Published:Updated:

`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை!' - ஃபிளமிங்

`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை!' -  ஃபிளமிங்
`தோனியின் முடிவுகளை என்றுமே சந்தேகப்பட்டதில்லை!' - ஃபிளமிங்

தோனியின் முடிவுகளை குறிப்பாக கடைசி ஓவர்களின்போது எடுக்கப்படுபவை குறித்து என்றுமே கேள்வி எழுப்பியதில்லை என சி.எஸ்.கேவின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்திருக்கிறார். 

பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதலில் பேட் செய்த பெங்களூரு, சென்னை அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சேஸிங்கின்போது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சி.எஸ்.கேவுக்குக் கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 19வது ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்படவே, கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற சூழல் உருவாகியது. உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி மற்றும் 2 ரன்கள் என 24 ரன்கள் எடுத்தார் தோனி. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்து தோனியின் பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலிடம் சென்றது. அந்த பந்தில் நான் ஸ்டிரைக்கர் பேட்ஸ்மேனான தாக்கூரை பார்த்திவ் ரன் அவுட் செய்ய, ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு த்ரில் வெற்றிபெற்றது. இந்த இன்னிங்ஸின்போது பிராவோ மறுமுனையில் நின்றிருந்த சூழலிலும் சிங்கிள் எடுப்பதை தோனி தவிர்த்தார். அந்த சிங்கிள்களை தோனி எடுத்திருந்தால் சி.எஸ்.கே வெற்றிபெற்றிருக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. 


போட்டிக்குப் பின்னர் பேசிய தோனியிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தோனி, ஆடுகளத்தின் தன்மை புதிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும் என்பதாலே அந்த சிங்கிள்களைத் தவிர்த்ததாகக் குறிப்பிட்டார். அந்தச் சூழலில் 3 பந்துகளை மட்டுமே பிராவோ எதிர்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 51 ரன்களுடன் களத்தில் இருந்த தான், அதிக பந்துகளை எதிர்க்கொண்டிருந்ததால், பௌண்டரிகள் தேவை என்ற சூழலில் அந்த ரிஸ்கை எடுக்கலாம் என்று முடிவு செய்ததாக தோனி குறிப்பிட்டார். 

இதேபோல், தோனியின் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியதில்லை என்று சி.எஸ்.கேவின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பிளமிங்,`தோனி களத்தில் எடுக்கும் முடிவுகள் குறிப்பாக கடைசி ஓவர்களில் எடுக்கும் முடிவுகள் குறித்து நான் என்றுமே கேள்வி எழுப்பியதில்லை. ஏனென்றால், தன்னால் சிக்ஸர்கள் விளாச முடியும் என்ற நம்பிக்கை தோனிக்கு இருப்பதுதான். தனது செயல்பாடுகளை மையமாக வைத்து கடைசி ஓவர்கள் குறித்து அவர் திட்டமிடும் முறை அப்படியானது.  

Photo Credit: IPLt20.com

தோனி, எப்போதும் தெளிவான திட்டமிடலுடன் இருப்பவர். கடைசி ஓவர்கள் குறித்து அவரிடம் எப்போதுமே நான் கேள்வி எழுப்பியதில்லை. பிராவோவுக்கு அந்தத் திறன் இருந்தும், இப்படித்தான் போட்டியை முடிக்க வேண்டும் என தோனி விரும்பினால், நான் எப்போதும் தோனியின் முடிவுக்கே பக்கபலமாக நிற்பேன். அவர் இதைப் பலமுறை செய்திருக்கிறார். இன்றைய (நேற்றைய போட்டி) போட்டியிலும் கூட வெற்றிக்கு மிக அருகில் நாங்கள் வந்துவிட்டோம். எனவே, நான் எப்போதும் அதுகுறித்து கேள்வி எழுப்புவதில்லை'' என்றார்.

பேட்டிங் ஆர்டர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பிளமிங், `எங்களது அணி வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொண்டிருக்கிறது. திறமையான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், குறிப்பிடத்தக்க பாட்னர்ஷிப்புகளை அமைக்க அவர்கள் தவறுகிறார்கள். வீரர்கள் பார்முக்குத் திரும்புவார்கள். தோனி மற்றும் ராயுடு ஆகியோரை மட்டுமே அதிகம் சார்ந்திருந்தால் ஐபிஎல் தொடரை எங்களால் வெல்ல முடியாது' என்றார்.