Published:Updated:

IPL 2022: இவன் யார்க்கர்கள் விளையாட்டில் ஜெயிப்பதே விதியாகும் - அசத்தும் அர்ஷ்தீப் சிங்!

Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங் ( IPL )

இந்த சீசனை கவனித்து வரும் யாரிடம் வேண்டுமானாலும் சிறந்த டெத் பௌலர் யார் என கேட்டால் அர்ஷ்தீப் சிங்கை நோக்கியே கை நீட்டுவார்கள். அப்படி என்ன மந்திரம் செய்கிறார் இவர்?

IPL 2022: இவன் யார்க்கர்கள் விளையாட்டில் ஜெயிப்பதே விதியாகும் - அசத்தும் அர்ஷ்தீப் சிங்!

இந்த சீசனை கவனித்து வரும் யாரிடம் வேண்டுமானாலும் சிறந்த டெத் பௌலர் யார் என கேட்டால் அர்ஷ்தீப் சிங்கை நோக்கியே கை நீட்டுவார்கள். அப்படி என்ன மந்திரம் செய்கிறார் இவர்?

Published:Updated:
Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங் ( IPL )
கடைசி சில ஓவர்களில் மிக சொற்பமான ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டுமா? சந்தேகமேயின்றி பஞ்சாப் கிங்ஸின் அர்ஷ்தீப் சிங்கை அழைக்கலாம். நூற்றுக்கணக்கான போட்டிகளில் ஆடியதில்லை. பெரிய அனுபவம் கிடையாது. ரொம்பவே சிறிய வயதும் கூட. ஆனால், அவர் வீசும் பந்துகளில் அது எதுவுமே தெரியாது. துல்லியமாக இலக்குகளை நோக்கிப்பாயும் ஏவுகணைகள் போன்று பேட்ஸ்மேன்களில் கால்களுக்குள் வெறித்தனமான யார்க்கராக இறக்குவார்.

எப்பேற்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரின் துல்லியத்தன்மையின் முன் நிராயுதபானியாக ஒன்றுமே செய்ய முடியாமல் திகைத்து போய் நிற்பர். 'Basically I'm a death bowler' என செம கூலாக டெத் ஓவர்களில் பந்தை வாங்கி திரும்ப திரும்ப வெற்றிகரமாகவே வீசிக்கொண்டிருக்கிறார் அர்ஷ்தீப் சிங்.

கடந்த சில ஆண்டுகளில் பஞ்சாப் அணி செய்த ஒரே உருப்படியான காரியம் எதுவென்றால் அர்ஷ்தீப்பை சிங்கை உருவாக்கியதையே கூறலாம். கேப்டன்களை மாற்றினார்கள். பயிற்சியாளர் குழுவை மாற்றினார்கள். எக்கச்சக்கமான வீரர்களை மாற்றினார்கள். ஆனால், அர்ஷ்தீப் சிங்கின் மீது மட்டும் கையே வைக்கவில்லை. பஞ்சாப் கிங்ஸ் தவறுதலாக செய்துவிட்ட மிக சிறப்பான செயல் இது.

Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங்
Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் அணிக்காகவும் இந்திய U19 அணிக்காவும் ஆடி வந்த அர்ஷ்தீப் சிங், 2018 U19 உலகக்கோப்பையில் நன்றாக ஆடியிருந்தார். உள்ளூர் கனெக்ட் இருப்பதால் அர்ஷ்தீப் சிங்கை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 2019-ல் ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் அவருக்கு பெரிதாக வாய்ப்பே கிடைக்கவில்லை. மூன்றே மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். 2020 சீசனிலிருந்துதான் அர்ஷ்தீப் சிங் அதிக கவனம் பெற ஆரம்பித்தார். இடதுகை வேகப்பந்துவீச்சாளராக பவர்ப்ளேயில் பந்தை நன்றாக மூவ் செய்தவர், டெத் ஓவர்களில் யார்க்கர்களைத் துல்லியமாக இறக்கியதை கண்டு அனைவரும் ஆச்சர்யமுற்றனர்.

மெது மெதுவாக பஞ்சாப் அணியின் முக்கியமான வீரராக மாற தொடங்கியவர், கடந்த சீசனில் ரொம்பவே நன்றாக செயல்பட்டிருந்தார். 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே கடைசி ஓவரில் ஒரு 13 ரன்களை டிஃபண்ட் செய்து பஞ்சாபை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வைத்திருப்பார். ஒரு ரவுண்ட் முடித்து மீண்டும் ராஜஸ்தானுக்கு எதிராக ஆடிய போது 5 விக்கெட் ஹால் எடுத்திருந்தார். சன்ரைசர்ஸூக்கு எதிராக பஞ்சாப் 125 ரன்களை டிஃபண்ட் செய்த ஒரு போட்டியில் டெத் ஓவரில் பவுண்டரிகளே கொடுக்காமல் சிக்கனமாகச் செயல்பட்டு மேட்ச் வின்னிங் ஸ்பெல்லை வீசியிருப்பார்.

இந்த பெர்ஃபார்மென்ஸ்களால் கவனம் ஈர்த்த அர்ஷ்தீப்பை எதிர்கால ஆப்சனாக கருதி பஞ்சாப் அணி, 2022 மெகா ஏலத்திற்கு முன்பாகவே 4 கோடி கொடுத்து தக்கவைத்துக் கொண்டது.

பஞ்சாப் அணியின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இந்த சீசனிலும் நன்றாக வீசி வருகிறார். விக்கெட்டுகள் எடுக்காவிடிலும் அணி அவரிடமிருந்து எதிர்பார்க்கும் சிக்கனமான டெத் ஓவர்களை ஒவ்வொரு போட்டியிலும் தவறாமல் சிறப்பாக வீசுகிறார். இந்த சீசனில் அதிக யார்க்கர்களை வீசியவர்களின் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் அன்னப்போஸ்டாக முதலிடத்தில்தான் இருப்பார். அர்ஷ்தீப் யார்க்கர்தான் வீசப்போகிறார் எனத் தெரிந்தும் பேட்ஸ்மேன்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிகபட்சமாகத் தட்டிவிட்டு மூச்சிறைக்க ஓட மட்டுமே செய்கின்றனர். இந்த சீசனில் குறைவான சிக்ஸர்களை வழங்கியிருக்கும் பௌலர்களின் பட்டியலிலும் டாப் 3 க்குள் இருக்கிறார். டெத் ஓவர்களில் மிகக்குறைவான எக்கானமி வைத்திருப்பதும் அர்ஷ்தீப்தான். ஓவருக்கு 6 ரன்களுக்கும் கீழ்தான் கொடுத்திருக்கிறார்.

Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங்
Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங்
PBKS

அர்ஷ்தீப் டெத் ஓவர்களில் எவ்வளவு சிறப்பாக வீசுகிறார் என்பதற்கு சென்னைக்கு எதிரான போட்டியையே உதாரணமாகச் சொல்லலாம். அந்தப் போட்டியில் சென்னைக்கு 188 ரன்கள் டார்கெட். அம்பத்தி ராயுடு நின்று வெளுத்தெடுத்து போட்டியை சென்னை பக்கமாகத் திருப்பிவிட்டார். கடைசி 4 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு 46 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. டி20 போட்டிகளில் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனால், அர்ஷ்தீப் சிங் அதைப் பெரிய விஷயமாக மாற்றினார். சென்னையைத் தடுமாறச் செய்தார். சீராக முன்னேறிக்கொண்டிருந்த சென்னையை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வைத்தார்.

அவர் வீசிய 17 மற்றும் 19 இந்த இரண்டு ஓவரிலும் சேர்த்தே வெறும் 14 ரன்களை மட்டுமே கொடுத்தார். தோனி, ஜடேஜா, அம்பத்தி ராயுடு என அத்தனை அபாயகரமான வீரர்களையும் வைத்துக் கொண்டு எக்கானமிக்கலாக அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவர்களால் கடைசி ஓவரில் சென்னை அணிக்கு மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ரிஷி தவான் வீசுய அந்த கடைசி ஓவரில் சென்னை அணிக்கு வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், சென்னை அணியால் 15 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ரிஷி தவானின் கடைசி ஓவர் வெற்றிகரமான ஓவராக அமைந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது முன்னதாக அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவர்களே. சென்னைக்கு எதிரான போட்டியில்லை. எல்லா போட்டியிலுமே அந்த 17, 19 வது ஓவர்களை மிகச்சிறப்பாக வீசி எதிரணிக்கு மீள முடியாத துயரை அர்ஷ்தீப் சிங் ஏற்படுத்தி விடுகிறார்.

எதிரில் எந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பதை பற்றிய எண்ணமெல்லாம் அர்ஷ்தீப் சிங்கிற்கு துளி கூட எட்டிப்பார்ப்பதில்லை. எதிரில் ஒரு டெய்ல் எண்டர் இருந்தாலும் சரி தோனியோ பொல்லார்டோ இருந்தாலும் சரி அர்ஷ்தீப் சிங்தான் என்ன வீசப்போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பார். அதை மட்டுமே வீசுவார். ஆணி அடித்தாற் போல ஒரே யார்க்கர் லெந்த்தில் அடுத்தடுத்து பந்துகள் சரமாரியாக விழும்.

சென்னைக்கு எதிரான அந்தப் போட்டி முடிந்த பிறகு பேசிய பஞ்சாப் வீரர் ரபாடா...

"அர்ஷ்தீப் சிங்தான் இந்த சீசனின் சிறந்த டெத் பௌலர். நம்பர்களும் சரி அவரின் பெர்ஃபார்மென்ஸூம் சரி அதைத்தாம் நிரூபிக்கின்றன."
ரபாடா
Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங்
Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங்
PBKS

ரபாடாவிடம் என்றில்லை. இந்த சீசனை கவனித்து வரும் யாரிடம் வேண்டுமானாலும் சிறந்த டெத் பௌலர் யார் எனக் கேட்டால் அர்ஷ்தீப் சிங்கை நோக்கியே கை நீட்டுவார்கள்.

"அவர் மீண்டும் மீண்டும் டெத் ஓவர்களில் நன்றாக வீசிக்கொண்டிருக்கிறார். மெருகேறிக்கொண்டே இருக்கிறார். சீக்கிரமே இந்திய அணிக்கு ஆடுவார்."
ரவி சாஸ்திரி

உலகக்கோப்பை தொடர்களை வெல்ல ஒரு அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை வைத்திருக்க வேண்டியது மிக முக்கிய தகுதியாகிவிட்டது. ஆனால், இந்திய அணி இந்த விஷயத்தில் தொடர்ந்து சுணங்கிக் கொண்டே இருக்கிறது. ஜாகீர்கானுக்கு பிறகு ஒரு முழுமையான இடதுகை வேகப்பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வந்து மெருகேற்ற தவறிவிட்டது. அடுத்தடுத்து இரண்டு உலகக்கோப்பைகள் வரவிருக்கும் நிலையில் இந்திய அணி ஒரு தரமான இடதுகை வேகப்பந்து வீச்சாளரை அணியில் கொண்டிருப்பது அவசியமாக மாறியிருக்கிறது. உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருக்கப்போகும் அந்த ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!