IPL 2021 : தோனி, டுப்ளெஸ்ஸி விக்கெட்டைத் தூக்கிய அவேஷ் கான் யார்?! #CSKvDC

சையது முஷ்தாக் அலி தொடரில் அட்டகாசமான செயல்பாட்டின் பலனாக, அவேஷ் கானை இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு நெட் பௌலராக அழைத்தது இந்திய அணி நிர்வாகம். தேர்வாளர்களின் பார்வைபட்டிருப்பது அவர் நம்பிக்கையை நிச்சயம் அதிகரித்திருக்கும்.
இன்று டெல்லி கேபிடல்ஸ் அணி அறிவிக்கப்பட்டபோது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்திருக்கும். உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா போன்ற அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு பதில் அணியில் இடம் பிடித்திருந்தார் அவேஷ் கான். பல புருவங்கள் உயர்ந்தன. ஆனால், இன்று வீசிய 4 ஓவர்களில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார் அவேஷ். 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுவும் ஃபாஃப், தோனி என இரண்டு முக்கிய விக்கெட்டுகள்! தோனியை இரண்டே பந்துகளில் வெளியேற்றினார் இந்த வேகப்பந்து வீச்சாளர். யார் இந்த அவேஷ் கான்?!
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டி20 தொடரில், ஐந்தே போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அவேஷ் கான். கோவா அணிக்கெதிரான முதல் போட்டியில் 1 விக்கெட் எடுத்து தொடரை தொடங்கியவர், ராஜஸ்தான் அணிக்கெதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடுத்த போட்டி விதர்பாவுக்கு எதிராக! வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது மத்திய பிரதேசம். அந்த சிறிய இலக்கையும் அட்டகாசமாக டிஃபெண்ட் செய்தது எம்.பி. அதற்குக் காரணம் அவேஷ்! 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஈஷ்வர் பாண்டேவுடன் பவர்ப்ளேவில் இவர் அமைத்த கூட்டணி நன்றாக வேலை செய்தது. ஈஷ்வர் பாண்டே சிக்கனமாகப் பந்துவீச, தன் வேகத்தால் விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவேஷ். அட்டகாசமான ஃபார்ம் தொடர, சர்வீசஸ் அணிக்கெதிராகவும் 3 விக்கெட்டுகள் எடுத்தார். சௌராஷ்டிராவுக்கு எதிராக மட்டும் இவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. 48 ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இருந்தாலும் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி, அந்தத் தொடரின் மூன்றாவது டாப் விக்கெட் டேக்கரானார்.
அவரது அட்டகாசமான செயல்பாட்டின் பலனாக, இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு நெட் பௌலராக அவரை அழைத்தது இந்திய அணி நிர்வாகம். தேர்வாளர்களின் பார்வை பட்டிருப்பது அவர் நம்பிக்கையை நிச்சயம் அதிகரித்திருக்கும். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பேக் அப் வீரராகவே இருந்துவிட்ட அவேஷ், இம்முறை டெல்லியின் வேகப்பந்துவீச்சை மேலும் பலப்படுத்தக் காத்திருக்கிறார்.
2020 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கியக் காரணமாக இருந்தது அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள். ரபாடா, நார்க்கியா இருவரும் ஒவ்வொரு அணியின் பேட்ஸ்மேன்களையும் பந்தாடினர். இருவரும் இணைந்து 2020 ஐபிஎல் தொடரில் மட்டும் 52 விக்கெட்டுகள் சாய்த்தார்கள். பவர்ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என எங்கு பந்துவீசினாலும் விக்கெட் வேட்டை நடத்தினார்கள்.
இஷாந்த் ஷர்மா பவர்ப்ளேவின் பெரும்பகுதி ஓவர்களைப் பார்த்துக்கொண்டதால் இவர்கள் மிடில் ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். இஷாந்த் காயத்தால் விலகியதால், அவர் இடத்தை நிரப்புவதில் அந்த அணிக்குப் பிரச்னை ஏற்பட்டது. மோஹித் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரால் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. அவேஷ் கானுக்கு ஒரேயொரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதிலும் விக்கெட் எடுக்காமல் 42 ரன்கள் கொடுத்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

24 வயதான அவேஷ் கான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். 2016 அண்டர் 19 உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணியில் விளையாடியவர். 2017 ஐபிஎல் ஏலத்தின்போது ஆர்சிபி அணி இவரை வாங்கியது. ஆனால், அந்த சீசனின் கடைசி போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி இவரை வாங்கியது. இதுவரை 9 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருக்கும் அவேஷ் கான், 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.