Published:Updated:

`இவர் டேவிட் இல்ல... தானோஸ்!' - கொல்கத்தாவைச் சிதறடித்த சன்ரைஸர்ஸ்! #SRHvKKR

`இவர் டேவிட் இல்ல... தானோஸ்!' - கொல்கத்தாவைச் சிதறடித்த சன்ரைஸர்ஸ்! #SRHvKKR

சன்ரைஸர்ஸ் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் தவிர்த்து மற்ற யாருமே அணியில் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும் இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டால் அதன்பின் அடித்து நொறுக்க செம ஈசியான டீமாகிவிடும் ஹைதராபாத்.

`இவர் டேவிட் இல்ல... தானோஸ்!' - கொல்கத்தாவைச் சிதறடித்த சன்ரைஸர்ஸ்! #SRHvKKR

சன்ரைஸர்ஸ் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் தவிர்த்து மற்ற யாருமே அணியில் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும் இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டால் அதன்பின் அடித்து நொறுக்க செம ஈசியான டீமாகிவிடும் ஹைதராபாத்.

Published:Updated:
`இவர் டேவிட் இல்ல... தானோஸ்!' - கொல்கத்தாவைச் சிதறடித்த சன்ரைஸர்ஸ்! #SRHvKKR

நேற்றைய ஐ.பி.எல் (#SRHvKKR) ஆட்டத்தின் விளம்பரமே `டேவிட் vs கோலியாத்' என்பதாகத்தான் இருந்தது. ஒருபக்கம் பாரபட்சமே பார்க்காமல் வெளுக்கும் வார்னர், மறுபக்கம் ஈவு இரக்கமே இல்லாமல் பந்தைக் கிழிக்கும் ரஸல் என செம போட்டியைக் காண ஆவலாக இருந்தது ஹைதராபாத். டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் மாற்றங்களில்லை. கொல்கத்தா ஒருவழியாக உத்தப்பாவை உட்கார வைத்தது. அவருக்கு பதில் ரிங்கு சிங். பிரஷித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் இருவருமே எதிர்பார்த்த ரிசல்ட் தராததால் அவர்களுக்குப் பதில் கரியப்பாவும் புதுமுகம் பிரித்விராஜும் களம் கண்டனர்.

நரைனை எதற்காக ஓபனிங் இறக்குவார்களோ அதை இந்த ஆட்டத்திலும் சிறப்பாகச் செய்தார். முதல் ஓவரில் பத்து ரன்கள், அடுத்த ஓவரில் 18 ரன்கள் என அவரும் லின்னும் ஜெட் வேகத்தில் ரன் குவித்தார்கள். 3-வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மட்டும் 14 ரன்கள். `ஆகா, என் தலைவனைப் பாரு தங்கமே' என கொல்கத்தா ரசிகர்கள் சிலிர்த்துப் போய் சவுண்டுவிடத் தொடங்கும் முன்பே மிடில் ஸ்டம்ப்பைப் பெயர்த்தெடுத்தார் கலீல் அஹமத். ஆனாலும், 3 ஓவர்களில் 44 ரன்கள் என்பது சூப்பர் ஸ்கோர்தான்.

`எப்படியும் ஸ்கோர் 200 போயிடும்ல' - `ச்சீச்சீ, 220 போயிடும்' என கொல்கத்த ரசிகர்கள் ரமேஷ் - சுரேஷ் கணக்காகப் பேசிக்கொண்டிருக்க, களத்தில் சுப்மன் கில் விக்கெட்டை கில் செய்தார் கலீல். 14-கில் இருந்த ரன்ரேட் அ.தி.மு.க எம்.எல்.ஏ எண்ணிக்கை போல படிப்படியாகக் குறைந்து ஒன்பதிற்கு வந்தது. 7 ஓவர் முடிவில் 65 ரன்கள். அடுத்த ஓவரிலேயே ரானாவும் நடையக் கட்டினார். `சரி இருப்பா, நானும் வர்றேன்' எனப் பின்னாலேயே தினேஷ் கார்த்திக்கும் கிளம்ப, `எத்தனை ஆட்டம்தான்யா ரஸலே ஆடுவாப்ல' என டென்ஷனானார்கள் ரசிகர்கள். 

ரஸலுக்கு ரெஸ்ட் விடவா, இல்லை ரைட் - லெப்ட் காம்பினேஷனை மெயின்டெயின் செய்யவா எனத் தெரியவில்லை. ரிங்கு சிங்கை களமிறக்கினார் கார்த்திக். அவர் தன் ஸ்டைலில் நிதானமாகவே ஆடினார். மறுபுறம் லின்னும் கட்டை வைக்க, ரன்ரேட் மலையில் ஏறும் சரக்கு லாரி போல தள்ளாடியது. 30 ரன்கள் எடுத்தபிறகு ரிங்குவும் அவுட்டானார். பார்ட்னர்ஷிப் 51 ரன்கள். சடசடவென விக்கெட்கள் விழுந்த வேகத்திற்கு இது தேவையான பார்ட்னர்ஷிப்தான்.

பலத்த ஆரவாரத்தோடு களமிறங்கினார் ரஸல். `ஓர் உறைல ஒரு கத்திதான் இருக்கணும்' என அவர் வந்தவுடன் லின் அவுட்டாக, பொறுப்பு மொத்தமும் 501-வது முறையாக ரஸலின் மொவ்ஹாக் தலையில் விழுந்தது. ஆனால், பாவம் அவரும் எவ்வளவுதான் தாங்குவார்? 15 ரன்களில் நடையைக் கட்டினார். கடைசி ஓவரில் கரியப்பா புண்ணியத்தில் 13 ரன்கள் சேர்த்து ரவுண்டாக 160-ஐ இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா.

வார்னரும் பேர்ஸ்டோவும் இருக்கும் ஃபார்மிற்கு ஐந்நூறு அடித்தாலும் பத்தாதுதான். போக, கொல்கத்தாவின் பௌலிங்கும் செம வீக்! முதல் ஓவரை மட்டும் பாவம் பார்த்துவிட்டு 2-வது ஓவரிலிருந்து சாத்து சாத்தெனச் சாத்தினார்கள் இருவரும். 16, 10, 11, 9, 20 - அடுத்த ஐந்து ஓவர்களில் ரத்த ரத்தமாக வாந்தியெடுத்தது பந்து. `வெள்ளை கலர்ல எதைப் பாத்தாலும் அடி பங்காளி' என ஜோடி போட்டுக்கொண்டு வெளுத்தார்கள். பவர்ப்ளே முடிவில் 72 ரன்கள். டீம் ஸ்ட்ரைக் ரேட்டே 200! அட அவங்க எப்பயுமே அப்படித்தான் பாஸ்! ஒன்பது இன்னிங்ஸ்களில் இந்த ஜோடி அடிக்கும் ஏழாவது 50+ பார்ட்னர்ஷிப் இது.

அதன்பின் அவர்களுக்கே போர் அடித்ததோ என்னவோ கொஞ்சமாகக் கட்டுப்பட்டார்கள். ஆனாலும், ரன்ரேட் 11-க்குக் குறையவில்லை. கரியப்பாவின் ஒரே ஓவரில் 18 ரன்கள் அடித்து அந்த மிஸ்ட்ரி ஸ்பின்னரின் கேரியரையே காலி செய்தார் வார்னர். 10 ஓவர் முடிவில் 109 ரன்கள். 30 பந்துகளில் வார்னர் 52 ரன்கள். பேர்ஸ்டோ 52 ரன்கள். `சேம் பின்ச்' என சியர்ஸ் அடித்துக்கொண்டு திரும்பவும் ரன்வேட்டை ஆடினார்கள். ஒருகாலத்தில் பெரிய வஸ்தாதாக இருந்த நரைனை பந்துகளை எல்லாம் பறக்கவிட்டபடி இருந்தார் வார்னர். 

கடைசியாக புதுமுகம் பிரித்வி வந்து வார்னரை போல்டாக்கினார். நியாயமாக முன்பே பேர்ஸ்டோ விக்கெட்டும் அவருக்கு கிடைத்திருக்கவேண்டியது. இரு கேட்ச்களை சூப்பராகக் கோட்டைவிட்டார்கள் கொல்கத்தா ஃபீல்டர்கள். வார்னர் அவுட்டாகும்போதே ஸ்கோர் 131. ஏழு ஓவர்கள் கைவசமிருந்தன. இதற்குமேல் சம்பிரதாய ஆட்டம்தானே! ஆனாலும், பேர்ஸ்டோ விடுவதாயில்லை. ஏற்கெனவே குனிந்து கும்பிடு போட்டுவிட்ட கொல்கத்தா பவுலர்களை தலையிலேயே குட்டி ஆட்டத்தை முடித்துவைத்தார். 15 ஓவரில் 19 ரன்கள். தி எண்ட்!

சன்ரைஸர்ஸ் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஆனால், ஓபனிங் பேட்ஸ்மேன்கள் தவிர்த்து மற்ற யாருமே அணியில் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும் இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டால் அதன்பின் அடித்து நொறுக்க செம ஈசியான டீமாகிவிடும் ஹைதராபாத். மறுபுறம், ரஸல் புண்ணியத்தில் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது கொல்கத்தா. மிடில் ஆர்டர் பேட்டிங்கும், பௌலிங்கும் ரொம்பவே மோசம். கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ஃபார்மும் மோசமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளை சரி செய்யாவிட்டால் தொடர்ந்து ஆறு தோல்விகள் என்ற மோசமான சாதனையை பெங்களூருவோடு பங்கு போட்டுக்கொள்ளவேண்டியதுதான்.