கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டின் ஐபிஎல் தொடர் முழுவதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ. சென்ற வருடம் ஐ.பி.எல் 2021 தொடரை இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் திட்டமிட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்க எதிர்பாராதவிதமாக வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வேறுவழி இல்லாமல் தொடரின் இரண்டாம் பாதியை மீண்டும் அமீரகத்திற்கே மாற்றி நடத்தியது பிசிசிஐ.
இந்நிலையில் ஐபிஎல் 2022-க்கான வேலைகளைத் தற்போது தொடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தாண்டின் முழு தொடரையும் இந்தியாவிலேயே நடத்திவிடும் முடிவில் உள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி அந்தந்த மாநில அரசுகளின் இறுதி முடிவைப் பொறுத்தே எந்தெந்த நகரங்களின் போட்டியை நடத்தலாம் என்று திட்டமிட வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இது சாத்தியமாகாமல் போனால் சென்ற ஆண்டு போல மீண்டும் வெளிநாட்டிலே ஐபிஎல் தொடர் நடைபெறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவை மட்டுமல்லாமல் கூடுதலாக ஒரு திட்டத்தை வைத்துள்ளது பிசிசிஐ. தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் போட்டிகளை பல்வேறு மாநிலங்களில் நடத்தாமல் ஓட்டுமொத்த தொடரையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடத்துவதே அத்திட்டம். வான்கடே, ப்ராபோன், D.Y. பாட்டீல் முதலிய மூன்று மைதானங்கள் மும்பை மற்றும் நவி மும்பை சுற்றுவட்டாரத்திலேயே இருப்பதால் மொத்தத் தொடரும் மும்பையில் மட்டுமேகூட நடத்தப்படலாம். இது தவிர புனே நகரில் மற்றொரு மைதானம் உள்ளது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் அம்மாநில கிரிக்கெட் சங்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தையும் சமீபத்தில்தான் ரத்து செய்திருந்தது பிசிசிஐ. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.