Published:Updated:

டாப் கியரில், பிரமாதமான பிக் அப்பில் சீறும் CSK…வார்னரின் படையை வீழ்த்தப்போகும் தோனியின் வியூகங்கள்?

"அவன் மிடில் ஸ்டம்பல போட்டாலும் ஆஃப்சைடுல அடிக்கிறான். கொஞ்சம் லெக் ஸ்டம்ப்ல போடு" என மகி சொல்ல, ஜட்டு செய்ய, மேக்ஸ்வெல் நடையைக் கட்டுகிறார். "ஸ்டம்ப் டு ஸ்டம்ப் போடாதே, லெக்சைடு போடு, மீதியை ஸ்பின் பார்த்துக் கொள்ளும்!" - ஏபி டிவில்லியர்ஸை வீழ்த்துவதற்கான வியூகம் இது.

2020 சீசனில் துருப்பிடித்த இன்ஜினின் அத்தனை பாகங்களின் பழுதையும் நீக்கியதோடு, புத்தம்புது சூப்பர் பைக்காய் டாப் கியரில், பிரமாதமான பிக்அப்பில் சீறுகிறது சிஎஸ்கே. நேற்று, RCB பிடித்த முதலிடத்தை, திரும்பப் பறித்துக்கொள்ளும் வாய்ப்பு, அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே CSK-விற்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது! இன்றைய #CSKvSRH போட்டி எப்படி இருக்கும், வெற்றிக்கதையைத் தொடர்ந்து எழுதுமா சிஎஸ்கே?!

இழுபறியற்ற ஏகாதிபத்தியம்!

சிஎஸ்கே - சன்ரைசர்ஸுக்கு இடையேயான மோதலில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிஎஸ்கேயின் கையே ஓங்கியிருந்து வந்துள்ளது. 2018-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில், கோப்பையை, அவர்களிடமிருந்து தட்டிப் பறித்தது உட்பட, மோதிய 14 போட்டிகளில், 10 போட்டிகளில், சிஎஸ்கேயே வென்றுள்ளது. கடந்த ஆண்டு, நடைபெற்ற இரண்டு போட்டிகளில், ஒன்றில் சிஎஸ்கேவும், ஒன்றில் சன்ரைசர்ஸும் வென்றுள்ளன.

கைகொடுக்குமா களம்?!

தனது முதல் சுற்றுப் போட்டிகளை, மும்பையில் முடித்திருக்கும் சிஎஸ்கே, அடுத்த நான்கு போட்டிகளை, டெல்லியில் ஆடுகிறது. ஹை ஸ்கோரிங் கேம்களை ஆடிவந்த சிஎஸ்கேவுக்கு, டெல்லியின் ஸ்லோ பிட்சுகள் சவாலானதாக விளங்கலாம். அதே நேரத்தில், இயல்பில் சென்னை சேப்பாக்கத்தை சற்றே ஒத்திருக்கும், டெல்லி மைதானம் சுழலுக்கும் கைகொடுக்கும். அதனால், சிஎஸ்கே அதற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு, இதனையே தங்களது இரண்டாவது ஹோம் கிரவுண்டாக மாற்றலாம். அதே நேரத்தில், இங்கே டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் ஆடியுள்ள ஏழு போட்டிகளில், ஐந்தில் சிஎஸ்கேவே வென்றுள்ளதென்ற புள்ளிவிவரமும் அவர்களது தன்னம்பிக்கையை ஏறுமுகம் காண வைக்கின்றது.

தோனி
தோனி

முடக்கப்பட்ட தொடக்கம்!

முதல் மூன்று போட்டிகளில் முடங்கிப் போயிருந்த சிஎஸ்கேவின் தொடக்கவீரர்கள், அடுத்தடுத்து வந்த போட்டிகளில், ஆக்ரசிவாக ஆட ஆரம்பித்து விட்டனர். முதல் மூன்று போட்டிகளில், கெய்க்வாட்டும் டுபிளஸ்ஸியும், இணைந்து எடுத்த பார்ட்னர்ஷிப் ரன்களின் சராசரி, வெறும் 18.6 மட்டுமே. அதுவே, கடைசி இரண்டு போட்டிகளில், 94.5 ஆக அபாரமாக அதிகரித்திருந்தது. இரண்டு ஓப்பனர்களுமே, ஃபார்முக்குத் திரும்பி இருப்பது, அணியின் பலத்தைப் பலமடங்காக்கி உள்ளது.

பலமான பேட்டிங் வரிசை!

நடப்புத் தொடரில், இதுவரை, 180-க்கும் அதிகமான ஸ்கோரை, விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு சந்தர்ப்பங்களில் சிஎஸ்கே எடுத்துள்ளது. டெல்லி, ஆர்சிபி உள்ளிட்ட அணிகள், இதனை இரண்டுமுறை செய்திருந்தன. மும்பை மைதானம் கைகொடுத்ததால் மட்டுமே, இது நடந்ததென ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், சென்னை பங்கேற்காமல், மும்பையில் நடைபெற்ற போட்டிகளில் 133 போன்ற குறைவான ஸ்கோரை, கொல்கத்தாவும் அடித்திருக்கிறது, அதேபோல், பஞ்சாப்பை சிஎஸ்கே 106 ரன்னுக்கும் சுருட்டியிருக்கிறது என்பதால், சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மற்ற அணிகளைவிட சற்றே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதே உண்மை. அவர்களது நீண்ட பேட்டிங் வரிசை, அவர்களுக்கு மிகச்சாதகமாகப் பார்க்கப்படுகிறது. இவர் அவரென்றில்லாமல், எல்லோரும் பங்காற்ற, ரன்கள் எப்படியாவது வந்து விடுகின்றன. எனினும், ரெய்னா மற்றும் அம்பதி ராயுடுவிடம் இருந்தும் இன்னும் சிறப்பான ஆட்டம் சிஎஸ்கேவுக்குத் தேவைப்படுகிறது.

ஜடேஜா ஜாலம்!

கடந்த போட்டியில், தனது முப்பரிமாணத்தையும், மொத்தமாய் காட்டி, ஜாலம் செய்தார் ஜடேஜா. ஏன் அவர் உலக ஆல்ரவுண்டர்கள் வரிசையில், சிறந்த வீரராக உள்ளார் என்பதற்கும் டெமோ கிளாஸ் எடுத்துவிட்டுச் சென்றார். நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள் வரிசையில், சாம் கரண் முதலிடத்திலும், ரவீந்திர ஜடேஜா இரண்டாமிடத்திலும் இருப்பது, சிஎஸ்கே பேட்டிங் செய்யும் இறுதி ஓவர்களில், அவர்களுக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பேட்டிங் பவர்ப்ளே ஓவர்களை, ஓப்பனர்கள் அதிரடியால் கவனிக்க, டெத் ஓவர்களில், இவ்விருவரும் கைவரிசை காட்டினால், எதிரணியை திக்குமுக்காட வைக்கலாம். எக்ஸ் ஃபேக்டர்களாக, இந்த இருவரும் உருவெடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோனி ரிட்டன்ஸ்!

"அவன் மிடில் ஸ்டம்ப்ல போட்டாலும் ஆஃப்சைடுல அடிக்கிறான். கொஞ்சம் லெக் ஸ்டம்ப்ல போடு" என மகி சொல்ல, ஜட்டு செய்ய, மேக்ஸ்வெல் நடையைக் கட்டுகிறார். "ஸ்டம்ப் டு ஸ்டம்ப் போடாதே, லெக்சைடு போடு, மீதியை ஸ்பின் பார்த்துக் கொள்ளும்!" - ஏபி டிவில்லியர்ஸை வீழ்த்துவதற்கான வியூகம் இது. இதையெல்லாம், ஸ்டம்புக்குப் பின்னாலிருந்து, இந்தியில் சொல்லிக் கொண்டிருந்த தோனி, ஹர்ஷல பட்டேலுக்கு, "இப்ப நான் இந்தில பேச முடியாது" எனச் சொன்னதுதான் உச்சகட்டம். கணத்திற்கு கணம், விளையாட்டின் போக்கைப் பொறுத்து, ஆட்ட நுணுக்கங்களை, மூளைக்குள் கணக்கிட்டு, வியூகங்களை வகுத்து, பௌலர்கள் எனும் காய்களை நகர்த்தி, வெற்றியைத் தன் மகுடமாக்கும் அந்த தோனியைத்தான், சிஎஸ்கே கடந்த தொடரில், தேடி அலைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் வீழ்த்த, கட்டுப்படுத்த, புதுப்புது ஃபீல்டிங் செட்டப்பை அவர்களுக்கேற்றாற்போல் செய்யும் தோனி, புது உற்சாகத்தோடு திரும்ப வந்திருப்பதுதான், அணிக்கான மிகப்பெரிய பலமாக இருக்கிறது. இவருடன், ஃபினிஷர் தோனியையும், அவர் வெளியே கொண்டு வந்து விட்டாரெனில், எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக சிஎஸ்கே மாறிவிடும்.

சாம் கரண்
சாம் கரண்

எல்லா ஏரியாவும் எங்களுடையதே!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில், அவர்கள் திரும்பி அடிப்பதற்கான வாய்ப்பை, இடைவெளியை, சிஎஸ்கே தரவே இல்லை. எல்லாப் பக்கமிருந்தும் தாக்கிக் கொண்டே இருந்தது. அதற்கு முந்தைய போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளர்களால் கிடைத்த வெற்றியை, தங்களது சுழலால் சாத்தியமாக்கினர். அதேபோல், மிஸ் ஃபீல்ட், கேட்ச் டிராப் போன்றவை நேராதவாறு பார்த்துக் கொண்டது, சிஎஸ்கே. ஜடேஜாவின் பிசிறில்லா ஃபீல்டிங் மாயங்களை பிசகில்லாமல் மற்ற வீரர்களும் செய்து காட்டி வருகின்றனர். ஸ்கொயர் லெக்கிலிருந்து, ஜாமிசனுக்கு எதிராக தாஹிர் செய்த ரன்அவுட்டெல்லாம், வேறு லெவல் வித்தை.

ஏன் எழவில்லை சன்ரைஸர்ஸ்!

தாங்கள் தோற்ற அத்தனை போட்டிகளிலும் 10, 6, 13,1 என மிகமிக

சொற்ப ரன்களிலேயே வெற்றியை தாரைவார்த்திருக்கிறது சன்ரைசர்ஸ்.

சன்ரைசர்ஸின் சறுக்கலுக்கான பல காரணங்களில் சில இங்கே!

* காயத்தால் கேன் வில்லியம்சன் மிஸ் செய்த போட்டிகள், அவரை மிஸ் செய்தன.

* வார்னரின் கேப்டன்ஷிப் குறைபாடுகள்!

* மத்திய வரிசை இந்திய வீரர்களின் சொதப்பல் ஆட்டம்!

* நடராஜன் மற்றும் புவனேஷ்வர் இல்லாமல் போனது.

* ரஷித் கானைத் தவிர்த்து மற்ற பௌலர்களின் பந்துவீச்சு எடுபடாமல் போனது!

ஜானி பேர்ஸ்டோ
ஜானி பேர்ஸ்டோ

சிஎஸ்கேவுக்குக் காத்திருக்கும் சவால்கள்!

புவனேஷ்வர் காயத்திலிருந்து மீண்டுவந்து, அணியில் இணைந்தால், சிஎஸ்கேவுக்கு, அவர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அதேபோல், பேர்ஸ்டோ மற்றும் வில்லியம்சனும் கண்டிப்பாக விட்டுக் கொடுக்காது போராடுவார்கள் என்பதால், அவ்வளவு சுலபமாகப் பணிந்து விடாது சன்ரைசர்ஸ். விராத் சிங்கிற்கு பதில், மணீஷ் பாண்டே கொண்டு வரப்படும் பட்சத்தில், மிடில்ஆர்டர் பிரச்னையை ஓரளவு சமாளிக்கும் சன்ரைசர்ஸ். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் களத்தில் நடைபெறும் முதல் போட்டி என்பதாலும், மைதானம் கட்டவிழ்க்கக் காத்திருக்கும் ஆச்சரியங்களும் ஏராளமாய் இருக்குமென்பதாலும், இந்த முதல் போட்டி, இருபக்கத்திற்கும் கடினமானதாகவே இருக்கும்.

2014-ஆம் ஆண்டுக்குப்பின், ஐபிஎல் பயணத்தில், நான்கிற்கும் மேற்பட்ட போட்டிகளில், சிஎஸ்கே, தொடர்ந்து வென்றதே இல்லை. அதை மாற்றும் ஒரு சந்தர்ப்பமாக இப்போட்டி மாறுமா அல்லது வார்னரின் படை மீண்டெழுந்து தாக்குமா… பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு