Published:Updated:

"அட... பந்து என் பாக்கெட்லதாம்ப்பா இருந்திருக்கு!’’ - ஐபிஎல் அம்பயரிங் குளறுபடிகள் #IPL2019

"அட... பந்து என் பாக்கெட்லதாம்ப்பா இருந்திருக்கு!’’ - ஐபிஎல் அம்பயரிங் குளறுபடிகள் #IPL2019
"அட... பந்து என் பாக்கெட்லதாம்ப்பா இருந்திருக்கு!’’ - ஐபிஎல் அம்பயரிங் குளறுபடிகள் #IPL2019

சிறிதும் பெரிதுமாகத் தவறிழைக்கும் அம்பயர்களை யார் தண்டிப்பது? முன்பு அம்பயர்களைக் கண்காணிக்கவும் தரவரிசைப்படுத்தவும் அம்பயரிங் கமிட்டி ஒன்று இருந்தது.

முன்னொரு காலமிருந்தது. கறார் அம்பயர்களின் காலம் அது! 'சச்சின் செஞ்சுரி போடணும், ஸ்ரீநாத் விக்கெட் எடுக்கணும், அம்பயர் நம்ம பக்கம் நிக்கணும்' - இப்படித்தான் இருக்கும் மேட்ச்சுக்கு முன்னான பிரார்த்தனைகள். ப்ளேயர் - ப்ளேயர் சண்டைக்கு இணையாக ப்ளேயர் - அம்பயர் மோதல்களும் அப்போது உண்டு. அதிலும் சச்சின் - ஸ்டீவ் பக்னர் இணை அப்போது உலகப் பிரபலம். ஏகப்பட்ட முறை அவரால் நியாயமே இல்லாமல் அவுட் ஆக்கப்பட்டிருந்தாலும் எதிர்த்துப் பேசாமல் நடையைக் கட்டுவார் டெண்டுல்கர். இலங்கை அம்பயர் அசோக டி சில்வா இந்தியா ஆடும் ஆட்டங்களுக்கு வரக் கூடாது என ஸ்பெஷலாக வேண்டும் கூட்டம் ஒன்றும் இருந்தது. ஆனால், இது அத்தனையையும் தாண்டி ப்ளேயர்களும் ரசிகர்களும் அம்பயர்கள் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதில்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கடப்பாரையை இறக்குகிறார்கள் ஐ.பி.எல் அம்பயர்கள். #IPL2019

அதிலும் இந்த சீஸனின் அம்பயரிங் தரம் ரொம்பவே மோசம். சின்னச் சின்ன தவறுகள் முதல், மேட்ச் ரிசல்ட்டையே பாதிக்குமளவுக்கான படா படா பிரச்னைகள் எல்லாம் இவர்களால் நடக்கின்றன. அதன் லிஸ்ட் இங்கே:

கோட்டைத் தாண்டினாலே பவுண்டரிதான்:

ஐபிஎல்-லின் முதல் அம்பயரிங் சர்ச்சை இதுதான். பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை தட்டிவிட்டு சிங்கிள் ஓடுவார் பஞ்சாப் அணியின் மயாங்க். அந்தப் பந்தை எடுத்து பௌலரிடம் பாஸ் செய்யச் சொல்லி ரஸலிடம் தூக்கிப் போடுவார் உத்தப்பா. ரஸல் அதைக் கோட்டைவிட பந்து பவுண்டரிக்குப் போய்விடும். நியாயமாகப் பார்த்தால் ஓவர்த்ரோ பை ரன்களுக்கான நேரம் முடிந்து, அடுத்த பந்தை வீச பௌலர் தயாரான நேரம் அது. ஆனாலும், அம்பயர்கள் பைஸில் பவுண்டரி என அறிவிக்க கேப்டன் டி.கே-வுக்கும் அம்பயர்களுக்கும் விவாதம் உண்டானது.

நோ பாலா? நான் பாக்கவே இல்லையே:

இந்தத் தொடரின் ஏழாவது ஆட்டம் அது. முதல் ஆட்டத்தில் கொடூரமாகத் தோற்றதால் மேட்ச்சை வென்றாக வேண்டிய கட்டாயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு! மும்பை வைத்த இலக்கு 188 ரன்கள். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார் ஷிவம் டூபே! அடுத்தடுத்து சிங்கிள்கள். கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை. சிக்ஸ் அடித்தால் சூப்பர் ஓவர். ஆனால், அது டாட் பால் ஆனது. ப்ளேயர்கள் ஹேண்ட்ஷேக் எல்லாம் செய்து முடித்த பின் அது நோ பால் எனத் தெரிய வந்தது. கொதித்துப் போனார் கோலி. நோ பாலில் ஒரு ரன், ஃப்ரீ ஹிட்டில் ரன்கள் என மேட்ச்சே மாறியிருக்கலாம். மும்பை கேப்டன் ரோஹித்தும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்தார். அஷ்வினின் மேன்கேடிங்கைத் தூக்கிச் சாப்பிட்டது இந்த நோ பால் சர்ச்சை. 

