ஐ.பி.எல் 2022-க்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12,13-ம் தேதிகளில் பெங்களூரு நகரில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான முக்கிய வீரர்களை முன்னதாகவே தக்கவைத்துக்கொண்டிருந்த நிலையில் மீதமுள்ள சரியான வீரர்களை வாங்க இந்த மெகா ஏலத்தை எதிர்நோக்கி ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த ஐ.பி.எல் தொடரில் புதிதாய் இணையவுள்ள லக்னோ மற்றும் அஹமதாபாத் அணிகள் தாங்கள் டிராப்ட் செய்துள்ள வீரர்களில் பட்டியலை நேற்று வெளியிட்டன. லக்னோ அணியை பொறுத்தவரையில் கே.எல்.ராகுல் (17 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (9.2 கோடி), ரவி பிஷ்னாய் (4 கோடி) ஆகியோரை டிராப்ட் செய்துள்ளது. ஹர்திக் பாண்டியா (15 கோடி), ரஷித் கான் (15 கோடி), ஷுப்மன் கில் (8 கோடி) ஆகியோர் அஹமதாபாத் அணிக்கு டிராப்ட் ஆகியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமேலும் மெகா ஏலத்திற்கான பேஸ் விலை பட்டியலில் மீதமுள்ள வீரர்கள் தங்களில் பெயர்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. 270 தேசிய வீரர்கள், 312 தேசிய அணியில் இன்னும் விளையாடாத வீரர்கள், அசோசியேட் நாடுகளை சேர்ந்த 41 வீரர்கள் என மொத்தமாக 1214 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் பங்குபெற பதிவு செய்துள்ளனர். ஐ.பி.எல் வரலாற்றின் மிக முக்கிய வீரரான கிறிஸ் கெயில் இந்த வருட ஏலத்தில் கலந்துக்கொள்ளமாட்டார் என தெரிகிறது. அவரை தொடர்ந்து மிச்சேல் ஸ்டார்க், சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஓக்ஸ் ஆகிய முக்கிய வீரர்களும் இந்த ஏலத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்துக்கொள்ளவில்லை.

ஏலத்தில் தங்களின் குறைந்தபட்ச விலையாக இரண்டு கோடி ரூபாயை இதுவரை 49 வீரர்கள் நிர்ணயித்துள்ளனர். 17 இந்தியர்கள் மற்றும் 32 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ள அப்பட்டியலில் டேவிட் வார்னர், ரவி அஸ்வின், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிக்கர் தவான், இஷன் கிஷன், சுரேஷ் ரெய்னா, பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், டூ பிளஸ்சி, டுவைன் பிராவோ, ரபாடா ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஐ.பி.எல் தொடரைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர்களை ஏலத்தில் எடுப்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவு திறமையான இளம் வீரர்களை கண்டெடுப்பதும் அணிகளின் தலையாய கடமை. அதற்கேற்ப கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் தன்னை 2 கோடிக்கான பட்டியலில் இணைத்துக்கொண்டுள்ளார். இதுபோல சென்ற தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேலும் தனக்கான குறைந்தபட்ச ஏல தொகையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளார்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த அதிரடி வீரரான ஷாரூக் கான் தன் குறைந்தபட்ச விலையாக 20 லட்சம் மட்டும் நிர்ணயம் செய்துள்ளார். கடந்த சீசனில் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டவரும் சமீபத்தில் முடிந்த உள்ளூர் தொடர்களில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவருமான இவர் பஞ்சாப் அணி மீண்டும் ஆட கேட்டதற்கு மறுத்திருந்தார். இவரைப் போலவே இளம் வீரர் அவேஷ் கானும் குறைந்தபட்ச விலையை மட்டுமே கேட்டுள்ளார். வரும் ஏலத்தில் இவர்கள் இருவரும் மிகசிறந்த விலைக்கு போவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தன்னை 50 லட்சத்திற்கான பட்டியலில் இணைத்துக்கொண்டுள்ளார்.
இது தவிர ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வீரர்கள்:
1.5 கோடி
அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஆரோன் ஃபின்ச், ஜானி பேர்ஸ்டோ, மோர்கன், ஷிம்ரன் ஹெட்மேயர், நிக்கோலஸ் பூரன்.
1 கோடி
பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், நடராஜன், ரஹானே, நிதிஷ் ராணா, மிச்சேல் சான்ட்னர், வனின்டு ஹஸரங்கா

ஏலத்திற்கு முன்பாக ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிடும் மற்றுமொரு இறுதி பட்டியலில் இருந்தே எதிர்வரும் மெகா ஏலம் நடைபெறும்.