Published:Updated:

மேட்சை கோலி ஜெயிச்சிருக்கலாம்… மனசை ஜெயிச்சது தோனி! #RCBvCSK

மேட்சை கோலி ஜெயிச்சிருக்கலாம்… மனசை ஜெயிச்சது தோனி! #RCBvCSK
News
மேட்சை கோலி ஜெயிச்சிருக்கலாம்… மனசை ஜெயிச்சது தோனி! #RCBvCSK

மேட்சை கோலி ஜெயிச்சிருக்கலாம்… மனசை ஜெயிச்சது தோனி! #RCBvCSK

`19-வது ஓவர்ல தோனி ஏன் சிங்கிள் எடுக்கலை…’

`கடைசி ஓவர்ல 3 சிக்ஸ் பாத்தியா… அதுல ஒண்ணு 111 மீட்டர்… ஸ்டேடியத்துக்கு வெளியே!’

`என்ன பிரயோஜனம்… அந்த 3 பால் வேஸ்ட் பண்ணாம இருந்திருக்கலாம்!’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`பிராவோவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருந்தாலும், அவனால அந்த நேரத்துல அடிச்சிருக்க முடியாது!’

`மாங்கு மாங்குனு அடிச்சி என்னத்துக்கு… மேட்ச் ஜெயிக்கலையே?!’

`மேட்ச் தோத்தா இப்ப என்னா..?’

ஆம், ரசிகர்கள் இப்படித்தான். `வெற்றி யாருக்கு வேண்டும்?’ என துச்சமாகக் கடந்துவிடுவார்கள். தோல்வி அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர்களின் தேவையெல்லாம், `ஜெயிக்கிறமோ, இல்லையோ சண்டை செய்யணும்!’

வெற்றி, தோல்விகளைக் கடந்து ஒரு பரவச நிலையைக் கொடுப்பதுதான் ஸ்போர்ட்ஸின் பியூட்டி! எல்லாப் போட்டிகளும் அப்படியொரு தரிசனத்தைக் கொடுப்பதில்லை. ஆனால், ரைவல்ரிகள் மோதலில் ரசிகர்கள் அதை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். #RCBvCSK ரைவல்ரியில் சேப்பாக்கத்தில் மிஸ்ஸான அந்த பியூட்டி, பெங்களூருவில் க்ளிக்காகி விட்டது.

2019 ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியில் சி.எஸ்.கே-விடம் மோசமாக தோற்ற ஆர்.சி.பி, அதற்கு பெங்களூருவில் பழி தீர்க்க காத்திருந்தது. அதற்கான தருணம் நேற்று வந்தது. தோனி, பிராவோ மீண்டும் அணிக்குத் திரும்ப, சிராஜுக்குப் பதிலாக இடம்பிடித்தார் உமேஷ் யாதவ். கூடவே, ஏபிடி இஸ் பேக். டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு 161 ரன்கள் எடுத்தது. சேஸிங்கில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முடியாமல் தோற்றது சி.எஸ்.கே. 1 ரன்னில் ஆர்.சி.பி த்ரில் வெற்றி. இந்த சீசனின் பெஸ்ட் மேட்ச்களில் ஒன்றாக சிலாகிக்கப்படும் இந்தப் போட்டியில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றிய ஓர் அலசல்…

பார்த்திவ் படேல்:

இந்த சீசனில் ஆர்.சி.பி-யின் அன்சங் ஹீரோ! நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி சார்பில் அதிக ரன்களும், சிக்ஸர்களும் அடித்தவர். ஷர்துல் தாக்கூர் வீசிய ஷார்ட் பாலை டைமிங் புல் ஷாட் மூலம் டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸர் அடித்த பார்த்தீவ், ஷர்துல் வீசிய அடுத்த ஓவரில் ஃபைன் லெக் பக்கம் ஃபிளிக் செய்தார். அதுவும் சிக்ஸ். பொதுவாக, பவர்பிளேவில் அக்ரசிவாக ஆடிவிட்டு, அடுத்தடுத்த ஓவர்களில் பௌண்டரியைக் கிளியர் செய்யத் தடுமாறும் பார்த்திவ் நேற்று, 7-வது ஓவரை வீசிய ஜடேஜாவின் பந்தை ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸர் பறக்கவிட்டதெல்லாம் அட்டகாசம். 37 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் அடிப்பது பெரிய விஷயமில்லை. பவர்பிளேவில் தீபக் சாஹரின் வலையில் சிக்காமல், நேர்த்தியாக ஆடி, பெங்களூருவின் மொத்த ஸ்கோரில் பெருவாரியான ரன்களை எடுத்த பார்த்திவ், `மேன் ஆஃப் தி மேட்ச்’ வாங்கியதில் ஆச்சர்யமில்லை.

அடித்த ரன்களுக்காக மட்டுமே அந்த ஆட்ட நாயகன் விருது கிடைக்கவில்லை. கடைசி பந்தில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி, 1  ரன் எடுத்தால் `டை’ என்ற சூழலில், ஷர்துல் தாக்கூரை ரன் அவுட் செய்தாரே பார்த்திவ்... அதற்கும் சேர்த்துத்தான் இந்தப் பாராட்டு. `தோனி கடைசி பந்தை மிஸ் செய்வார் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்படியொரு தருணம் வரும் என மூன்றாவது பந்திலிருந்தே காத்திருந்தேன். கடைசி பந்தில் அப்படியொரு வாய்ப்பு வந்தது. கிளவுஸை கழற்றி தயாராக இருந்தேன். அவ்வளவுதான்‛ என, வெற்றித் தருணத்தை நினைவுகூர்ந்தார் பார்த்திவ்.

டி வில்லியர்ஸ்

ஆர்.சி.பி ஜெயிக்கிறதோ இல்லையோ, பெங்களூருவில் டி வில்லியர்ஸ் தோற்பது அரிது. ஆர்.சி.பி-க்கு, கேப்டன் விராட் கோலி- டி  வில்லியர்ஸ் இணைந்து அடித்த ரன்கள்தான் எக்கச்சக்கம். ஆனால், தீபக் சாஹர் பந்தில் தேவையில்லாமல் டிரைவ் ஆட நினைத்து கேட்ச் கொடுத்து, கோலி 8 ரன்களில் வெளியேறியதால், பொறுப்பு முழுவதும் ஏபிடி தலையில் விழுந்தது. டி வில்லியர்ஸும் அடித்தார். 19 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். தீபக் சாஹர் பந்தில் சிக்ஸர், ஷர்துல் தாக்கூர் பந்தில் அடுத்தடுத்து பௌண்டரி என ரன்ரேட் இறங்காமல் பார்த்துக் கொண்டார். கூடவே, எந்நேரமும் அவுட்டாகலாம் என ரசிகர்களை பீதியிலேயே வைத்திருந்தார். டு ப்ளெஸ்ஸி கேட்ச்சை மிஸ் செய்தபோதே ஏபிடி சுதாரித்திருக்க வேண்டும். நிதானமாக இருந்து பின்னர் வெளுத்திருக்கலாம். ப்ச்…

மொயின் அலி:

பவர் ஹிட்டர்களை கடைசியாக இறக்கிவிட்டு, `நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம்’ எனப் புலம்புகிறார்கள் கேப்டன்கள். இப்படித்தான் நேற்று, ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் ஆண்ட்ரே ரஸலை, காலம் தாழ்த்தி இறக்கினார் டிகே. கோலியும் அப்படித்தான் மொயீன் அலியை 6-வது வீரராக களமிறக்கினார். மொயீன் அலி நான்காவதாக இறங்கிய கடைசி இரண்டு போட்டிகளில் 32 பந்துகளில் 50 ரன்கள், 28 பந்துகளில் 66 ரன்கள் அடித்து அசுரத்தனமான ஃபார்மில் இருந்தார். ஆனால், சி.எஸ்.கே-வுக்கு எதிராக அவர் களமிறங்கியபோது 4.2 ஓவர்களே மிச்சமிருந்தது. இருந்தாலும், கிடைத்த வாய்ப்பில் சரட்டு சரட்டென 5 பௌண்டரிகள் அடித்து 26 ரன்கள் சேர்த்து விட்டார். முன்கூட்டியே இறக்கி இருந்தால், டீப் மிட் விக்கெட், ஸ்கொயர் லெக்கில் சிக்ஸர்களைப் பார்த்திருக்கலாம்.

தீபக் சாஹர்

4 ஓவர், 25  ரன், 2 விக்கெட், எகானமி : 6.25, டாட் பால்கள்: 16, அதில் பவர்பிளேவில் மட்டும் 14. இந்த சீசனில் சி.எஸ்.கே-வுக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட், தீபக் சாஹர். ஒவ்வொரு போட்டியிலும் பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்தி, எதிரணியின் டாப் ஆர்டரை நிலை குலையச் செய்யும் தீபக், ஆர்.சி.பி-யையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, கோலி விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

கோலிக்கு தீபக் வீசியது 5 பந்துகள். ஃபுல் லென்த்தில் வந்த முதல் பந்தை டிஃபண்ட் செய்தார் கோலி, அடுத்த பந்தில் லைனை மிஸ் செய்தார் தீபக். ஏற்கெனவே கிரிஸிலிருந்து முன்னேறி இருந்த கோலி, அழகாக ப்ளிக் செய்து அதை ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்து.. குட் லென்த்தில் விழுந்து அவுட் ஸ்விங். கோலி அதைத் தொடவில்லை. ஃபீல்டிங்கில் மாற்றம். தேர்டு மேன் மட்டும் இருக்க, கல்லி, கவர், மிட் ஆஃப் என எல்லா ஏரியாவிலும் பக்கா ஃபீல்டர்கள். அடுத்த பந்தில் இறங்கி வந்து அடிக்க முயன்றபோது அது எட்ஜாகி பௌண்டரி. உன்னிப்பாகக் கவனித்தால், அவுட் சைடில் வரும் பந்துகளை கோலி டிரைவ் ஆடுவதிலேயே குறியாக இருப்பது தெரிந்தது. அடுத்த பந்தை குட் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்தார் தீபக். கோலி டிரைவ் ஆடினார். எட்ஜாகி அது கீப்பர் தோனியிடம் தஞ்சமடைந்தது. தீபக் வலையில் விழுந்தார் கோலி.  

தோனி:

பிட்ச் ஸ்விங்குக்கு ஒத்துழைப்பதை கவனித்த ஸ்டெய்ன், முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் டேஞ்சரஸ் வாட்சன், துல்லிய யார்க்கரில் சுரேஷ் ரெய்னாவை காலி செய்தார். உமேஷ் யாதவ் பந்தில் டு ப்ளெஸ்ஸி, கேதர் ஜாதவ் அவுட்டாக, பவர்பிளே முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது சென்னை. ஆனாலும், `தலைவன் இருக்கான். பாத்துப்பான்’ என தோனி மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். அம்பதி ராயுடு – தோனி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தது. ஆட்டம் சுணக்கமான இடமும் இதுதான்.

இருந்தாலும், டி-20-யில் ஜெயிக்க ஒரு மோசமான ஓவர் போதும் என்பதால், அந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தார் தோனி. ஆனால், ராயுடு அவுட், துரதிர்ஷ்டவசமாக ஜடேஜா ரன் அவுட்டாக, வழக்கம்போல பிரஷர் எகிறியது. 18 பந்துகளில் 49 ரன்கள் தேவை. ஸ்டெயனின் கடைசி ஓவரில் தன் டிரேட்மார்க் ஸ்டைலில் லாங் ஆன் பக்கம் சிக்ஸர் பறக்கவிட, `மேட்ச் இன்னும் நம்ம கையிலதான் இருக்கு’ என உற்சாகமானார்கள் சி.எஸ்.கே ரசிகர்கள். ஆனால், எதிர்முனையில் இருக்கும் பிராவோ நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கி இருக்கிறார். அதனால், முடிந்தவரை தானே ஸ்ட்ரைக் செய்ய வேண்டும் என்பதில் தோனி தீர்க்கமாக இருந்தார்.

சைனி வீசிய 19-வது ஓவரில் முதலிரண்டு பந்துகளின் ரன் வரவில்லை. ஆனாலும், தோனி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவில்லை. அதுவரை கட்டுக்கோப்பாக வீசிய சைனி, நோபால் வீச அதை அலுங்காமல் தேர்டு மேன் ஏரியாவில் சிக்ஸர் அனுப்பினார். வேறு வழியில்லை. கடைசி பந்தைச் சந்தித்தார் பிராவோ. ஆனால், அதே பந்தில் அவர் அவுட்.

ஆறு பந்துகளில் 26 ரன்கள் தேவை. சாத்தியமா? உமேஷ் இருக்க பயமேன்! ஆம், உமேஷ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்து பௌண்டரி. ஷார்ட் லென்த்தில் விழுந்த அடுத்த பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி வைத்தார் தோனி. அம்மாடியோவ்! அடுத்த பந்து லாங் ஆஃபில் சிக்ஸர். கேட்ச் பிடிக்க ஏதுவாக ஏபிடி நின்றிருந்தும் பந்து அவரிடம் சிக்கவில்லை. தலை மேல் கைவைத்தனர் ஆர்.சி.பி-யன்ஸ். நான்காவது பந்தில் இரண்டு,  ஐந்தாவது பந்தில் சிக்ஸர் பறக்கவிட, கடைசி பந்தில் 2 ரன் தேவை… `டிபிகல்’ சென்னை மேட்ச்.

அதுவரை எக்குத்தப்பாக வீசிய உமேஷ் கடைசி பந்தை ஒழுங்காக வீசினார். பந்து தோனியின் பேட்டில் படவில்லை. ஒரு ரன் எடுத்தால் டை என்பதால், தோனி `நான் ஸ்ட்ரைக்கர்’ எண்டுக்கு ஓடினார். எதிர்முனையில் இருந்த ஷர்துல் தாக்கூர், கிரிஸுக்கு வரும் முன் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல் ஸ்டம்ப்பை பதம் பார்த்து விட்டார். ஆர்.சி.பி வெற்றி. 

`புதிதாக வரும் பேட்ஸ்மேன், இந்தப் பிட்ச்சில் ரன் அடிப்பது சிரமம். அதிக ரன் தேவைப்பட்டதால், ரிஸ்க் எடுக்க நினைத்தேன்’ என, 19-வது ஓவரில் சிங்கிள் ஓடத் தவிர்த்ததற்கு காரணம் சொன்னார் தோனி. அதற்கேற்ப கடைசி ஓவரில் வெளுத்தும் விட்டார். மேட்ச் தோற்றாலும், இப்படியொரு மேஜிக்கை நிகழ்த்தியதற்காகவே தோனியை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், வென்றும் கோலி மீது விமர்சனங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், இன்னமும் கேப்டன்ஷியில் பிடிவாதமாக சில முடிவுகளை எடுக்கிறார். பல ஆப்ஷன்கள் இருந்தும்... டெத் ஓவரில் உமேஷின் லட்சணம் தெரிந்தும்... அவருக்கு ஏன் கடைசி ஓவர் கொடுத்தார்? மொயீன் அலிக்கு ஏன் ஓவரே கொடுக்கவில்லை, ஏபிடி-யைப் போல உமேஷிடம் சென்று ஏன் பேசவில்லை என, கோலி முன் பல கேள்விகள். 

சி.எஸ்.கே-வுக்கு இந்தத் தோல்வியும், ஆர்.சி-பி-க்கு இந்த வெற்றியும் பெரிய விஷயமே இல்லை. அதைத் தவிர்த்து கவனிக்க பல விஷயங்கள் இருக்கின்றன!