டால் இருவருக்குமான ட்விட்டர் யுத்தமும் தொடங்கிவிடும். இருவரும் மாறி மாறி கலாய்த்துக்கொள்வது சாதாரணமாக நடக்கும். ஆர்சிபி அணியின் கடந்த காலம், நிகழ்காலம் எல்லாமே கலாய்ப்பதற்குத் தோதாக அமைந்துவிடுவதால், கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஹார்ட்லியை வறுத்தெடுத்துவிடுவார் கிராஸ்.

கடந்த ஐபிஎல் தொடரில் குவாலிஃபபையரில் சன்ரைசர்ஸிடம் தோற்று வெளியேறியது ஆர்சிபி. அப்போது, “எப்போது கோப்பை வெல்வீர்கள்” என்று ஆதங்கத்தோடு ட்வீட் செய்திருந்தார் ஹார்ட்லி. உடனே, அப்போது டிரெண்டாகிக்கொண்டிருந்த தோனியின் ‘Definitely Not’ வீடியோவை அதற்கு ரிப்ளையாக போட்டு ஹார்ட்லியை மேலும் புண்ணாக்கினார் கிராஸ். இது வெறும் உதாரணம்தான்.

கடந்த போட்டியில் சிஎஸ்கே வென்றதற்கு ஹார்ட்லி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு “ஞானம் கிடைப்பதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. இதோ ஹார்ட்லியை மாற்றிவிட்டேன்” என்று அவரை வம்பிழுத்தார் கிராஸ். இப்படி எந்நேரமும் ரகளையாகத்தான் இருக்கும்.

ஹார்ட்லியும் கலாய்ப்பதில் சளைத்தவர் அல்ல. ஒருமுறை ரசிகர் ஒருவர், “நீங்கள் இருவரும் டேட் செய்கிறீர்களா” என்று ட்விட்டரில் கேட்க, “சிஎஸ்கே ரசிகர் ஒருவரைப் போய் டேட் செய்துவிடுவேனா” என்று நக்கலாக பதிலளித்தார்.

இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால் இதை கூலாக எடுத்துக்கொள்கிறார்கள். போக, இருவரும் இணைந்து No Balls: The Cricket Proadcast என்ற பெயரில் ஷோ நடத்துகிறார்கள். இப்போதுதான் இந்த சீசன் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதால், நிச்சயம் இவர்கள் ட்விட்டர் யுத்தம் களைகட்டும்.

Alexandra Hartley & Kate Cross
Alexandra Hartley & Kate Cross

மிதவேகப்பந்துவீச்சாளரான கேட் கிராஸ் கடந்த 8 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு ஆடிவருகிறார். இதுவரை 3 டெஸ்ட், 28 ஒருநாள், 13 டி20 என 44 சர்வதேச போட்டிகளில் விளையடியிருக்கிறார். இடதுகை ஸ்பின்னரான ஹார்ட்லி, 28 ஒருநாள் போட்டிகளிலும், 4 டி20 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு