Published:Updated:

தொடரும் கிரிக்கெட் வீரரின் துயரம்... தம்பியின் தற்கொலையை அடுத்து தந்தையும் கொரோனாவுக்கு பலி!

சேத்தன் சக்காரியா
சேத்தன் சக்காரியா

கடந்த சீசனில் நடராஜன் எப்படி பெரிய சென்சேஷனாக உருவெடுத்தாரோ அதுபோலவே இந்த சீசனில் சக்காரியா ஒரு சென்சேஷனாக உருவாகிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் கொரோனா காரணமாக ஐபிஎல் தடைபட்டது. சக்காரியாவின் தந்தையும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் உயிர்பலி அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை போலவே பல கிரிக்கெட்டர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்திய மகளிரணி வீரரான வேதா கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய தாயையும் சகோதரியையும் கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளார். இந்த துயரம் அடங்குவதற்குள்ளாகவே இன்னொரு கிரிக்கெட்டரின் வாழ்விலும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியாவின் தந்தையும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்.

குஜராத்தின் வார்தேஜ் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர்தான் சேத்தன் சக்காரியா. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடியிருந்த சக்காரியா 31 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்த சீசனில் இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சென்னைக்கு எதிரான போட்டியில் தோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தி தனித்துவமிக்க பெளலராக உருமாறியிருந்தார். எப்படி கடந்த சீசனில் நடராஜன் பெரிய சென்சேஷனாக உருவெடுத்தாரோ அதுபோலவே இந்த சீசனில் சக்காரியா ஒரு சென்சேஷனாக உருவாகிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் கொரோனா காரணமாக ஐபிஎல் தடைபட்டது. சக்காரியாவின் தந்தையும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களில் சக்காரியா சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய இழப்பு இது. இந்தாண்டு பிப்ரவரியில் சையத் முஷ்தாக் அலி தொடரில் ஆடிக்கொண்டிருந்த போது சக்காரியாவின் தம்பி தற்கொலை செய்துகொண்டார். தம்பி இறந்த செய்தியை சக்காரியாவிடம் அவருடைய அம்மா தெரியப்படுத்தாமலே இருந்தார். சக்காரியா சையத் முஷ்தாக் அலி தொடரில் ஆடி முடித்தப்பிறகே தம்பி இறந்த செய்தி சக்காரியாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

சேத்தன் சக்காரியா
சேத்தன் சக்காரியா

''நாங்கள் சந்தித்த துயரங்களும், வலி வேதனைகளும் இன்னொருவருக்கு வரக்கூடாது என நினைக்கிறோம். என்னுடைய கணவர் லாரி டிரைவர். மூன்று பெரிய விபத்துகளில் சிக்கி படுத்தபடுக்கையாக இருக்கிறார். என்னுடைய இரண்டாவது மகன், அதாவது சேத்தன் சக்காரியாவின் தம்பி சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனான். அப்போது சேத்தன், சையது முஷ்தாக் அலி தொடரில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறப்பாகப் பந்து வீசிக்கொண்டிருந்த சக்காரியாவிடம் தம்பி இறந்தது குறித்து நாங்கள் 10 நாட்களுக்கு சொல்லவேயில்லை. தம்பி இறந்தது தெரிந்தால் சக்காரியாவால் சரியாக விளையாடமுடியாது என்பதால் மறைத்துவிட்டோம்.

ஒவ்வொருமுறையும் சேத்தன் போனில் அழைக்கும்போது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டும் சொல்லிவந்தேன். தம்பியிடம் பேசவேண்டும் என்று அவன் சொல்லும்போது நான் பேச்சை வேறுபக்கம் திருப்பிவிடுவேன். அவனுடைய அப்பாவையும் அவனோடு பேசவைக்கவில்லை. உண்மையை அப்பா சொல்லிவிடுவார் என்கிற பயம் எனக்கு இருந்தது. ஆனால், ஒருநாள் அவன் போனில் பேசும்போது நான் உடைந்து அழுதுவிட்டேன். தம்பி இறந்ததகவல் தெரிந்ததும் சேத்தன் யாரோடும் ஒருவாரம் பேசவேயில்லை. சாப்பிடவும் இல்லை. அண்ணனும் தம்பியும் அவ்வளவு நெருக்கமாக இருப்பார்கள்.

இந்த துயர சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்துதான், ஐபிஎல் ஏலத்தில் 1.20 கோடிக்கு சக்காரியா ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டான். ஏதோ கனவுபோல இருந்தது. ஒருநாள் உணவுக்காக நாங்கள் படாதபாடுபட்டவர்கள்!'' என சக்காரியாவின் தாயான வர்ஷாபென் சில நாட்களுக்கு முன் கொடுத்த பேட்டி பலரையும் கலங்க வைத்திருந்தது.

இந்நிலையில்தான் சமீபத்தில் சக்காரியாவின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ''பலரும் ஐபிஎல் போட்டிகளை நிறுத்த சொன்னார்கள். ஆனால், ஐபிஎல் மூலம் வந்த வருவாயின் மூலமே நான் என்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அப்பாவுடைய சிகிச்சைகளுக்கும் அந்த பணத்தையே செலவழித்துக் கொண்டிருக்கிறேன்'' என இரண்டு நாட்களுக்கு முன்பாக சக்காரியாவும் பேட்டி கொடுத்திருந்தார்.

சேத்தன் சக்காரியா
சேத்தன் சக்காரியா

ஆனால், தீவிர சிகிச்சைகளுக்குப்பிறகும் கூட சக்காரியாவின் தந்தையான கன்ஜிபாயை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. கொடூரமான கொரோனா கிருமிக்கு சக்காரியாவின் தந்தையும் இரையானார்.

சக்காரியா இந்த சோகமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வர தங்களால் இயன்ற அத்தனை உதவிகளையையும் செய்வதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

தாங்கமுடியாத சோகத்தினால் நொறுங்கி போயிருக்கும் சக்காரியா சீக்கிரமே மீண்டு வந்து சிறப்பாக ஆடி இந்திய அணியின் ஜெர்சியையும் விரைவில் அணிய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்!

அடுத்த கட்டுரைக்கு