தோனியவே டென்ஷனாக்கிட்டீங்களேய்யா!

ராஜஸ்தானோடு சென்னை மோதிய ஆட்டம். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்த சென்னை அதே மொமென்ட்டைத் தக்கவைக்க நினைத்தது. இலக்கு 152 ரன்கள். விக்கெட்கள் சடசடவென சரிய தோனி நின்று ஆடினார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை. முதல் பாலில் சிக்ஸ் பறக்கவிட்டார் ஜடேஜா! அடுத்தபால் நோ பால், அதற்கடுத்த ஃப்ரீ ஹிட்டில் 2 ரன்கள். நான்கு பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் அவுட்டானார் தோனி. மொத்த அரங்கமும் அதிர்ந்தது. 

அதற்கடுத்த பந்தை ஸ்டோக்ஸ் ஃபுல் டாஸாக வீச சான்ட்னரின் நெஞ்சுக்கு வந்தது பந்து. ஸ்டம்ப் பின்னாலிருந்த அம்பயர் நோ பால் கொடுக்க, அதை ஆட்சேபித்தார் ஸ்கொயர் லெக் அம்பயர். தேர்ட் அம்பயர் பார்வையிலும் அது நோ பால்தான். இதற்குள் கோபமாகக் களத்துக்குள் வந்து வாக்குவாதம் செய்யத் தொடங்கிவிட்டார் தோனி. சமீபத்தில் அவர் இவ்வளவு டென்ஷனாகி யாருமே பார்த்ததில்லை. பார்வையாளர்கள், அம்பயர்கள் எல்லாருக்குமே பெரிய ஷாக் அது. அம்பயர் செய்தது ஒருபுறமிருக்க, தோனி செய்த செயலுக்கு 50% அபராதம் விதித்தது ஐபிஎல் ஒழுங்கு கமிட்டி. 

பந்தா? அட என் பாக்கெட்லதான் இருந்திருக்கு!

ஆர்.சி.பி-யும் பஞ்சாப்பும் மோதிக்கொண்ட ஆட்டம் அது. 14-வது ஓவருக்குப் பின் டைம் அவுட்! அது முடிந்து பஞ்சாப்பின் அன்கித் பந்துபோடத் தயாரானார். ஆனால், பந்தைக் காணோம். அஷ்வின், பேட்ஸ்மேன்கள் ஸ்டோய்னிஸ், டிவில்லியர்ஸ் என எல்லாரும் மாறி மாறி பார்த்துக்கொண்டார்கள். அம்பயர்கள் புது பந்தையும் வரவழைத்துவிட்டார்கள். அதன்பின் தேர்ட் அம்பயர் வீடியோவைப் பார்த்து பந்து ஸ்கொயர் லெக்கில் இருந்த அம்பயரின் பாக்கெட்டில் இருப்பதைப் பார்த்து சொல்ல, 'அட ஆமாப்பா! மறந்துட்டேன்' என எடுத்துக் கொடுத்தார் அம்பயர். 

நேரவிரயம் இப்படித்தான் ஆகிறது என்பதில்லை. ரன் அவுட் ஆகி ப்ளேயரே நடையைக் கட்டினாலும் தேர்டு அம்பயருக்கு சிக்னல் கொடுத்து ஏற்கெனவே லேட்டாகும் மேட்ச்சை இன்னமும் இழுத்தடிக்கிறார்கள். 

இப்படி, சிறிதும் பெரிதுமாகத் தவறிழைக்கும் அம்பயர்களை யார் தண்டிப்பது? முன்பு அம்பயர்களைக் கண்காணிக்கவும் தரவரிசைப்படுத்தவும் அம்பயரிங் கமிட்டி ஒன்று இருந்தது. முன்னாள் அம்பயர்களாலான குழு அது. பின்னர், அது கலைக்கப்பட்டுவிட்டது. ஐபிஎல் கவர்னிங் கவுன்சிலும் கோர்ட் உத்தரவின்படி இப்போது செயல்படாததால் அவர்களாலும் இந்த விஷயத்தில் தலையிட முடியாது. சுப்ரீம் கோர்ட் நியமித்த நிர்வாகக் குழு மட்டுமே இதில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதுவும் உறுதியில்லை. இன்னும் இரண்டு வாரத் தொடர் மிச்சமிருக்கும் நிலையில் இந்த லிஸ்ட் பெரிதாகும் வாய்ப்புகள்தான் அதிகம். 

அடுத்த கட்டுரைக்கு