Ipl-2021 banner
Published:Updated:

மஞ்சனத்தி CSK உடம்புக்குள்ள என்ன வந்து பூந்துச்சோ... கொல்கத்தா பவர் ஹிட்டர்களைப் பந்தாடுமா தோனி&கோ?

CSK - தோனி - ரெய்னா
CSK - தோனி - ரெய்னா

வான்கடேவின் நீள அகலங்களை, சிஎஸ்கே அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து வைத்துள்ளது. 58.4 ஓவர்களை, இந்த சீசனில் இங்கே வீசியுள்ள சிஎஸ்கே பௌலர்களுக்கு அது கூடுதல் பலமே!

ஹாட்ரிக் வெற்றியை நோக்கியுள்ள #CSK-வும், ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்த்துவிடப் போராடும் KKR- அணியும் மும்பை வான்கடேவில் இன்று சந்திக்கின்றன. ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இன்று இரண்டு போட்டிகள் நடக்க இருந்தாலும், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு சற்று தூக்கலாகவே உள்ளது. மஞ்சள் படை இன்று என்ன செய்யும், என்ன செய்யலாம?!

சிஎஸ்கேவும் கேகேஆரும், இதுவரை, ஐபிஎல் சாம்பியன்ஸ் லீக் டிராபி உட்பட மொத்தம் 25 போட்டிகளில் மோதிக் கொண்டுள்ளன. அதில், 15 முறை சிஎஸ்கே வென்றிருக்க, 9 முறை மட்டுமே, கேகேஆர் வென்றுள்ளது. ஒருபோட்டி, முடிவின்றி முற்றுப்பெற்றது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த இருஅணிகளுக்குள்ளும் நடைபெற்றுள்ள போட்டிகளில் ஆறில், நான்கில் சிஎஸ்கே-வே வென்றுள்ளது.

கள நிலவரம்!

சென்னை மைதானத்தில், மூன்று போட்டிகளில் விளையாடி முடித்துள்ள கேகேஆர், இந்தத்தொடரில் முதன்முறையாக, வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. களம் மாறுவது, காட்சிகளை மாற்றும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருப்பினும், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, கேகேஆரின் முந்தைய செயல்பாடுகள் எவ்வளவு மோசமோ, அதைவிடப் படுமோசமாக உள்ளது வான்கடவில் அவர்களது வெற்றி விழுக்காடு. இங்கே நடைபெற்றுள்ள ஒன்பது போட்டிகளில், ஒன்றில் மட்டுமே, கேகேஆர் வென்றுள்ளது. அதேசமயம், இந்த சீசனில், சிஎஸ்கே மூன்று போட்டிகளில், இங்கே ஏற்கனவே விளையாடியிருப்பதால், வான்கடேவின் நீள அகலங்களை, சிஎஸ்கே அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து வைத்துள்ளது. 58.4 ஓவர்களை, இந்த சீசனில் இங்கே வீசியுள்ள சிஎஸ்கே பௌலர்களுக்கு அது கூடுதல் பலமே!

மொயின் அலி
மொயின் அலி

ஆரஞ்சுக் கேப்பின் நிறமென்ன?!

சிஎஸ்கே நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த இரண்டிலுமே, 188 ரன்களை எடுத்திருந்தது. இது மிகப்பெரிய ஸ்கோராகத் தெரிந்தாலும், உண்மையில், 220 ரன்கள் வரை, எளிதாக எடுக்க முடியுமென்ற நிலையில், அதற்கான சூழ்நிலைகள் இருந்த போதும், 190-குக் கீழ் சுருண்டது, அணியின் பேட்டிங் குறைபாடையே காட்டுகிறது. தாக்கூர் வரை பேட்டிங் லைன் அப், சீனப்பெருஞ்சுவராய் நீள்வதால், ஆளுக்குக் கொஞ்சமாய் எடுத்துத் தந்து, ஸ்கோரை கௌரவமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார்களே ஒழிய, நம்பத்தகுந்த பேட்ஸ்மேனாக ஓரிருவரைத்தான் அடையாளம் காட்ட முடிகிறது.

இதுவரை அணி அடித்துள்ள மொத்த ஸ்கோரில், 22% மொயின் அலியின் பேட்டிலிருந்து வந்தவையே. ஒரு அரைசதத்தை மட்டுமே சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் ஒருவராய், ரெய்னா அடித்திருக்கிறார். இந்தத் தருணம் வரை, சிஎஸ்கே பேட்ஸ்மேன் ஒருவரின், அதிகபட்ச ஸ்கோரும்(54) இதுவாகவே இருக்கிறது.

தொடரில் அதிக ரன்களைச் சேர்த்திருக்கும் வீரர்கள் பட்டியலில், டாப் 10-ல், ஒரு சிஎஸ்கே வீரர்கூட இல்லை. கடந்த போட்டியில், முதல் ஐந்து வீரர்கள், இரட்டை இலக்கத்தை அடைந்ததையே, பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்குத்தான், சிஸ்கேவன் ஒட்டுமொத்த பேட்டிங்கும் இருக்கிறது. இது, மும்பை, டல்லி போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்கையில், மிகப்பெரிய நெருக்கடிக்கு இட்டுச் செல்லலாம். குறிப்பாக, பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும் போது, இந்தப் பிரச்னை பூதாகரமாக மாறலாம். கேகேஆருக்கு எதிரான போட்டியிலேயே, அதைச் சரிசெய்ய சிஎஸ்கே முயல வேண்டும்.

பேட்டிங் பவர்ப்ளே, டெத் ஓவர்கள்!

இந்த சீசனிலும், பவரில்லா பேட்டிங் பவர்பளே ஓவர்களைத்தான் சிஎஸ்கே இன்னிங்ஸ்கள், சந்தித்து வருகின்றன. இதுவரை நடந்துள்ள போட்டிகளில், சிஎஸ்கேவின், பேட்டிங் பவர்ப்ளே ரன்ரேட் சராசரி வெறும் 6.16 மட்டுமே. மேலும், அவர்களது, இன்னிங்ஸ்களின், கடைசி ஐந்து ஓவர்களின், ரன்ரேட்டின் சராசரி, 10.33. இது, டேபிள் டாப்பராக, அமர்க்களப்படுத்தி வரும் ஆர்சிபியின் பக்கம், முறையே 7.7 மற்றும் 12.46 ஆக மரட்டுகிறது.

இவ்வளவுக்கும், சிஎஸ்கே பேட்டிங் செய்திருப்பது, ஃபிளாட் பிட்சான வான்கடேயில், ஆர்சிபியோ ரன்சேர்க்கக் கடினமான, சென்னையில். இதிலெல்லாம் என்ன பெரிதாக மாறிவிடப் போகிறது என புறந்தள்ள முடியாது. சாம்பியன் கனவைக் காண்பதற்கான அனுமதிச்சீட்டான, பளேஆஃப் பயணத்தில், இவை எல்லாமே முக்கியத்துவம் பெறும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய சிஎஸ்கே முதலில் கவனம் செலுத்த வேண்டியது, முன்வரிசை, பின்வரிசை வீரர்கள் மீதே!

CSK
CSK

ப்ரஷரில் கெய்க்வாட்!

கடந்த சீசனில், தோனி கேட்ட தீப்பொறியை, தனக்குள் தீப்பிழம்பாய்க் காட்டிய கெய்க்வாட், இந்த சீசனில் ஒளியிழந்து, இழந்த நம்பிக்கையைத் தேடிக் கொண்டிருக்கிறார். இத்தொடரில், மூன்று போட்டிகளில், 20 ரன்களை மட்டுமே சேர்த்துள்ள கெய்க்வாட்டின் ஃபார்மால், சிஎஸ்கேவின் ஓப்பனிங் சுத்தமாகச் சரியில்லாமல் போகிறது. கெய்க்வாட், கெய்க்watt ஆக மாறி, பவர் ஏற்றினால் மட்டுமே, பவர்ப்ளே ஓவர்களில் பொறி பறக்கும். இந்த சீசனின் கேதார் ஜாதவ் பார்ட் - 2 ஆக, இவர் மாறும்முன், ஓரிரு போட்டிகளில் உத்தப்பாவுக்கோ, ஜெகதீசனுக்கோ வாய்ப்புத் தரலாம். எனினும் மாற்றம் கொண்டுவர விரும்பாத தோனியின் கொள்கையும், "கெய்க்வாட் நல்ல வீரர், அவருக்குச் சற்று காலம் தேவைப்படுகிறது" எனும் ஃப்ளமிங்கின் கருத்தும், தோனியின், 'டெஃபனிட்லி நாட்!' டெம்ப்ளேட்டைத்தான் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. ஆயினும், இதற்கு விலையாக, பல போட்டிகளை எதிரணியிடம் எடுத்துக்கொடுத்து விடக் கூடாதென்பதே, ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

கேப்டன் இங்கே, பேட்ஸ்மேன் எங்கே?!

முதல் போட்டியில், காணப்படாத கேப்டன் கூல் தோனி, அடுத்தடுத்த போட்டிகளில் திரும்பக் காணக்கிடைத்து விட்டார். கடைசிப் போட்டியில், டீப் மிட் விக்கெட்டில் ஜடேஜாவை நிறுத்தி, சாம் கரணை பந்து வீசச் செய்து, வோஹ்ராவின் விக்கெட்டைத் தூக்கியதிலிருந்து, மொயின் மற்றும் ஜடேஜாவை வைத்து ராஜஸ்தானை மண்ணைக் கவ்வ வைத்ததுவரை, கேப்டனாக ஸ்கோர் செய்து விட்டார் தோனி. ஆனால், ஃபினிஷராக, பல அணிகளுக்கே முடிவுகட்டிய அந்த பேட்டிங் ஆளுமை நிரம்பி வழியும், கண்களில் பயமற்ற, சிக்ஸர் சிங்கம், சிஎஸ்கேவுக்கு நிரம்பவே தேவைப்படுகிறது.

