Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021 : சஞ்சு சாம்சன்... சென்சுரியோடு தொடங்கிய ராஜஸ்தானின் பாகுபலி கோப்பையை வென்றுதருவாரா?!

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

சாம்சன் மீதிருந்த நிறைய நம்பிக்கையினால்தான் ஸ்மித் போன்ற ஒரு கைதேர்ந்த வீரர் வகித்த கேப்டன் பதவியை கொடுத்து அழகு பார்த்துள்ளது ராஜஸ்தான் நிர்வாகம். ஆனால், வெற்றிச் சூத்திரத்தில் இருக்க வேண்டிய பொருட்களில் சாம்சனிடம் காணப்படாத ஒன்றே ஒன்று 'கன்சிஸ்டன்சி'.

அடி தரும் வலியை விட பயம் தர வலிதான் பெரிது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு பயத்தை பஞ்சாபுக்கு மட்டுமல்ல, ஐபிஎல் ஆடும் அத்தனை அணிகளுக்கும் காட்டியிருக்கிறார் சஞ்சு சாம்சன். அனல்தெறிக்கும் ஆட்டத்தால், ஆடுகளத்தைச் சூடாக்கி, கேப்டன் எனும் கோலோச்சி, வான்கடே ஸ்டேடியத்தில் தன் தனி இராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார் சாம்சன்!

2013-ஆம் ஆண்டு, புதுமுகவீரராக, பஞ்சாபுக்கு எதிராக, தனது அறிமுகப் போட்டியில் ஆடிய சாம்சன், கேப்டனாக தனது முதல் போட்டியில், அதே பஞ்சாப்புக்கு எதிராகவே களம்கண்டார். எனினும், 18 வயது பாலகனாக, விளையாட்டில் வீரியம் இருந்தாலும், சற்றுத் தயக்கமும் காணப்பட்ட, அந்த பழைய சாம்சன் இப்போதில்லை. தன்னம்பிக்கை ததும்பி வழிய, போராட்டகுணம் போர்க்கொடி தூக்க, ஆட்டத்தில் நேர்த்தியும் பக்குவமும் நிரம்பியிருக்க, இந்த எட்டு வருடங்கள் அவரைப் பலவகையில் பண்படுத்தியும் மேம்படுத்தியும் இருக்கிறது‌. போட்டியின் முதல் ஓவரில் ஒன் டவுனில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், இறுதிப் பந்துவரை நின்றுஆடினார். தோல்வியைத் தவிர்க்க போராடவில்லை அவர். வெற்றியை எட்டத்தான் முட்டி மோதினார்.

அறிமுகத் தொடர்!

சாம்சன் ராஜஸ்தானுக்காக ஆடிய 2013 அறிமுகத்தொடர், ராஜஸ்தானுக்கான கீ பிளேயராக இவர் இருப்பார் என நிறைய நம்பிக்கை வெளிச்சத்தை, அவர்மீது பாய்ச்சியது. இதே பஞ்சாப்புக்கு எதிராக, அறிமுகப் போட்டியில் ஆடிய சாம்சன், அதில் ரஹானேவுடன் இணைந்து கடைசி நேர மாயம் செய்து, 23 பந்துகளில், 27 ரன்களைக் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதே ஆண்டு நடைபெற்ற இன்னொரு ராஜஸ்தான்-பஞ்சாப் போட்டியிலும், இதேஇணைதான், அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. அந்தப் போட்டியில், 33 பந்துகளில், 47 ரன்களைக் குவித்திருந்தார் சாம்சன். அந்தசீசனில், 205 ரன்களைக் குவித்திருந்த சாம்சனின் ஸ்ட்ரைக்ரேட், 115.73 ஆக இருந்தது. எனினும், சரியாகப் பட்டைதீட்டப்பட்டால், வைரமாக அவர் ஜொலிக்க வாய்ப்புள்ளது என்பதுதான் கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்தாக இருந்தது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

தோனிக்கு மாற்றுவீரர்?!

தோனி ஓய்வை நெருங்கிய காலகட்டத்தில் இருந்து, இன்றுவரை தொடரும் விவாதமான, அணியின் 'நிரந்தர விக்கெட்கீப்பர்' என்ற இடத்துக்கான ரேஸில் இவரும் பங்கேற்றார். ஒவ்வொரு போட்டியில் சாம்சன் சிறப்பான பங்காற்றும்போதும், இந்த விஷயத்தை ஒட்டியே கருத்துக்கள் எழுந்தன.

இந்திய அணியில் இடம்!

