Published:Updated:

IPL 2021: பயோபபுளுக்குள் பரவிய கொரோனா... ஐபிஎல் கிரிக்கெட் தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைப்பு!

ஐபிஎல் தோனி - கோலி
ஐபிஎல் தோனி - கோலி

கடந்த இரண்டு நாட்களாக பயோபபுளுக்குள்ளேயே கொரோனா பரவியதால் தேதி குறிப்பிடப்படாமல் ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறிக்கொண்டிருந்த நிலையில், இப்போது பயோ பபுளுக்குள் இருந்த வீரர்களுக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலால் இப்போது போட்டிகளும் தடைபடத் தொடங்க, IPL தொடர் நிறுத்தப்பட்டுள்ளதாக BCCI துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்திருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் நேற்று கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தி வெளிவந்தது. தோள்பட்டை ஸ்கேன் எடுப்பதற்காக பபுளுக்கு வெளியே சென்றதால், வருண் சக்ரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. திடீரென இந்த செய்தி வந்ததால், நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா - பெங்களூர் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

நைட்ரைடர்ஸ் மட்டுமல்லாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. அணியின் தலைமை நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் ஓர் ஊழியர் என மூவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், சூப்பர் கிங்ஸ் அணியினர் மொத்தமாக 5 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். இந்நிலையில் நாளை நடைபெற இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான சென்னையின் ஆட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

Chennai Super Kings
Chennai Super Kings

மேலும், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இருந்த ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் செய்தி பரவியது. ஆனால், அதை டெல்லி கிரிக்கெட் சங்கம் மறுத்தது. இருந்தாலும், பாதுகாப்பு கருதி இன்று கோட்லாவில் விளையாடவிருந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு அணிகளும் பயிற்சிக்குச் செல்லவில்லை.

சில நிமிடங்களுக்கு முன்பு, சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் விரித்திமான் சஹாவுக்குக் கொரோனா ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. நேற்றில் இருந்தே அந்த அணியின் வீரர்களுக்குமே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அடுத்த சில நொடிகளில் டெல்லி கேபிடல்ஸ் ஸ்பின்னர் அமித் மிஷ்ராவுக்கும் கொரோனா என்ற செய்தி வெளியானது.

ரவி அஷ்வின், ஆண்ட்ரூ டை போன்ற வீரர்கள் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருந்தபோதே IPL தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், "திட்டமிட்டபடி இந்தத் தொடர் நடக்கும்" என்று தெரிவித்திருந்தார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி. பயோபபுள் முறையில் அவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். அனைவருமே அதை நம்பினர். ரிக்கி பான்ட்டிங், நாதன் கூல்டர்நைல் ஆகியோரும் பயோபபுள்கள் பாதுகாப்பானது என்று சொல்லியிருந்தனர். இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்திருப்பதால் ஐபிஎல் தேதி குறிப்பிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு