Published:Updated:

சிஎஸ்கே ரசிகர்களுக்கு சூப்பர் சண்டே... இதயத்துடிப்பை எகிற வைத்த த்ரில்லரில் நடந்தது என்ன? | IPL 2021

CSK v KKR | IPL 2021

ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைப்பது, சிஎஸ்கே போட்டிகளில் வழக்கமானதென்றாலும், இப்போட்டி இதயத் துடிப்பையும் சற்றே நிறுத்தியது என்பதே உண்மை.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு சூப்பர் சண்டே... இதயத்துடிப்பை எகிற வைத்த த்ரில்லரில் நடந்தது என்ன? | IPL 2021

ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைப்பது, சிஎஸ்கே போட்டிகளில் வழக்கமானதென்றாலும், இப்போட்டி இதயத் துடிப்பையும் சற்றே நிறுத்தியது என்பதே உண்மை.

Published:Updated:
CSK v KKR | IPL 2021
பௌலிங்கில் தாக்கூர் கட்டம் கட்டி ரசலைத் தூக்க, பேட்டிங்கில் ஜடேஜா சூப்பர்மேனாகச் செயல்பட, இந்நாள் சூப்பர் சண்டே ஆனது சிஎஸ்கே ரசிகர்களுக்கு!

இந்த சீசனின் இரண்டாவது பாதியில், இதுவரை தோல்வியையே தழுவாத இரு அணிகளான சிஎஸ்கேயும் கேகேஆரும் மோதின. டாஸ் வென்ற மோர்கன், டிஃபெண்ட் செய்ய முடிவெடுத்தார். மாற்றமின்றி கேகேஆர் களமிறங்க, சிஎஸ்கே சாம் கரண் உள்ளே, பிராவோ வெளியே என்றது.

இரண்டு ஸ்லிப்களோடு அட்டாக்கை ஆரம்பித்தார் தோனி. கில், வெங்கடேஷை ஓவர்டேக் செய்யும் மனநிலையில், ஸ்ட்ரெய்டில், கவரில் என இரண்டு பவுண்டரிகளை சஹாரின் ஓவரில் பறக்கவிட, ஸ்டம்ப் லைனில் பந்தைவீசி அவரை அடுத்த பந்தில் சஹார் திணறடித்தார். அது எல்பிடபிள்யூ என கள அம்பயரால் சொல்லப்பட்டு, பின் ரிவ்யூவில் தப்பினார் கில்.

CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், அதற்கடுத்த பந்திலேயே, அடித்த பந்தின் போக்கையே கவனிக்காது ரன்னெடுக்க அவர் ஓட, வெங்கடேஷ் தயங்க, அதை கில் கவனித்து தன் இடத்துக்குத் திரும்புவதற்குள் அம்பதி ராயுடு, பந்தை எறிந்து ஸ்டம்பைக் காலி செய்தார். அப்போது கோட்டிற்கு பல மைல்கள் அப்பால் இருந்தார் கில். பவர்பிளே ஓவர்களுக்குள் ஆட்டமிழக்கும் அவரது சோகம் தொடர்ந்தது. திரிபாதி, வெங்கடேஷுடன் இணைந்தார்.

அடுத்த நான்கு ஓவர்கள், களத்தில் பல நாடகக் காட்சிகள் அரங்கேறின. பந்து எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகாமல் மீடியம் பேஸ் பௌலர்களைச் சற்றே சோதித்தது. இதனால், சஹார் ஒரு ஸ்லோ பால் மூலம் வெங்கடேஷுக்குக் குறிவைக்க, பந்து டாப் எட்ஜானது. டு ப்ளஸ்ஸிஸ் அதைப் பிடிக்க டைவ் அடிக்க, அவருக்குச் சற்று முன்னதாகவே தரையைத் தொட்டது பந்து.

CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

அடுத்த ஓவரில், சாம் கரண் வீசிய பந்தில் திரிபாதி அப்பர் கட் ஆட முயல, அது தோனியைச் சேர, ஒட்டுமொத்த சிஎஸ்கே வட்டாரமும் கூடிக் கும்மாளமிட்டது. அம்பயரோ, தலைக்கு மேலே பந்து போனதெனச் சொல்லி, தேர்ட் அம்பயரிடம் சந்தேகத்தைத் தீர்த்து, 'ஹைட் நோபால்' என ஃப்ரீ ஹிட் தந்து, கேகேஆர் வயிற்றில் பால் ஸ்வீட்ஸ் அத்தனையையும் வார்த்தார். வெங்கடேஷும் உற்சாகமாகி, தேர்ட் மேனின் பக்கம் இரண்டு பவுண்டரிகளை அடித்து சிஎஸ்கேவை நிரம்பவே சோதிக்க, 5 ஓவரில் 50 ரன்களைத் தொட்டு விட்டது கேகேஆர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விக்கெட் வரம் வேண்டுமென தோனி, லார்ட் தாக்கூரை இறக்க, சாலச் சிறந்த சம்பவம் செய்தார் தாக்கூர். அவுட் ஸ்விங்கர்களின் ஆண்டவரான அவர், வீசிய முதல் பந்தையே அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீச, அது எட்ஜாகி கீப்பர் கேட்சாகி வெங்கடேஷை வெளியேற்றியது. வீசிய அந்த முதல் ஓவரை அதுவும் பவர்பிளே ஓவரையே விக்கெட் மெய்டனாக்கி அற்புதமாக ஆரம்பித்தார் தாக்கூர்.

CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

அதற்கடுத்த சில ஓவர்கள், தாக்கூர் மற்றும் ஜடேஜாவை வீச வைத்தார் தோனி. பிட்சும் படு ஸ்லோவானது. இடையில் தரப்பட்ட ஓவரில் ஹேசில்வுட், மோர்கனைக் காலி செய்தார். டு ப்ளஸ்ஸில் எல்லையில் பிடித்த அந்த ஒரு கேட்சுக்காகவே, இன்னும் ஆண்டுக்கணக்கில் அவரை ஆக்ஷனில் எடுக்கலாம். துடிப்போடு இருந்தது சிஎஸ்கே ஃபீல்டிங்.

மூன்று விக்கெட்டுகள் விழுந்தாலும், திரிபாதி மட்டும் தாக்குப் பிடித்து ஆட்டங்காட்டினார். முடிவில், ஜடேஜாவின் பந்தை அவர் ரிவர்ஸ் ஹிட் செய்ய முயல, அது ஸ்டம்பைத் தகர்த்து அரைசதத்துக்கு ஐந்து ரன்கள் குறைவாக அவரை அனுப்பியது. முதல் ஐந்து ஓவர்களில், 50 ரன்களைக் குவித்திருந்த கேகேஆரை அடுத்த எட்டு ஓவர்களில் வெறும் 54 ரன்களை மட்டுமே சேர்க்க விட்டிருந்தது சிஎஸ்கே.

CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

எனினும் 170-க்கு மேல்தான் இலக்கு என கேகேஆர் டேவிட் ஹசி கருத்துத் தெரிவிக்க, அதை உண்மையாக்கும் உத்வேகத்தோடு இணைந்தனர் ராணாவும், ரசலும். ஆனால், பிட்சும் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே?! ஸ்லோ பிட்ச் சோதிக்க, இன்னொரு பக்கம், ஏபிடிக்கு ரசல் வீசியது போன்ற யார்க்கரை வீசி மிரட்டினார் சஹார். யார்க்கர், ஸ்லோ பால்கள், ஷார்ட் பால் என வரிசைகட்டி அனுப்பி திணறடித்தார். ஆனால், இந்தப் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது தாக்கூர்தான். போட்டியின் 100-வது பந்தில் ரசல் ஆட்டமிழக்க, கேகேஆரை செட்டில் ஆகவே விடாமல் அடித்தது சிஎஸ்கே.

டெத் ஓவர் டெவில் ரசல் போனதை எண்ணி மகிழ்ந்த சிஎஸ்கேவை, அவுட் ஆஃப் சிலபஸாக வந்த தினேஷ் கார்த்திக் சிறப்பாகக் கவனித்தார். சாம் கரண் வீசிய 19-வது ஓவரில் வந்து சேர்ந்த 19 ரன்களில் 17 ரன்களை தினேஷே அடித்தார். அவரது கேமியோ, 26 ரன்களோடு முடிவை எட்டியிருக்க, இறுதியாக 171 ரன்களோடு ஹசி சொன்னதை உண்மையாக்கி இருந்தது கேகேஆர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில் சற்றே நழுவிய போட்டியின் லகானை இறுகப் பற்றிய சிஎஸ்கே, இறுதியில் அதனை மொத்தமாக விட்டுவிட்டது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 44 ரன்கள் வந்திருந்தன. சாம் கரண், 14 எக்கானமியோடு ஏமாற்றிவிட்டார்.
CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

172 ரன்கள் இந்தப் பிட்சில் கடினம்தான் எனினும், சிஎஸ்கேவின் நீண்ட நெடிய பேட்டிங் லைன் அப்பும், கேகேஆரின் அரட்டும் பௌலிங் லைன்அப்பும், போட்டிக்கான திரைக்கதையில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என முன்கூட்டியே கணிக்க வைத்தது. அதோடு பவர்பிளே ஓவர்கள்தான் ஒட்டுமொத்தத்தையும் முடிவு செய்யும் என்பதும் கண்கூடாகவே தெரிந்தது. முதல் ஓவரை ஸ்பின்னோடு தொடங்கிய பாணியை மாற்றி மோர்கன், பிரஷித்தோடு தொடங்கினார். டு ப்ளஸ்ஸிஸ் - கெய்க்வாட் இணை, முதல் மூன்று ஓவர்கள் தங்களை நிலைநிறுத்த எடுத்துக் கொள்ள, ரன்ரேட் 6-ஐ சுற்றியே வட்டமிட்டது. எனினும் மூன்றாவது ஓவரிலேயே, டு பிளஸ்ஸிஸ் தனது அட்டாக்கை ஆரம்பித்திருக்க, பேக் டு த ஸ்பின் என மாறினார் மோர்கன்.

நான்காவது ஓவரில் வருண் வர, ரன்னும் வரத் தொடங்க, ராக்கெட்டில் ஏறத் தொடங்கியது ரன்ரேட். அந்த ஓவரில் டு பிளஸ்ஸிஸ் அடித்த கவர் டிரைவ் எல்லாம் கண்களைப் பறித்தது. எக்கானமிக்கல் பௌலர் நரைனையும் கெய்க்வாட் சிறப்பாக சிக்ஸரோடு சிறப்பிக்க, வேகப்பந்து வீச்சாளர்களிடம் சொல்லி, கட்டர்களையாவது வீச வைப்போமா என ரவுண்ட் மைதான கான்ஃபரன்ஸ் நடத்தினார் மோர்கன்.

CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

பவர்பிளேக்கு பவர் சேர்த்த இவர்கள், விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் என சிஎஸ்கேவுக்குத் தேவையான தொடக்கத்தைத் கொடுத்தனர். 500 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஒரே சீசனில் கடந்த நான்காவது சிஎஸ்கே இணை என்னும் சாதனையும் அவர்களைச் சேர, சுலபமாக கேகேஆரைக் கலங்கடித்தனர்.

விக்கெட் மட்டுமே வெற்றிக்கான வழியென, ரசலிடம் கேகேஆர் புகலிடம் தேட, லாங் ஆஃபில் அவரது பந்தைக் காணாமல் போகச் செய்தார் கெய்க்வாட். அணை கட்ட இயலா காட்டாறாக வெகுண்டு, வெடிகுண்டாக ஆடிக் கொண்டிருந்த கெய்க்வாட், ரசல் வீசிய அடுத்த பந்திலேயே 40 ரன்களோடு ஆட்டமிழந்தார். இன்னொரு பக்கம், ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த போது, ரத்தம் சொட்டுமளவு காயமேற்பட்டதையும் பொருட்படுத்தாமல் ஆடிக் கொண்டிருந்த டு ப்ளஸ்ஸிஸையும், பவுண்டரி லைனில் பிடிக்கப்பட்ட கேட்ச் வெளியேற்றியது.

எனினும், 13-வது ஓவரின் முடிவில் 42 பந்துகளில், 60 ரன்கள் தேவை என இலக்கை எளியதாக்கித்தான் சென்றிருந்தனர் ஓப்பனர்கள். எனினும் இழந்த அந்த இரு விக்கெட்டுகள் கேகேஆரை ரிதத்தைக் கண்டறிய வைத்தது. அது அம்பதி ராயுடுவின் விக்கெட்டையும் எடுக்க வைக்க, புதிதாக இணைந்த மொயின் அலி - ரெய்னா கூட்டணிதான் எல்லாவற்றையும் முடிவு செய்யப் போவதாகப் பார்க்கப்பட்டது. இந்தக் கட்டத்தில் கேகேஆரின் பந்து வீச்சும் மிகக் கட்டுக்கோப்பாக மாற ஆரம்பித்தது. வெங்கடேஷ் ஒரு ஓவரில், ஐந்து ரன்களை மட்டுமே கொடுத்து சவால்விட, அடுத்த ஓவரிலேயே ஃபெர்கூசனின் ஸ்லோ பாலில், புல் ஷாட் ஆட முயன்று மொயின் அலி 32 ரன்களோடு வெளியேறினார். தனக்குச் சார்பாக எல்லாவற்றையும் மாற்றத் தொடங்கியது கேகேஆர்.

CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

முதலில் இறக்காமல் இதற்காகத்தான் வைத்திருந்தேன் என்பது போல், 18-வது ஓவரில் இறக்கப்பட்ட வருணின் ஓவரில் ரெய்னா ரன் அவுட்டாக, ஒரு பந்து இடைவெளியில் ராங் அன்னைக் கணிக்கத் தவறிய தோனி, அதற்கான விலையாக மிடில் ஸ்டம்பைக் கொடுத்தார். இதே முறையில் வருணின் பந்தில் தோனி போல்ட் ஆவது இது 3-வது முறை. வருண் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து, போட்டியை அங்கிருந்தே கேகேஆர் வெல்லத் தொடங்கியதான தோற்றத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

இரு ஓவர்களில், 26 ரன்கள் தேவை என்ற நிலையில், சமன்பாடு கடினமானதாகத் தோன்ற, "நான் இருப்பதை மறந்து விட்டீர்களா?!" என முளைத்து வந்த ஜடேஜா, பிரஷித் வீசிய ஷார்ட் பால்கள் மற்றும் வைட் புல் டாஸ் பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகளை வரிசையாக அடிக்க, 22 ரன்கள் வந்து மொத்தப் போட்டியும் சிஎஸ்கே பக்கம் திரும்பிவிட்டது.

CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

ஒரு ஓவர், நான்கு ரன்கள் தேவை எனும் நிலையில் நரைன் கையில் வந்த பந்து, கடந்த போட்டியில் நரைனின் எக்கானமி 4 என்பது நினைவில் வர வைத்து, போட்டி கடுமையானதாக இருக்கும் என நினைவூட்டியது. நினைத்ததைப் போலவே எல்லாம் நடந்தது. சிங்கிள் தட்டி, ஜடேஜாவின் கையில் ஸ்ட்ரைக்கைத் தராமல், பவுண்டரி அடிக்கிறேன் என ஆட்டமிழந்து வெளியேறிய சுட்டிக் குழந்தை சாம், அழுத்தத்தை அதிகரித்தார். தாக்கூர் இரண்டாவது பந்தை டாட் பாலாக்கி, மூன்றாவது பந்தில் மூன்று ரன்கள் சேர்க்க, ஸ்கோர் லெவல். மூன்று பந்தில் ஒரு ரன் தேவை, என சிஎஸ்கேவுக்கு சாதகமான கோட்டில் போட்டி பயணித்தது. ஆனால், அடுத்த பந்து டாட் பாலாக, ஐந்தாவது பந்தில் ஜடேஜா எல்பிடபிள்யூவாக, போட்டி சூப்பர் ஓவரில் முடிவடையுமா என ரசிகர்களின் பதற்றம் பலமடங்காகக் கூடியது. சஹார் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து, சூப்பர் ஓவர் என்னும் பிபி மாத்திரை, சிஎஸ்கே ரசிகர்களுக்குத் தேவையில்லை என இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார்.

CSK v KKR | IPL 2021
CSK v KKR | IPL 2021

இறுதிப் பந்து வரை போட்டி நகர, அட்டகாசமான திருப்பு முனைகளோடு, "சிஎஸ்கேவுக்கு சுபம்" என சண்டே பிளாக் பஸ்டர் மூவி முடிவுக்கு வர, திரை மூடப்பட்டது. கேகேஆரும் சண்டே என்பதால் சண்டை செய்தே தோற்றிருந்தது.

இந்த வெற்றியின் முலம் சிஎஸ்கே, பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பை மிகவும் நெருங்கிவிட்டது, இன்னும் ஒரு வெற்றி சிஎஸ்கேவை பிளே ஆஃப் என்னும் சிம்மாசனத்தில் அமரவைக்கும்! அது அடுத்த போட்டியாகக் கூட இருக்கலாம் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism