Published:Updated:

டெல்லியும் சொந்த கிரவுண்டும்... தொட்டுத் தொடரும் தோல்விகள்! #DCvMI

டெல்லியும் சொந்த கிரவுண்டும்... தொட்டுத் தொடரும் தோல்விகள்!  #DCvMI
News
டெல்லியும் சொந்த கிரவுண்டும்... தொட்டுத் தொடரும் தோல்விகள்! #DCvMI

போட்டியில் வென்ற மும்பை இரண்டாம் இடம் என்றாலும், தோற்ற டெல்லியும் சேஃபாக மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. டெல்லி இந்த முறையாவது பிளே ஆஃப் செல்லுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

நேற்று ஃபெரோஷா கோட்லாவில் டெல்லி கேப்பிட்டல்ஸுடன் மோதியது மும்பை இந்தியன்ஸ். 2012-க்குப் பிறகு டெல்லிக்குச் சிறப்பான சீசன் இதுதான். விளையாடிய எட்டுப் போட்டிகளில் ஐந்து வெற்றியுடன், ரோஹித்தின் மும்பையை எதிர்கொண்டது. சென்னை மாதிரியான அணிகளுக்கு ஹோம் கிரவுண்டுதான் எல்லாமே! #DCvMI

`மாரியாத்தா’ துணையில் சென்னையை சென்னையில் வீழ்த்துவது கடினம் (முதலில் அங்கு பேட்டிங் செய்வதே கடினம்). டெல்லிக்கு நேர் எதிர். Away போட்டிகள் எல்லாவற்றிலும் டெல்லி இந்த சீசனில் வென்றிருக்கிறது. கொல்கத்தாவுக்கு எதிரான சூப்பர் ஓவர் வெற்றி மட்டுமே கோட்லாவில் டெல்லிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் பரிசு. டெல்லி டேர்டெவில்ஸ் என்னும் பெயரில் இருந்த `ஏழரைகளை’ டெல்லி கேப்பிடல்ஸ் என்னும் பெயர் மாற்றம் மூலம் மாற்றியதாக நினைத்துக்கொண்டிருக்கிறது அணி நிர்வாகம். ஆனால், கோட்லா மைதானத்தில் இன்னமும் `காஞ்சனா’ சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது போல!

டெல்லியில், இந்த சீசனில் டாஸ் வென்ற யாரும் பேட்டிங் தேர்வு செய்து வென்றதில்லை. ஆனாலும், டெல்லியின் சீட்டுக்கட்டு போல் சரியும் மிடில் ஆர்டரின் பர்ஃபாமன்ஸை நம்பி பேட்டிங் தேர்வு செய்தார் ரோஹித் ஷர்மா. அவரது நம்பிக்கையைக் காப்பாற்றியது டெல்லி மிடில் ஆர்டர் என்றால் அது மிகையாகாது. டி காக், ரோஹித் ஓப்பனிங் இறங்கினார்கள். நான்காவது ஓவரில் அடித்த பவுண்டரி மூலம் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைப் பதிவு செய்தார் ரோஹித். அதே ஓவரில் டி காக் பவுண்டரி, சிக்ஸ் என அடிக்க, கிறிஸ் மோரிஸின் அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. பவர் ப்ளே முடிவில் மும்பை 57 ரன்கள் எடுத்திருந்தாலும், கிறிஸ் மோரிஸ் வீசிய அந்த ஓவர் மட்டும்தான் கொஞ்சம் காஸ்ட்லி. ஒட்டுமொத்த போட்டியிலும் அதுதான் காஸ்ட்லியான ஓவர் என்பது வேறு.