கடந்த போட்டியில், 17 பந்துகளில், 18 ரன்களை எடுத்திருந்தார் தோனி. அவர் அடித்திருந்த இரண்டு பவுண்டரிகளைக் கழித்துப் பார்த்தால், வெறும் 80 ஸ்ட்ரைக் ரேட்டோடே சொச்ச ரன்கள் வந்து சேர்ந்திருந்தன. டி20 ஃபார்மட்டுக்கே இது குறைவான ஸட்ரைக்ரேட் என்னும் பட்சத்தில், ஒரு ஃபினிஷருக்கு இது எவ்வளவு குறைவானதாக இருக்கும்?! இதை உடனே சரிசெய்து, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி இருக்கிறார். ஒரு பெரிய இன்னிங்ஸ் போதும், அவருக்குள் இருக்கும் அந்தத் தன்னம்பிக்கையை மீட்டெடுக்க! ரெய்னா, மொயின் அலி, சாம் கரண், ஜடேஜா ஆகியோர் அணியின் அஸ்திரமாக மாறிவரும் வேளையில் அணியின் ஆணிவேரும், அஸ்திவாரமுமான தோனி பழைய ஃபார்முக்குத் திரும்பி விட்டால், பெரிய ஸ்கோர்களை இலகுவாய் எட்டித்தொடக் கூடியதாய், சிஎஸ்கே உருமாறிவிடும்.

CSK
CSK

கேகேஆரின் கேள்விகள் ஆயிரம்!

இந்த சீசனில், எல்லோரிடமும் வீழ்ந்துள்ள சன்ரைஸர்ஸைத் தோற்கடித்ததை மட்டுமே, உச்சகட்ட சாதனையாகச் சுமந்து கொண்டுள்ளது கேகேஆர். மும்பையிடம் வாங்கிய மரண அடியிலிருந்து மீள்வதற்குள், மொத்தமாக கேகேஆரை, மண்ணைப் போட்டு மூடிவிட்டது ஆர்சிபி. கில், திரிபாதி, ராணா ஆகிய மூவரும் இணைந்து, கடந்த மூன்று போட்டிகளில், ஒட்டுமொத்தமாக அணியின் 62 சதவிகிதம் ரன்களைச் சேர்த்திருந்தனர். பிரச்னை மத்திய பின்வரிசை வீரர்களான மார்கன், ரசல், தினேஷ் கார்த்திக்கிடம்தான் இருக்கிறது. இவர்கள் மூவரும் சேர்ந்து, அணியின், 23 சதவிகித ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். அதுவும் இவர்களது, ஸ்ட்ரைக்ரேட்களின் சராசரி வெறும் 118 மட்டுமே.

அதேபோல், 5/15 என மும்பையை மிரட்டிய ரசலின் டெத்ஓவர் பௌலிங் அணிக்கு மிகுந்த நம்பிக்கையளிக்க, ஆர்சிபிக்கு எதிரான போட்டியில், ஏபிடி வில்லியர்ஸ் அதற்கு மூடுவிழா நடத்தி விட்டார்.

ரசல் தனக்கு வீசிய 12 பந்துகளை 37 ரன்களாக மாற்றி மிரட்டி விட்டார். வழக்கமாக பெரிதாய் சோபிக்கும், கேகேஆர் பௌலிங்படை, கடந்த போட்டியில், மார்கனை சோதிக்கவே செய்தது. டாப் 3 பேட்ஸ்மேன்களின் ஃபார்ம், வருணின் சிறப்பான பந்துவீச்சு இவை மட்டுமே ஓரளவு அவர்களை ஆறுதல்படுத்திக் கொண்டுள்ளது. அணியில், அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என மெக்கல்லம் சூசகமாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, அதே ப்ளேயிங் லெவனோடு, கேகேஆர் களமிறங்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

'சிஎஸ்கே பேட்டிங் வெர்ஸஸ் கேகேஆர் பௌலிங்' இதுதான் வெற்றியைத் தீர்மானிக்க உள்ளது. ஆனால், ரன் வரமளிக்கும் வான்கடே, கேகேஆர் பேட்ஸ்மேன்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் பிக் ஹிட்டர்களுக்கு சார்ஜ் ஏற்றி, பவர் ரேஞ்சர்களாக மாறச்செய்யலாம். அப்படியானால் இவர்களைச் சமாளிப்பது, சிஎஸ்கே பௌலர்களின் திறமைக்கான பரிட்சயமில்லாத பரிட்சையாக இருக்கும். இன்றைய டெஸ்ட்டிலும் வெற்றிபெற்றுவிட்டால் சிஎஸ்கேவுக்குள் நிரம்பும் பாசிட்டிவிட்டியே ப்ளே ஆஃபுக்குள் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்திவிடும்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு