Published:Updated:

``அவரின் ஆட்டத்தைப் பாதித்த உலகக்கோப்பை குறித்த எண்ணம்!” - பன்ட் குறித்து பாண்டிங்

``அவரின் ஆட்டத்தைப் பாதித்த உலகக்கோப்பை குறித்த எண்ணம்!”  - பன்ட் குறித்து பாண்டிங்
``அவரின் ஆட்டத்தைப் பாதித்த உலகக்கோப்பை குறித்த எண்ணம்!” - பன்ட் குறித்து பாண்டிங்

ஒருபுறம் ஐபிஎல்... மறுபுறம் உலகக்கோப்பை என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை அணித் தேர்வு தொடர்பாகத் தொடர் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பன்ட் குறித்து பாண்டிங் பேசியுள்ளார். 

கடந்த ஐபிஎல் தொடர்களைக் காட்டிலும் டெல்லி அணி இந்தமுறை சிறப்பாக விளையாடி வருகிறது. பாண்டிங் பயிற்சியிலும் கங்குலியின் ஆலோசனையிலும் மாஸ் காட்டி வருகிறது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இளம் படை. தற்போது டெல்லி அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. 

இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடி அனைவரது கனவத்தையும் ஈர்த்தார். தாதா கங்குலி பன்ட் - ஐ தூக்கிக் கொண்டாடினார். அதேபோன்று பாண்டிங்கும், பன்ட்  -ஐ உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யாமல் இந்தியா தவறு செய்துவிட்டதாகத் தெரிவித்தார். தற்போது பேட்டிங் -க்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் இங்கிலாந்து மைதானத்தில் பன்ட்  இருந்தால் மிடில் ஓவர்களில் இந்திய அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என பலர் கருத்து தெரிவித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் மீண்டும் ஒருமுறை பன்ட் பேட்டிங் குறித்து பெருமையுடன் பேசியிருக்கிறார்.  ``திறமையான வீரர்கள் சில நேரங்களில் சிறப்பாக விளையாடாமல் இருக்கும்போது அவர்களைத் தவிர்த்து விளையாடச் சொல்வார்கள். ஆனால், திறமையான வீரர்களை எப்படி தவிர்க்க முடியும். அவர்கள் ஃபார்மில் இல்லாதபோது நாங்கள் அவர்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். 

பன்ட்  மாதிரியான வீரர்கள் ஐபிஎல் மாதிரியான தொடர்களில் ஒரு போட்டியிலே ஃபார்முக்கு வந்துவிடுவர். பன்ட் தொடக்கத்தில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அணிக்கு வெற்றி தேடி தந்திருக்கிறார். இந்த மாதிரியான தொடர்களில் அவர் 4 போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடித் தந்தாலே போதுமானது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பன்ட் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு உலகக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வு அவர் மனதில் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்” என்றார்.