பேக்கப் விக்கெட்கீப்பர் வேண்டுமென்பதற்காகவே, பல தொடர்களில், இந்திய அணியில் இவரது பெயரும் இணைக்கப்படும். ஆனால், விளையாட வாய்ப்புக்கிடைக்கும் போட்டிகள் மிகச் சொற்பமாகவே இருந்து வந்தன. விளையாடும் அந்தப் போட்டிகளிலும், சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகளை நிகழ்த்தத் தவறுவார் சாம்சன். இதுதான், "ஸ்டோரி ஆஃப் சாம்சன்ஸ் லைஃப்" என பல்லாண்டுகளாய், தொடர்ந்து கொண்டிருக்கும் கதை.

நிலைப்புத்தன்மை இல்லாதது!

சாம்சனின் மிகப்பெரிய பலவீனமே, நிலைப்புத்தன்மை இல்லாததுதான்‌. தொடரின் சில போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். 2013சாம்பியன்ஸ் லீக் டி20 இறுதிப்போட்டியில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, 33 பந்துகளில் அவர் அடித்த 60 ரன்களைப்போல மிரட்டலாக பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். சரவெடி சாம்சன் என பத்திரிக்கைகளில் தலைப்புச்செய்திகளில் இடம்பிடிப்பார், கொண்டாடப்படுவார். ஆனால், அடுத்த போட்டியிலேயே புஸ்வாணமாக மாறி ஏமாற்றமளித்து வெளியேறுவார்‌. சங்கிலித்தொடராக, இதுதான் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. 2013-ல் பத்து லட்சத்துக்கு வாங்கப்பட்ட சாம்சன், 2014 ஐபிஎல்-ல், நான்கு கோடிக்கு வாங்கப்பட்டு ஸ்டார் பிளேயராகக் கருதப்பட்டார். அதன்பின், ராஜஸ்தானின் தடைக்காலத்தில் டெல்லியோடு பயணித்த சாம்சனை, தடைக்காலம் முடிந்ததும், மறுபடி தனது கூடாரத்துக்குள் கொண்டு வந்தது ராஜஸ்தான்! அவர் மீதிருந்த நிறைய நம்பிக்கையினால்தான் ஸ்மித் போன்ற ஒரு கைதேர்ந்த வீரர் வகித்த கேப்டன் பதவியை, இந்தவருடம் சாம்சனிடம் கொடுத்து அழகு பார்த்துள்ளது ராஜஸ்தான் நிர்வாகம். ஆனால், வெற்றிச் சூத்திரத்தில் இருக்க வேண்டிய பொருட்களில் சாம்சனிடம் காணப்படாத ஒன்றேஒன்று 'கன்சிஸ்டன்சி' எனப்படும் நிலைப்புத்தன்மை மட்டுமே.

2020 சீசன்!

கடந்த சீசனை, சிஎஸ்கேவுக்கு எதிரானப் போட்டியில், அமர்க்களமாக ஆரம்பித்தார் சாம்சன். 32 பந்துகளில் 74 ரன்களைக் குவித்திருந்த அவரது இன்னிங்ஸில், ஒரே ஒரு பவுண்டரியோடு, பிரமாண்டமாக, ஒன்பது சிக்ஸர்களை விளாசி இருந்தார். அதேபோல, பஞ்சாபுக்கு எதிரான இன்னொரு போட்டியிலும், 42 பந்துகளில் 85 ரன்களைக் குவித்திருந்தார். ஏழு சிக்ஸர்களின் உதவியோடு! அந்த சீசனில் மட்டும், 26 சிக்ஸர்களை தொடர் முழுவதும் விளாசி, பலம்பொருந்திய ஹிட்டராக உருமாற்றம் பெற்று வந்த சாம்சனின் வெற்றிக்கு, அவரது கோச் ரைஃபியின் வழிகாட்டுதல் உதவியது. லாக்டெளனில் 20,000-க்கும் மேலான பந்துகளை பயிற்சியின்போது சந்தித்து தன்னுடைய மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வந்திருந்தார் சாம்சன். 2013-ல் 115.73 ஆக இருந்த அவரது ஸ்ட்ரைக்ரேட் 2020-ல் 158.89ஐ எட்டித்தொட்டது.

கேப்டன் கிரீடம்!

கடந்த ஆண்டு, எட்டாவது இடத்தில் முடித்து, மோசமான வகையில் சீசனை நிறைவு செய்திருந்த ராஜஸ்தான், தவறுகளைக் களைந்தெறியும் விதமாக, கேப்டனாக சாதிக்கத் தவறிய ஸ்மித்தை, அதிரடியாக, இந்த வருடத்து மினி ஏலத்திற்கு முன் வெளியேற்றியதால், கேப்டனாக யார் தொடர்வார் என்ற கேள்வி எழ, தங்களுடன் நீண்டகாலமாய் பயணித்து வரும், சாம்சனைக் கேப்டன் ஆக்கினர். பன்ட்டின் மேலிருந்த எதிர்பார்ப்பு இல்லையெனினும், இந்த இளைஞர் ராஜஸ்தானின் தலையெழுத்தை எப்படி மாற்றுவார் என்ற ஆவல் மேலோங்கியது.

பஞ்சாபின் இன்னிங்ஸ்!

டாஸை வென்று பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது, சகாரியாவைக் கொண்டு ஆரம்பத்தாக்குதல் தொடுத்தது, லெக் ஸ்பின்னர்கள் மூலம் கேஎல் ராகுலை வீழ்த்த முயன்றது என கேப்டனாக நல்ல பங்களிப்பை அளித்திருந்தார் சாம்சன். எனினும், இன்னமும் கொஞ்சம் அட்டாக்கிங் ஃபீல்ட் செட் அப், மிரட்டும் பௌலிங் ரொட்டேஷன் இல்லாமல் மெத்தனமாக இருந்தது, பஞ்சாப் கிங்ஸை ஒரு 20 ரன்கள்வரை கூடுதலாக அடிக்கவைத்து விட்டது.

பேட்ஸ்மேன் சாம்சன்!

"கேப்டன் என்பது ஃபீல்டிங்கின் போதுதான், பேட்டிங்கின்போது அல்ல!" என சமீபத்தில் தெரிவித்திருந்தார் சாம்சன். ஆனால், கேப்டன் பதவி அவருக்குக் கூடுதல் பொறுப்பைக் கொண்டுவர, தவறான ஷாட்களுக்குப் போகாமல், அதேநேரத்தில், நிதானத்தையும் கைவிடாமல் ஆடிக் கொண்டிருந்தார் சாம்சன்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

பவர்ப்ளே ஓவர்களும் சாம்சனின் அரைசதமும்!

இலக்கு பெரியதென்பதால், தொடக்க ஓவர்களிலிருந்தே அடித்து ஆட வேண்டியதன் கட்டாயத்தை உணர்ந்திருந்த சாம்சன், பவர்ப்ளே ஓவர்களில் 27 ரன்களைச் சேர்த்திருந்தார். அதில் 24 ரன்கள், பவுண்டரிகள் மூலமாகவே வந்திருந்தது. அதன்பின், மறுபக்கம் விக்கெட்டும் வீழ்ந்ததால், சாம்சனின் ஆட்டம் கொஞ்சம் மட்டுப்பட்டு, 30 பந்துகளில் 41 ரன்கள் என்றிருக்க, அதற்கடுத்த மிரிடியத்தின் ஓவரில், 33 பந்துகளோடு அதை அரைசதமாக்கினார்.

சாம்சனின் சதம்!

ஷிவம் துபே விக்கெட் வீழ்ந்து, பராக்குடன் கைகோர்த்த பின்தான், சாம்சன் இன்னமும் ஆபத்தானவராக மாறத் தொடங்கினார். முதல் 50 ரன்களை அடிக்க 33 பந்துகளை எடுத்துக் கொண்ட சாம்சன், அடுத்த 50 ரன்களை 21 பந்துகளிலேயே அடித்து, தனது மூன்றாவது சதத்தையும் எட்டினார். இதற்குமுன்னதாக, 2017-ம் ஆண்டு, டெல்லி டேர்டெவில்ஸுக்காக ஆடிய போது, 62 பந்துகளில் சாம்சன் சதமடிக்க, அணி வெற்றிபெற்றது. அதன்பின், 2019-ல் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில், 54 பந்துகளில் சாம்சன் சதமடித்தும், அணி தோல்வியைத் தழுவியது, இம்முறையும், 54 பந்துகளில், சாம்சன் சதமடித்தும் போட்டி, எதிரணிக்குச் சாதகமாக முடிந்தது.

அச்சமென்பது மடமையடா!

சாம்சனின் இன்னிங்ஸ் முழுவதிலுமே, அவர் ஒரு அட்டாக்கிங் கிங்காகவே காட்சியளித்தார்‌. சுழல்பந்து, வேகப்பந்து வீச்சாளர்களென எல்லோரையும் ஒரு கை பார்த்தார், முக்கியமாக, மிரிடியத்தின் பந்துகள்தான் சாம்சனிடம் சிக்கி சின்னாபின்னமாகின. அவர் தனக்கு வீசிய 11 பந்துகளில் 29 ரன்களை அடித்திருந்தார் சாம்சன். இலக்கு அதிகமானதே, அடித்து விடுவோமா?, மறுபுறம் விக்கெட் விழுகிறது இது நமது வீழ்ச்சியின் ஆரம்பமா?! என்ற எந்தச் சந்தேகமோ, கலக்கமோ, கேப்டனாக பதில் சொல்ல வேண்டி இருக்குமென்ற பயமோ அவரது முகத்தில் சற்றும் வெளிப்படவில்லை. இடையில் குறுக்கிட்ட ஷமியின் இறுதி ஓவரும், அர்ஷ்தீப்பின் அசத்தலான கடைசி ஓவர் தவிர்த்து, போட்டியின் போக்கை, தான் விரும்பிய திசையில்தான் நகர்த்திக் கொண்டிருந்தார். அரைசதத்தைக் கடந்த அடுத்த பந்திலேயே, கள அம்பயர் அவருக்கு எல்பிடபிள்யூ தர, அதற்கு இரண்டாவது சிந்தனையேயின்றி, விநாடி நேரத்திற்குள், ரிவ்யூவுக்குப் போகும்போது, அவர் முகத்தில் தென்பட்டது நம்பிக்கை. அது இதுவரை சாம்சனிடமிருந்து வெளிவராத அவரது இன்னொரு பக்கம். டாஸ் போட்ட காசை எடுத்துவைத்துக் கொண்ட குழந்தைத்தனமான சாம்சனின் பக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பக்குவமுடையது அந்தமுகம்!

அலட்டிக் கொள்ளாத ஆட்டம்!

பொதுவாக, சஞ்சு சாம்சனை ஒரு மினி ரோஹித் ஷர்மா என சொல்லுமளவிற்கு, விளையாடும்போது அதிகமாக அழுத்தம் கொடுத்து விளையாடுவது போன்றே தெரியாது. கிரிக்கெட்டை இவ்வளவு எளிதாக விளையாட முடியுமா என்று தனது ஆட்டத்தின் மூலம் வியக்க வைப்பவர்களில் ரோஹித்தும், சாம்சனும் ஏகலைவர்கள். அடித்த ஏழு சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும், எஃபர்ட்லெஸ் ஷாட்ஸ் எனச் சொல்லும்வகையில், அற்புதமாக அதேநேரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வந்து சேர்ந்திருந்தது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

க்ளைமேக்ஸ் காட்சிகள்!

கடைசி ஓவரில், அர்ஷ்தீப் பந்தில், டீப் எக்ஸ்ட்ரா கவரில் சாம்சன் அடித்த அந்த சிக்ஸர், வெற்றி கிட்டத்தட்ட கிட்டும் தொலைவில்தான் என்று ஊர்ஜிதப்படுத்தியது. எனினும், ஐந்து ரன்கள் எடுக்க வேண்டிய கடைசிப் பந்தில், டைமிங் கச்சிதமாக இருந்தும், இன்னமும் கொஞ்சம் பவரேற்றி அடித்திருக்கவேண்டியது. ஆனால், அர்ஷ்தீப்பின் கட்டர்பால், பவுண்டரி லைனுக்கு மிக அருகில் ஹூடாவிடம் தஞ்சமடைய, கடைசிப் பந்துவரை உண்மையான வீரராகப் போராடிய சாம்சனின் ஆட்டமும், வெற்றிக்கனவும் வீணாய் முடிந்தது. எனினும், சுலபத்தில் பணியாமல், பின்வாங்காமல், இறுதிவரை போராடிய அவரது மனோபாவம்தான் பாராட்டுக்குரியது‌. அணியின் தோல்வியோடு வந்திருந்தாலும், காலத்திற்கும் பேசப்படப்போகும் இன்னிங்ஸ்தான் இது!

ஐந்தாவது பந்தில் ஸ்ட்ரைக்கை மாரிஸிடம் கொடுத்திருந்தால், பவுண்டரியுடன் சூப்பர் ஓவருக்கான வாய்ப்பிருந்திருக்கும் என சிலர் சொன்னாலும், நன்றாக செட்டில் ஆகி இருந்த பேட்ஸ்மேனாக, அந்தத் தருணத்தில், தன்னம்பிக்கை மிகுதியோடு சாம்சன் எடுத்த முடிவு சரியே! கேப்டனாக அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியுள்ளார். கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, கேப்டன் சாம்சன் இதேபோல் சாம்பியன் சாம்சனாகத் தொடர்ந்தால், ராஜஸ்தான் கோப்பையை நோக்கி வீரநடை போடலாம்!

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு