Published:Updated:

`சேஸிங்ல 52 டாட் பால் வச்சிருந்தா எப்படி பாஸ் ஜெயிக்க முடியும்?’ - #KKRvRCB

`சேஸிங்ல 52 டாட் பால் வச்சிருந்தா எப்படி பாஸ் ஜெயிக்க முடியும்?’ - #KKRvRCB
News
`சேஸிங்ல 52 டாட் பால் வச்சிருந்தா எப்படி பாஸ் ஜெயிக்க முடியும்?’ - #KKRvRCB

`சேஸிங்ல 52 டாட் பால் வச்சிருந்தா எப்படி பாஸ் ஜெயிக்க முடியும்?’ - #KKRvRCB

ஈடன் கார்டனில் நேற்று நடந்த ஐ.பி.எல் ( #KKRvRCB) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. கே.கே.ஆர் பிளேயிங் லெவனை மாற்றவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக ஏபி டி வில்லியர்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. டெய்ல் ஸ்டெயின் இந்த சீஸனில் முதன்முறையாகக் களமிறங்கினார். சக தென்னாப்பிக்க வீரர் ஹென்ரிச் கிளாசனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பவர் ஹிட்டர்கள் இருக்கும் தைரியத்தில் டாஸ் வென்றதும் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார் கொல்கத்தா கேப்டன் டிகே.

முதல் பேட்டிங் செய்த ஆர்.சி.பி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. உபயம்: மொயீன் அலி அரைசதம் - விராட் கோலி சதம். இந்த சீஸனில் (இந்த சீஸன் மட்டும்தானா?) விராட் கோலியின் கேப்டன்ஷிப் பயங்கர சொதப்பல். ஆனாலும், விடாப்பிடியாகச் சில முடிவுகளை எடுக்கிறார். அது சரியே என நியாயப்படுத்துகிறார். அதற்காக எந்த அளவுக்கும் போராடத் தயாராக இருக்கிறார். நேற்றும் அப்படியொரு தருணம். ஏபி டி வில்லியர்ஸ் விளையாடவில்லை. ஆர்.சி.பி-யின் பெரும்பாலான போட்டிகளில் ஏபி டி - கோலி பார்ட்னர்ஷிப்தான் அணியைக் கரை சேர்த்திருக்கிறது. எனவே, இந்தப் போட்டியில் அதிக பொறுப்புடன் ஆட வேண்டிய கட்டாயம் கோலிக்கு...

எதிர்பார்த்தது போலவே கோலியின் ஆட்டத்தில் பயங்கர நிதானம். 40 பந்துகளில்தான் அரைசதம் அடித்தார். அதிலும் இரண்டு பௌண்டரிகளில் ஒன்று டாப் எட்ஜ், இன்னொன்று மிஸ் ஃபீல்டில் வந்தவை. மொயீன் அலி வந்து பளார் பளார் என வெளுத்து வாங்கிய பிறகே, ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. அதன்பின்னரே கோலியின் ஆட்டத்திலும் சூடு பிடித்தது. முதல் 50-ஐ அடிக்க 40 பந்துகளைச் சந்தித்த கோலி, அடுத்த 50 ரன்களை அடிக்க சந்தித்த பந்துகள் 17. டி-20-யில் ஒரு பேட்ஸ்மேன் ஃபார்முக்கு வர ஒரு ஓவர் போதும். கோலிக்கு அப்படி ஒரு ஓவர் கிடைத்தது. கர்னே வீசிய 17-வது ஓவரில் 1 சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடித்தபின் கோலியின் கான்ஃபிடென்ட் லெவல் அதிகரித்தது. அதே சூட்டில் சதமும் அடித்தார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோலியின் சதத்தைவிட மொயீன் அலியின் அரைசதம்தான் அட்டகாசம். ஆர்.சி.பி-யின் இன்னிங்ஸை மொயீன் அலிக்கு முன், மொயீன் அலிக்குப் பின் என இரண்டாகப் பிரித்துவிடலாம். மொயீன் அலி இடதுகை பேட்ஸ்மேன், அவருக்கு லெக் ஸ்பின்னர் இருந்தால் நன்றாக இருக்கும், அவர் எப்படியும் குல்தீப்பின் ஹூக்ளியில் சிக்கிவிடுவார் எனத் தினேஷ் கார்த்திக் ஒரு கணக்கு வைத்திருப்பார்போல. ஆனால், மொயீன் அலி தெளிவாக இருந்தார். கொல்கத்தா ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனப் பக்காவாக ஹோம்வொர்க் செய்து வந்திருந்தார். குல்தீப் வீசிய அவரது மூன்றாவது ஓவரின் முதல் பந்தையே டவுன் தி லைன் வந்து சிக்ஸர் பறக்கவிட்டார். கூடுதலாக இன்னொரு பௌண்டரி. அப்போதே குல்தீப் நொந்துவிட்டார்.  `வச்சு செஞ்சுட்டான்’ என்போம் இல்லையா... அதை குல்தீப்பின் கடைசி ஓவரில் செய்தார் மொயீன் அலி. குல்தீப்பின் கடைசி ஓவரில் 27 ரன்கள். ஓவர் முடிந்ததும், கேப்பை தூக்கியெறிந்து விரக்தியைப் பதிவு செய்தார் குல்தீப். இந்த சீஸனில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த ஐந்தாவது பெளலர் என்ற பேர் வேற! அவர் மறக்க நினைக்கும் ஓவர் இது! 

15-வது ஓவரின் முதல் பந்து. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்ததை அழகாக கவர் திசையில் பௌண்டரி அடித்தார் அலி. அடுத்த பந்தில் என்ன செய்வது என்று தெரியாமல் லைன் அண்ட் லென்த்தை மிஸ் செய்தார் குல்தீப். ஃபுல் லென்த்தில் அவுட் சைடில் பிட்ச்சான பந்தை மொயீன் அலி ஸ்டம்ப்பிலிருந்து ஒரு ஸ்டெப் விலகி ஸ்லாக் ஸ்வீப் அடித்தார். சிக்ஸர். குல்தீப் கூனிக்குறுகிவிட்டார். அலி அந்நேரம் அரைசதம் கடந்திருந்தார். பெளலரின் தன்னம்பிக்கை குறைந்தது. பேட்ஸ்மேனின் தன்னம்பிக்கை அதிகரித்தது. அடுத்த பந்தும் அதே லைன், அதே லென்த்... இந்த முறை ஸ்ட்ரெய்ட்டில் பௌண்டரி அடிக்க, அடுத்த பந்தை ஸடம்ப்பை நோக்கி வீச முடிவு செய்தார் குல்தீப். அது நல்ல பந்துதான். 

ஆனால், பேட்ஸ்மேன் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும்போது எப்படி அடித்தாலும் பௌண்டரி போகுமல்லவா? அப்படித்தான் அதுவும் லாங் ஆனில் சிக்ஸரானது. பதற்றத்தில் அடுத்த பந்தை வைட் போட்டார் சைனாமேன் பெளலர். ரிலாக்ஸாக இருந்த அந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர், 5-வது பந்தை அலேக்காக லாங் ஆன் பக்கம் சிக்ஸர் தட்டிவிட்டார். கடைசியாக `ரவுண்ட் தி விக்கெட்’ வந்து வீசிய கடைசி பந்தில் விக்கெட் கிடைத்தது. மொயீன் அலி அவுட். ஆனால், அதற்குள் அணிக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டார். 34 பந்துகளில் 6 சிக்ஸர் உட்பட 66 ரன்கள் அடித்து டிரீம் லெவனில் அவரை கேப்டனாக எடுத்தவர்களின் நெஞ்சில் பால் வார்த்தார் மொயீன் அலி. 

இமாலய ஸ்கோரை சேஸிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய கொல்கத்தாவுக்கு, பவர் ஹிட்டர் கிறிஸ் லின் ஏமாற்றினார். ஸ்டெய்ன் வீசிய முதல் பந்திலேயே அவுட்டாகி இருந்திருப்பார். ஸ்லிப்பில் இருந்த ஸ்டாய்னிஸ் அழகான கேட்ச்சை அற்புதமாக மிஸ் செய்தார். கண்டம் தப்பிய கிறிஸ் லின் வெளுத்துவிடுவார் என நினைக்க, அதே ஓவரில் மிட் ஆஃபில் இருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டெய்னின் இரண்டாவது ஓவரில் மூன்று பௌண்டரி அடித்த நரைன், 18 ரன்களில் அவுட்டானார். `சுப்மான் கில்லை டாப் ஆர்டரில் இறக்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு செவி கொடுத்து, அவரை நான்காவது இறக்கிவிட்டார் டிகே. (அந்த இடத்தில் அவரை இறக்க வாய்ப்பில்லை எனப் போட்டிக்கு முந்தைய நாள் சொன்னது வேறு விஷயம்). ஆனால், சுப்மான் கில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறினார். ஆக, பவர்பிளே முடிவில் 37 ரன்களில் 3 விக்கெட்டை இழந்தது தத்தளித்தது கே.கே.ஆர். 

நிதிஷ் ராணா - உத்தப்பா ஜோடி அநியாயத்துக்கு மொக்கை போட்டது. அதிலும் உத்தப்பா ஆட்டம் சுத்தம்! அடித்தும் ஆடாமல், அவுட்டும் ஆகாமல் கொல்கத்தா ரசிகர்களைக் கடுப்பேற்றினார். அவர் 19 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். உத்தப்பா அவுட்டாகி, ரஸல் இறங்கிய பிறகே, கொல்கத்தா மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. ராணா அடித்த பந்தும் பௌண்டரி எல்லையத் தொட்டது. 49 பந்துகளில் 135 ரன்கள் தேவை என்ற சூழலில் களமிறங்கினார் ரஸல். ஸ்பின்னுக்கு எதிராக ரஸலின் ஸ்ட்ரைக் ரேட் கம்மி என்ற முந்தைய புள்ளி விவரங்களை அடித்து நொறுக்கும் விதத்தில், சாஹல் பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து, கொல்கத்தா ரசிகர்களைக் குதூகலப்படுத்தினார். நித்திஷ் ராணாவும் டாப் கியரில் வேகமெடுத்தார். இருவரும் போட்டிபோட்டு வெளுக்க, 18 பந்துகளில் 61 ரன்கள் தேவை என்ற நிலை.

ரஸல் இருக்கும் தைரியத்தில்... `ஒரு ஓவருக்கு 20 ரன்... மூணு ஓவருக்கு 60 ரன்... ஈஸியா அடிச்சிரலாம்’ எனக் கணக்குப் போட்டார்கள் ரசிகர்கள். கடைசி நேரத்தில் ஆர்.சி-பி-யின் பெளலங்கும் அந்த லட்சணத்தில்தான் இருந்தது. ஸ்டெய்ன் வீசிய அவரது கடைசி ஓவரில் 18 ரன், ஸ்டாய்னிஸ் வீசிய 19-வது ஓவரில் 19 ரன் கிடைக்க, கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. `ரஸல் இருக்காப்ல... நாலே நாலு சிக்ஸுதான்’என கணக்குப் போட்டார்கள். ஆனா, பெளலர் யாரு என்ற கேள்வி வந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவர். ஆனால், அதுதான் மொயீன் அலியின் முதல் ஓவர். ஏற்கெனவே, அலி அரைசதம் அடித்திருந்ததால், இந்த நாள் அவருடைய நாள் என்பது மட்டும் தெளிவானது. மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்த ரஸல், நான்காவது பந்தில் ரன் எடுக்கவில்லை. ராணாவுக்கும் ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை. கடைசியாக ரன் அவுட் முறையில் ரஸல் அவுட்டாக, கொல்கத்தாவின் வெற்றிக் கனவுக்கும் எண்டு கார்டு விழுந்தது.

கொல்கத்தா முதல் 10 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பெங்களூருவைப் போலவே கடைசி நேரத்தில்தான் வேகமெடுத்தது. ஆனால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீக்கிரமே அவுட்டானதாலோ என்னவோ மிடில் ஓவர்களில் ரன்ரேட் செல்ஃப் எடுக்கவில்லை. ராணா, உத்தப்பா இருவருமே பௌண்டரியைக் கிளியர் செய்யத் தவறினர். கொல்கத்தா இன்னிங்ஸில் மொத்தம் 52 டாட் பால்கள். டி-20-யில் சேஸிங்கில் இத்தனை டாட் பால்கள் வைத்திருந்தால், அணியில் எப்பேற்பட்ட கொம்பன் இருந்தாலும் தோல்வியடையத்தான் நேரிடும். ரஸல் சூறாவளியாகச் சுழன்றும் ஈடன் கார்டன் மூச்சு வாங்கி நின்றதற்கு காரணம் அதுதான்!

Photo Courtesy: www.iplt20.com