கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள இருபாலருக்குமாக பயிற்சி வகுப்புகள் சென்னை, சேலம் ஆகிய இரு இடங்களில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சி.எஸ்.கே அணியின் நிர்வாக இயக்குநரான காசி விஸ்வநாதன் கூறுகையில், "கிரிக்கெட் விளையாட்டுடனான எங்களது பயணம் 50 வருடங்களுக்கும் மேலானது. இப்பயிற்சி வகுப்பைத் தொடங்குவதன் மூலம் கிரிக்கெட்டிற்கு எங்களால் முடிந்தவற்றைத் திருப்பியளிக்க எண்ணுகிறோம். எங்களின் அனுபவத்தை பகிரவும், எதிர்கால கிரிக்கெட் வீரர்களை கூர்தீட்டவும் சிறந்த களமாக இது நிச்சயம் அமையும்.
அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், சிறந்த கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுடன் அமையவுள்ள இந்த அகாடமி கிரிக்கெட் பயிற்சியில் மட்டுமல்லாமல் ஒரு முழுமையான முன்னேற்றத்திற்கும் உதவிடும்" என்று கூறினார்.
சி.எஸ்.கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தற்போது பணியில் இருப்பவர் மைக் ஹஸ்ஸி. இந்த முன்னெடுப்பு பற்றி அவர் பேசுகையில், "இது ஒரு மிக சிறந்த தொடக்கம். இப்பயிற்சி மையம் மூலம் பலரும் சென்னை அணிக்காக ஐ.பி.எல் தொடரில் நிச்சயம் விளையாடுவார்கள்" என்றார்.
மேலும் இது குறித்து பௌலிங் பயிற்சியாளராகச் செயல்பட்டு வரும் பாலாஜி கூறுகையில். "நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தப் பயிற்சி மையம் நிச்சயம் உதவிடும். சென்னை அணியை பொறுத்தவரையில் பள்ளி அளவிலான கிரிக்கெட் தொடர்களை ஏற்கெனவே நடத்தி வருகிறது. மேலும் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்காகவும் பல வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சேலத்தில் அமையவுள்ள பயிற்சி மையம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும். மிக அதிக அளவிலான திறமைகளைக் கொண்டுள்ள நாடு இந்தியா. அப்படித் திறமையாக இருப்பவர்கள் பெருநகரங்களோடு சுருங்கிவிட கூடாது என்பதற்காவே இந்த முன்னெடுப்பு" என்று கூறினார்.
சென்னையில் அமையவுள்ள பயிற்சி மையம் துரைப்பாக்கம் பகுதியிலும் சேலத்திற்கான வகுப்புகள் சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷனிலும் நடைபெறும் என தெரிகிறது.