Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021: CSK ஓப்பனர் யார், ஃபினிஷர் யார்... தோனியை சமாளிப்பாரா சஞ்சு சாம்சன்?! #CSKvRR Preview

#CSKvRR
#CSKvRR

சிஎஸ்கே கடந்த ஆண்டு தோல்விமுகம் கண்டதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாய் சொல்லப்பட்டது, பவர்ப்ளே ஓவர்களில் சாதிக்கத் தவறியது. அதே தவறு இன்னமும் தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஐபிஎல் அணிகளின் நம்பர் 1, நம்பர் 2 ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. பங்குச் சந்தையைப்போல் அணிகள் புள்ளிப் பட்டியலில் ஏறுவதும் இறங்குவதுமாக, பரமபதம் ஆடிக் கொண்டிருக்கும் இன்று சஞ்சு சாம்சனின் #RR அணியை சந்திக்கிறது தோனியின் #CSK.

தொடரைத் தோல்வியோடு தொடங்கியிருந்தாலும், கடந்த போட்டியில், கிடைத்த வெற்றியினால், ஊக்கம் மிகுந்தே காணப்படுகின்றன இரு தரப்பும். இந்த இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 24 போட்டிகளில், 14/10 என்ற கணக்கில் சிஎஸ்கேயின் கையே ஓங்கியுள்ளது‌.

டாஸ் முக்கியம் ப்ரோ!

இந்த சீசனில், இதுவரை வான்கடேவில் நடந்துள்ள ஐந்து போட்டிகளிலும், டாஸ் வென்ற கேப்டன்கள் பாகுபாடேயின்றி, பௌலிங்கைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், அதில் நான்கில் வெற்றியும் கண்டுள்ளது சேஸிங் செய்த அணி. பஞ்சாபுக்கு எதிரான ராஜஸ்தானின் போட்டி மட்டுமே விதிவிலக்கு. அதிலும் கடைசிப் பந்துவரை போட்டி சென்றது என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் கண்ணை மூடிக் கொண்டு பௌலிங்கைத்தான் தேர்ந்தெடுப்பார்.

ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்
ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்

பேட்டிங் பவர்ப்ளே ஓவர்கள்!

சிஎஸ்கே கடந்த ஆண்டு தோல்விமுகம் கண்டதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாய் சொல்லப்பட்டது, பவர்ப்ளே ஓவர்களில் சாதிக்கத் தவறியது. அதே தவறு இன்னமும் தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளில், சிஎஸ்கேவின் பவர்ப்ளே ரன்களின் சராசரி, வெறும் 32.5 மட்டுமே. இது ராஜஸ்தானின் பக்கம், 43 ஆக உள்ளது. நல்ல தொடக்கத்தை சென்னை ஓப்பனர்கள் தராமல் போக, அது பின்வரிசை வீரர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சென்ற சீசனில் தீப்பறக்கவைத்த கெய்க்வாட், இம்முறை தொடர்ந்து ஏமாற்றமே அளிக்கிறார். எனினும் முதல் போட்டியில் சோபிக்காத டுப்ளெஸ்ஸி ஃபார்முக்குத் திரும்பியிருப்பது, சிஎஸ்கேவுக்கு பலம் சேர்க்கிறது.

மொயின் அலி மேஜிக்ஸ்!

இந்த சீசனில் சிஎஸ்கேவுடன் இணைந்த மொயின் அலி அணிக்குப் பெரும்பலமாக மாறியிருக்கிறார். 82 ரன்களை இரண்டு போட்டிகளில் எடுத்துள்ள அவரது ஸ்ட்ரைக்ரேட்டும் 149.09 என கிட்டத்தட்ட மேக்ஸ்வெல்லுக்குச் சமமாக உள்ளது. ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, 8.3 என்னும் கௌரவமான எக்கானமியுடன் நம்பிக்கை அளிக்கும் வீரராகவும் திகழ்கிறார். இன்றைய போட்டியிலும், டாப் ஆர்டரில், அவர் வலுசேர்ப்பார் என நம்பலாம்‌.

பட்டையைக் கிளப்பும் பௌலிங்!

ஹேசில்வுட்டின் கடைசி நிமிட விலகல் சிஎஸ்கேவின் பௌலிங் யூனிட்டை மொத்தமாக பலவீனப்படுத்திவிட, வேறு வீரர்களைச் சேர்க்க முடியாமல் போனதுற்குமான விலையை சிஎஸ்கே கொடுக்க இருப்பதற்கான சமிஞ்கை டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெளிப்பட்டது. தாக்கூர், பிராவோ முறையே, இரண்டு மற்றும் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க, தாக்கூர், சாம்கரண் என எல்லோருடைய எக்கானமியும் பத்தைத் தாண்டி பயமுறுத்தியது. சிஎஸ்கேவின் வீழ்ச்சியின் ஆரம்பமாக இது இருக்கப் போகிறதென ஆருடங்கள் சொல்லப்பட்ட நிலையில், பஞ்சாப்புக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே, வேறுவடிவம் எடுத்து வந்திருந்தனர், சிஎஸ்கே பௌலர்கள்.

மொயின் அலி
மொயின் அலி

குறிப்பாக தீபக் சஹார் அசத்தலாகப் பந்து வீசி, நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்ததுடன், நம்ப முடியாத வகையில், 3.2 எனும் எக்கானமியோடு, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தாக்கூரைத் தவிர்த்து மற்ற பௌலர்களின் எக்கானமியும், 6-க்குக் கீழேயே இருந்தது, விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விழச் செய்தது என கனகச்சிதமாகச் செயலாற்றினர் சிஎஸ்கே பௌலர்கள்‌‌. இன்றைய போட்டியிலும், இது தொடரும் பட்சத்தில் வெற்றிநடை போடலாம். எனினும், ராஜஸ்தானின் பக்கம், சாம்சன், மாரிஸ், மில்லர், திவேதியா என போட்டிக்கு ஒரு மேட்ச் வின்னர்கள் புறப்பட்டு வருவார்கள் என்பதால், ஓய்ந்து உட்காராது, தொடர்ந்து விக்கெட் வேட்டைக்குத் தயாராக இருக்க வேண்டும்.

ஃபினிஷர் யார்?

சிஎஸ்கே முதலில் விளையாடிய போட்டியில், இலக்கை தானே நிர்ணயித்தது. இரண்டாவது போட்டியிலோ, குறைவான ஸ்கோரை சேஸ் செய்தது. இந்நிலையில், ஒருவேளை சிஎஸ்கே டாஸை வென்று, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்து, ராஜஸ்தானின் பிக் ஹிட்டர்கள், ஸ்கோரை 200க்கும் அதிகமாக எடுத்துச் சென்று விட்டால், அதை சிஎஸ்கே வெற்றிகரமாகச் சேஸ் செய்து விடுமா என்பது விடை தெரியாத கேள்வியே. ஒரு கிக் ஸ்டார்ட்டை ஓப்பனர்கள் அமைத்தே கொடுத்தாலும், அதனை வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்திச் செல்லும் ஃபினிஷர் யார் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. பழைய வின்டேஜ் தோனியைத் தேடிக் கொண்டிருக்கும் சிஎஸ்கே, ஜடேஜா மற்றும் சாம் கரணையே இறுதியில் நம்புகிறது. ஜடேஜாவிற்கு இது சாத்தியமே என்றாலும், சாம் கரண், கடந்த இந்தியா இங்கிலாந்து தொடரில் நடந்ததைப் போல, இறுதிவரை நின்று ஆடினாலே, பெரிய ஸ்கோரை சேஸ் செய்வதைப் பற்றி சிஎஸ்கே கனவாவது காண முடியும்.

ராஜஸ்தானின் பௌலிங்!

ராஜஸ்தானைப் பொறுத்தவரை, கடந்தாண்டுக்கு இந்த வருடம், பௌலிங்கில் முன்னேற்றம் அடைந்துள்ளது. முதல் போட்டியிலேயே சகாரியா சாதித்தார் என்றால், இரண்டாவது போட்டியில், உனத்கட், 2017-ல் புனேக்காக ஆடிய பழைய உனத்கட்டாக மறுஜென்மம் எடுத்து வந்துள்ளார். இந்த இருவரும் தங்களது முழுத் திறமையைக் காட்டி களமிறங்கும் பட்சத்தில், அது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். முதல் போட்டியில், 8 பௌலர்களை முயன்றிருந்த சாம்சன், இரண்டாவது போட்டியில், 6 பௌலர்களை வைத்தே வெற்றியைச் சுவைத்திருந்தார். அதுவும் மாரிஸும், முஸ்தாஃபைசுரும் மேலும் பலம் சேர்ப்பதால், முதலில் சிஎஸ்கே பேட்டிங் செய்யும் பட்சத்தில், இந்த பௌலிங் படையை முழுவதுமாகச் சமாளிப்பது சற்று சவாலானதே!

ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

விக்கெட் கீப்பர் கேப்டன்கள்!

அனுபவம் வெர்ஸஸ் இளமைத்துடிப்பு என இரண்டு பக்கங்களும் இரண்டு துருவங்களாக உள்ள கேப்டன்கள் வழிநடத்துகிறார்கள். இதில், எந்த மாதிரியான தந்திரங்களை தோனி கையாள்வார், அதற்கு பதிலடி கொடுப்பாரா சாம்சன் என்பதெல்லாம், போட்டியின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

ப்ளே ஆஃப் யுத்தத்துக்கான உஷ்ணம் இன்னமும் முழுவதுமாக உணரப்படாத நிலையில், தொடக்க நிலைப் போட்டிகளில், அழுத்தம் இன்றி ஆடி, வெற்றியையும் புள்ளிகளையும் கையகப்படுத்துவதன் மூலம், தொடரில் முன்னிலை வகிக்கலாம் என்பதால், போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது!

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு