Published:Updated:

டிகே-யின் கேப்டன் இன்னிங்ஸ்... ஆரோன், ஆர்ச்சர் ஆச்சர்யங்கள்... ராஜஸ்தானுக்கு `பராக்!’ #KKRvRR

டிகே-யின் கேப்டன் இன்னிங்ஸ்... ஆரோன், ஆர்ச்சர் ஆச்சர்யங்கள்... ராஜஸ்தானுக்கு `பராக்!’ #KKRvRR

ராஜஸ்தான் ராயல்ஸும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்துகொண்டு, நாங்கள் ப்ளே ஆஃபுக்குப் போகவில்லை என்றால், எந்த அணியும் போகக்கூடாது" என ஸோம்பியாக மாறி இழுத்துப்போட்டு கடித்துக்கொண்டிருக்கிறார்கள். ``இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ?!

டிகே-யின் கேப்டன் இன்னிங்ஸ்... ஆரோன், ஆர்ச்சர் ஆச்சர்யங்கள்... ராஜஸ்தானுக்கு `பராக்!’ #KKRvRR

ராஜஸ்தான் ராயல்ஸும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்துகொண்டு, நாங்கள் ப்ளே ஆஃபுக்குப் போகவில்லை என்றால், எந்த அணியும் போகக்கூடாது" என ஸோம்பியாக மாறி இழுத்துப்போட்டு கடித்துக்கொண்டிருக்கிறார்கள். ``இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ?!

Published:Updated:
டிகே-யின் கேப்டன் இன்னிங்ஸ்... ஆரோன், ஆர்ச்சர் ஆச்சர்யங்கள்... ராஜஸ்தானுக்கு `பராக்!’ #KKRvRR

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய ஏறக்குறைய ஏழு அணிகளும் கடுமையாகக் களமாடத் தொடங்கிவிட்டன. நுழையப்போகும் நான்கு அணி இவைதான் என, குத்துமதிப்பாய்க்கூடச் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொன்ன கவுதம் கம்பீருக்கே இப்போது ஊமைக்குத்தாய் விழுந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த ஐ.பி.எல்-லே அஸ்வினைப்போல் `அன்பிரெடிக்டெபிளா'க மாறியிருக்கும் இந்நேரத்தில், நேற்று நடந்த 43-வது மேட்சின் மேட்ச் ரிப்போர்ட்டைப் பார்ப்போம். #KKRvRR

ஈடன் கார்டனில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. கே.கே.ஆர் அணியில் கே.சி.கரியப்பாவுக்குப் பதிலாக ப்ரஷித் கிருஷ்ணாவும் ஹேரி கர்னிக்குப் பதிலாக ப்ராத்வெய்ட்டும் விளையாடினர். டி20 போட்டிகளில் தொடர்ந்து ஐந்துமுறை டக் அவுட்டாகி, டி20-ன் அகர்கராக உருமாறியுள்ள ஆஸ்டன் டர்னர் மற்றும் ராஜஸ்தானின் ஆஸ்தான பவுலர் குல்கர்னி ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த இருவருக்குப் பதிலாக தாமஸ் மற்றும் வருண் ஆரோன் அணியில் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற ராஜஸ்தான், பவுலிங் தேர்ந்தெடுத்தது!

கிறிஸ் லின் மற்றும் சுபமான் கில் ஓப்பன் செய்ய, ஆட்டத்தின் முதல் ஓவரை வீசத் தயாரானார் வருண் ஆரோன். `மீசையை முறுக்கு' சீனியரைப்போல் ஓங்குதாங்காய் இருந்த ஆரோனைப் பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. முதல் பந்தே 142 கி.மீ வேகம். பேட்ஸ்மேனுக்கு உள்ளே வந்த குட் லென்த் பந்து, இன்-சைட் எட்ஜாகி கிரீஸ் உள்ளேயே விழுந்தது. பதறிப்போனார் லின்! அதே ஓவரின் மூன்றாவது பந்து, பேக் ஆஃப் லென்தில் பிட்சாகி ஆஃப் திசையை நோக்கி வந்தது. `என்னத்த அடிச்சுக்கிட்டு, என்னத்த ஜெயிச்சுக்கிட்டு' என மந்தமாய் பேட்டை விளாசினார் லின். இன் சைட் எட்ஜாகி, ஸ்டெம்ப் தெறித்தது! முதல் ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே, அதுவும் லெக் பைஸில் கிடைத்தது. ஹேஹே... மீசையை முறுக்கே!

தாமஸ் வீசிய ஆட்டத்தின் இரண்டாம் ஓவரின் மூன்றாவது பந்து, ஷார்ட் பிட்சாகி அகலமாய் வந்த பந்தை பேக்வார்ட் பாயின்ட் மற்றும் கவர் பாயின்ட்டுக்கு இடையே பவுண்டரிக்கு விரட்டினார் ராணா. மூன்றாவது ஓவர் மீண்டும் ஆரோன். வெறும் 3 ரன் மட்டுமே கொடுத்தார். தாமஸ் வீசிய நான்காவது ஓவரில், கில் ஒரு பவுண்டரியும் ராணா ஒரு பவுண்டரியும் விளாசினர். பவர்ப்ளே உள்ளேயே தனது மூன்றாவது ஓவரையும் வீசினார் ஆரோன். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட, ஓவரின் நான்காவது பந்தை நான்கு ரன்களுக்கு விரட்டிய கில், கடைசிப் பந்தில் க்ளீன் போல்டானார். இந்த முறை `நக்கிள்’ பந்து, வேலையைக் காட்டியது. ``எப்படிடா அவுட் ஆனோம்!" என கில் அதிர்ச்சியாக, ``எப்படிடா அவுட் ஆக்கினோம்" என ஆரோன் பேரதிர்ச்சியானார்.

பிறகு, கேப்டன் டி.கே உள்ளே வந்தார். ராணாவும் டி.கே-வும் உருட்டிய உருட்டில் நடுவர்களுக்கே கண்கள் செருகின. ஆட்டத்தின் 9-வது ஓவரை வீச வந்தார் ஸ்ரேயாஸ் கோபால். இரண்டாவது பந்திலேயே ராணாவின் விக்கெட்டைக் கழற்றினார். வேகமாய் வந்த கூக்ளியை, பலமாய்க் கட்டடிக்க முயல, அது பேக்வார்ட் பாயின்டில் நின்றுகொண்டிருந்த ஆரோனின் கைகளில் சிக்கியது. எங்கு திரும்பினாலும் ஆரோன்தான்! சுனில் நரைன் உள்ளே வந்தார். 10-வது ஓவர் முடிவில், 49-3 என ஊர்ந்துகொண்டிருந்தது கொல்கத்தா. பஸ்ஸில் இடம்பிடிக்க பாம்பைத் தூக்கிப் போடும் போண்டா மணியைப்போல, `ஆஹாங், இது சரிப்பட்டு வராது. நம்ம ரூட்ல போயிடவேண்டியதுதான்' என ரூட்டை மாற்றினார் டிகே.

ஆட்டத்தின் 11-வது ஓவரை வீச, தன் வெள்ளை கலர் வாட்சில் மணி பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வந்தார் கோபால். முதல் பந்தை டீப்-மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு விளாசினார் டிகே. அடுத்த பந்தை தேர்டு மேன் திசையில் பொத்தினாற்போல் தொட்டுவிட, பவுண்டரி. அடுத்த பந்து, பின்னியின் கவட்டை வழியாக இன்னொரு பவுண்டரி. நான்காவது பந்தும் லாங் ஆஃப் திசையில் போய் பவுண்டரிக்குள் விழுந்தது. ஹாட்ரிக் பவுண்டரி! ஐந்தாவது பந்தை சிங்கிளுக்குத் தட்டி, கோபாலை நரைனிடம் அனுப்பிவைத்தார் கார்த்திக். நரைனும் அவர் பங்குக்கு டீப்-மிட் விக்கெட்டில் முரட்டு சிக்ஸ் ஒன்று விளாச, நொறுங்கிப்போனார் கோபால். `ஏய்... ஐயா கோவாலு... எந்திரிடா எந்திரிடா!' என அனுதாப்பட்டார் ஸ்டீவ் ஸ்மித்.

ஆர்ச்சர் வீசிய ஆட்டத்தின் 12-வது ஓவர். முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிவிட்டு ஒரு பார்வை பார்த்தார் டிகே! அதே ஓவரின் மூன்றாவது பந்தில், டபுள்ஸ் ஓடப்போய் ரன் அவுட்டானார் சுனில் நரைன். ரன் அவுட் பண்ணது யாருன்னு சொல்லுங்க... நம்ம ஆரோன்தான். எங்கு திரும்பினாலும் ஆரோன்தான்! பிறகு, நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கொல்கத்தாவின் தானோஸ், ஆண்ட்ரே ரஸல் களமிறங்கினார். ஆட்டத்தின் 14-வது ஓவரை வீச வந்தார் நம் ஆரோன். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பிவிட்டு, கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விளாசி, ஆரோனுக்குப் பரிசு கொடுத்தனுப்பினார் கார்த்திக். `இனிமேல்தான் ரஸல் ஆட்டம் ஆரம்பம்' என எல்லோரும் காத்திருந்தார்கள். 15-வது ஓவரில் ரஸலுக்கு ஒரு கேட்ச் டிராப்!

வள்ளல் உனத்கட் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை, `மடார்' என சிக்ஸுக்குத் தூக்கினார் ரஸல். `கண்ணா இது வெறும் டிரெய்லர்தான்மா' என ஆரவாரமானார்கள் கொல்கத்தா ரசிகர்கள். அதே ஓவரில் கார்த்திக்கும் ஒரு சிக்ஸர் விளாசினார். 17-வது ஓவரின் இரண்டாவது பந்தை, சிங்கிளுக்குத் தட்டி தன் அரை சதத்தை நிறைவுசெய்தார் கேப்டன் டிகே. அதே ஓவரின் மூன்றாவது பந்தில் மறுபடியும் ரஸலுக்கு ஒரு கேட்ச் டிராப்! ``இன்னைக்கு ரஸல் அடிக்கிறதைப் பார்க்கணும்னு அந்த ஆண்டவனே ஆசைப்படுறான்போல" என கொல்கத்தா ரசிகர்கள் குதூகலமாக, ஐந்தாவது பந்தை கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு நடையைக்கட்டினார் ரஸல். அப்படியும் கார்த்திக்கின் வெறியாட்டம் குறையவில்லை. அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸ்!

உனத்கட் வீசிய 18-வது ஓவரில் ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டு, கேட்ச் கொடுத்து வெளியேறினார் ப்ராத்வெய்ட். வந்தவர்கள் எல்லோரும் அவசரம் அவசரமாய்க் கிளம்ப, தனி ஆளாய்ப் போராடிக்கொண்டிருந்தார் டிகே! அதே ஓவரின் இரண்டு பவுண்டரிகள். மீண்டும் ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸ். 19-வது ஓவரின் முடிவில் 80 ரன்களில் இருந்த டிகே, சதம் அடிப்பாரா என ஆர்வமானது ஈடன் கார்டன். கடைசி ஓவரின், இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி. மூன்றாவது பந்தில் சிக்ஸர். அடுத்த பந்தில் ரன் எதுவும் இல்லை. ஐந்தாவது பந்தில் மீண்டுமொரு சிக்ஸர். இன்னும் ஒரு பவுண்டரி அடித்தால் சதம். ஆனால், கடைசிப் பந்தில் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது டிகேவால்! 10 ஓவரின் முடிவில் 49-3 எனத் தள்ளாடிக்கொண்டிருந்த கே.கே.ஆர், கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் 175-6 எனத் தலை நிமிர்ந்து நின்றது.

176 ரன் எடுத்தால் வெற்றியெனக் களமிறங்கியது ராஜஸ்தான். இந்த சீசனின் செஞ்சுரியன்களான ரஹானே மற்றும் சாம்சன் ஓப்பன் செய்ய, ப்ராத்வெய்ட் முதல் ஓவரை வீசினார். நான்காவது பந்தை கவர் திசையில் நான்கு ரன்களுக்கு விரட்டினார் ரஹானே. ப்ரஷித் வீசிய அடுத்த ஓவரில், இன்னொரு பவுண்டரியை மிட்-அன் பக்கம் விளாசினார் அஞ்சாநெஞ்சர் ரஹானே. அதே ஓவரில் சாம்சன் ஒரு சிக்ஸரும் அடித்தார். மூன்றாவது ஓவர், அப்படியே இரண்டாவது ஓவரின் ஜெராக்ஸ். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீச வந்தார் யாரா ப்ரித்விராஜ். ``யார்றா இந்த ப்ரித்விராஜ்?" என்று ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை அடித்து ஓடவிட்டார் ரஹானே! இப்படி அசுரவேகத்தில் போய்க்கொண்டிருந்த ரஹானேவை, அணை போட்டுத் தடுத்தார் நரைன். எல்.பி.டபிள்யு! பவர்ப்ளேயின் முடிவில், 55-1 என வலுவான நிலையில் இருந்தது ராஜஸ்தான்.

இந்த நிலையில்தான் கொல்கத்தாவின் விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம், சுழல் சூறாவளி, தலைவன் ப்யூஸ் சாவ்லா பந்து வீச வந்தார். மூன்றாவது பந்தான கூக்ளியில் சாம்சன் காலி. அதே ஓவரில் ஸ்டோக்ஸ் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார். அது நமக்குப் பிரச்னையில்லை! அடுத்து நரைன் வீசிய ஓவரில், ஸ்டீவ் ஸ்மித்தும் க்ளீன் போல்டு! அதே ஓவரின் ஐந்தாவது பந்தை நேராக நரைனிடம் கேட்ச் கொடுத்தார் பராக். ஆனால், அதை டிராப் செய்துவிட்டார் நரைன். ப்ரித்விராஜ் வீசிய பத்தாவது ஓவரில், ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் ப்ரித்விராஜ் ஒரு பவுண்டரியும் விளாசினர். 10 ஓவர் முடிவில் 78-3 என ராஜஸ்தானின் வேகம் குறைந்திருந்தது. மீண்டும் தலைவன் வந்தார், ஸ்டோக்ஸ் விக்கெட்டைக் கழற்றினார். அதே ஓவரில் பின்னி ஒரு சிக்ஸர் மட்டும் விளாசினார். அது நமக்குப் பிரச்னையில்லை! 

ப்ராத்வெய்ட் வீசிய 12-வது ஓவரில், பராக்குக்கு டாப் எட்ஜில் பட்டு ஒரு பவுண்டரி கிடைத்தது. அந்த ஓவரில் மொத்தம் மூன்று அகலப் பந்துகளை வேறு வீசினார் ப்ராத்வெய்ட். 13-வது ஓவரில் மீண்டும் தலைவன் வந்தார், பின்னியின் விக்கெட்டைக் கழற்றினார். அந்த ஓவரில் எந்த பவுண்டரியும் போகவில்லை, அதனால் நமக்கு எந்தப் பிரச்னையுமில்லை. ப்யூஸ் சாவ்லாவுகு நான்கு ஓவரும் முடிந்துவிட்டது என்ற தைரியத்தில், நிதானமாய் அடித்து ஆடி இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது ராஜஸ்தான். ``வேகப்பந்து போட்டால் பிரித்து மேய்கிறார்கள், சுழற்பந்து போட்டால்தான் வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள்" எனக் கண்டுபிடித்த கேப்டன் கார்த்திக், ராணாவை அழைத்து பந்தவீசச் சொன்னார். ராணா வீசிய 15-வது ஓவரில், பேக்வேர்டு பாயின்ட், ஸ்கொயர் லெக் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் என மூன்று திசைகளுக்கு மூன்று பவுண்டரிகளை பார்சல் அனுப்பிவைத்தார் கோபால். ஆனால், அடுத்த ஓவரிலேயே கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.

பிறகு, பராக்குடன் ஜோடி சேர்ந்தார் ஆர்ச்சர். ஓவருக்கு ஒரு சிக்ஸர், பவுண்டரி எனப் பக்காவாய் ஆடி, வெற்றியின் பக்கம் நெருங்கிக்கொண்டிருந்தார்கள். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பராக்கின் ஆட்டம், கடைசியில் ஹிட் விக்கெட்டால் முடிவுக்கு வந்தது. நொந்துபோனார் பராக்! கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை. ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து மேட்சை முடித்து இங்கிலாந்து ஃப்ளைட் ஏறினார் ஆர்ச்சர். ``போறதுதான் போறோம், கொல்கத்தாவை ச்சூன்னு பத்திவிட்டுப் போவோம்" எனக் கொல்கத்தாவின் கதையை முடித்துவிட்டார். டிகே-யின் அற்புதமான கேப்டன் இன்னிங்ஸ் வீணாய்ப்போனது. மேன் ஆஃப் தி மேட்ச் விருது ஆரோனுக்கு வழங்கப்பட்டது. எங்கு திரும்பினாலும் ஆரோன்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்துகொண்டு, ``நாங்கள் ப்ளே ஆஃபுக்குப் போகவில்லை என்றால், எந்த அணியும் போகக் கூடாது" என ஸோம்பியாக மாறி இழுத்துப்போட்டுக் கடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ?!