`அப்பாடா முப்பது ரன் அடிச்சு செட்டில் ஆகிட்டோம்' என இருந்த ரோஹித்துக்கு, அடுத்த ஓவரிலேயே அடி. அமித் மிஷ்ரா வீசிய பந்தில் போல்டாகி, மிஷ்ராவின் 150-வது விக்கெட் ஆனார் ரோஹித். பென் கட்டிங் அடுத்த ஓவரில் கட் ஆக, எட்டு ஓவர் இறுதியில் 63 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. அடுத்துதான் அந்த ஆஸ்கர் வின்னிங் பர்ஃபாமன்ஸை செய்தார் சூர்யாகுமார் யாதவ். அக்ஷர் படேல் வீசிய அந்த பந்தை பாயின்ட் திசையில் அடித்துவிட்டு ஓட ஆரம்பித்தார் சூர்யா. டி காக்கும் 'ஓடுவோமே பள்ளு பாடுவேமே' என `நான் ஸ்ட்ரைக்கர்’ எண்டிலிருந்து ஓடினார். ஆனால், ரபாடாவோ பந்தை ஃபீல்டிங் செய்துவிட்டு கீப்பர் பன்டுக்கு எறிந்துவிட்டார். சமயோசிதமாக சூர்யா, மீண்டும் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு வந்து கிரீஸில் பேட்டை வைத்துவிட்டு, 'மச்சி வந்துடாதே' என்பது போல் டி காக் நோக்கி சைகை செய்தார். ஆனால் டி காக்கோ, 'ஜானு, நான் இங்கதான் இருக்கேன்' என்பது போல் சூர்யாவின் பொடணிக்குப் பின் நின்று கொண்டிருந்தார். `சரி, சட்டுபுட்டுன்னு முடிவு செஞ்சு யாராவது ஒருத்தர் வெளிய வாங்க’ என டெல்லி கூலாக நிற்க, சூர்யாவோ `ஐ.பி.எல் மட்டும்தாண்ணே விளையாடுறேன்’ எனக் கண்ணீர் மல்க நிற்க, டி காக் ' போய்த்தொலை... ' என வெளியேறினார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பது போல், சில ஓவர்களிலேயே ரபாடா பந்துவீச்சில், பன்ட்டிடம் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார் சூர்யா. அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சார்பாக, ஹர்திக் பாண்டியாவும், க்ரூணால் பாண்டியாவும் களமிறங்கினர். இருவரும் ஆளுக்கு முப்பது ரன்கள் அடிக்க, மும்பை ஆட்ட நேர முடிவில் 168 ரன்கள் எடுத்தது.

`அவங்கள மாதிரியே நாமளும் விளையாடுவோம்’ என ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பவர் ப்ளே முடிவில் விக்கெட் எதுவும் விழாமல் 48 ரன்கள் சேர்த்திருந்தது இந்த ஜோடி. அங்கிட்டு பவர் ப்ளே முடிந்ததும், ரோஹித் அவுட்டானது போல, அவரின் இந்திய சக ஓப்பனரான தவான் இந்தப் பக்கம் அவுட்டானார்.

ராகுல் மேஜிக்
19 வயதான ராகுல் சஹாருக்கு இந்தப் போட்டி ஸ்பெஷல். சென்னை சூப்பர் கிங்ஸின் தீபக் சஹாரின் கஸினான ராகுல் சஹார் நேற்று மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரேயாஸ், பிருத்வி ஷா, தவான் என எல்லாமே நேற்று ராகுலுக்குத்தான். முதல் ஓவரில் பத்து ரன் விட்டுக்கொடுத்த ராகுல், பவர்ப்ளேவுக்குப் பின்னர் போட்ட ஸ்பெல் அத்தனை துல்லியம். தவான் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க ஆசைப்பட, பந்து பேடில் பட்டு, LBW ஆக்கப்பட்டார். தேவைப்படும் ரன்ரேட் ஏறிக்கொண்டே இருக்க ஷா, ராகுல் பந்தை இறங்கி ஆட ஆசைப்பட்டார். பந்து சரியாக கனெக்ட் ஆகாமல், லாங் ஆனில் ஹர்டிக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஷா. தன் கடைசி ஓவரில் ஸ்ரேயாஸையும் போல்டாக்கி 4-0-19-3 என டாப் பவுலரானார் ராகுல். 


பும்ராவின் அதிரடி பௌலிங் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. டாப் ஆர்டரை ராகுல் பார்த்துக்கொள்ள பும்ரா, மிடில் ஆர்டரை தன் வசமாக்கினார். டெல்லியின் சீட்டுக்கட்டு சோதனை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. பழைய இந்திய அணி போல், சில விக்கெட்டுகள் விழுந்தால், வரிசையாக க்ரீஸுக்கும் பெவிலியனுக்கும் நடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ராகுல் (15), பும்ரா (13) என மொத்தம் 28 பந்துகள் டாட் வீசினர். டி20 போட்டிகளில் டாட் பால்கள் ஏற்படுத்தும் பிரஷர் என்பது சொல்லமுடியாதது. தேவைப்படும் ரன் ரேட் ஏற ஏற, டெல்லி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இறுதியாக டெல்லியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோஹித் முதல் 13 ஓவர்களில் ஸ்பின்னுக்கு மட்டும் 10 ஓவர்கள் வழங்கினார். அதில் டெல்லியால் 51 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பிட்சை ஸ்ரேயாஸ் சரியாக கணிக்காததே டெல்லியின் தோல்விக்குக் காரணம். இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய ஸ்ரேயாஸ், அவர்களையும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. 

போட்டியில் வென்ற மும்பை இரண்டாம் இடம் என்றாலும், தோற்ற டெல்லியும் சேஃபாக மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. டெல்லி இந்த முறையாவது பிளே ஆஃப் செல்லுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

பர்ப்பிள் கேப்

ரபாடா - 19 விக்கெட்