Published:Updated:

மொத்தமே 3 சிக்ஸர்கள்; கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள்! - எஸ்.ஆர்.ஹெச்சுக்கு 133 ரன்கள் இலக்கு #SRHvCSK

மொத்தமே 3 சிக்ஸர்கள்; கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள்! - எஸ்.ஆர்.ஹெச்சுக்கு 133 ரன்கள் இலக்கு #SRHvCSK
மொத்தமே 3 சிக்ஸர்கள்; கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள்! - எஸ்.ஆர்.ஹெச்சுக்கு 133 ரன்கள் இலக்கு #SRHvCSK

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 33வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த 3 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ள ஹைதராபாத், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது. 

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் தோனி களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். சாம்பில்லிங்ஸ் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தோனி, சான்ட்னர் ஆகியோருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் மற்றும் கரண் ஷர்மா ஆகியோர் இன்று களம்காண்கின்றனர். ஹைதராபாத் அணியில் யூசுப் பதான் மற்றும் ஷாபாஸ் நதீம் ஆகியோர் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியிருக்கின்றனர்.  கடந்த 2010ம் ஆண்டுக்குப் பின்னர் தோனி இல்லாமல் முதன்முறையாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இன்று களம்காண்கிறது. அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரில் 33வது போட்டி வந்துள்ள நிலையில், டாஸ் வென்ற கேப்டன் பேட்டிங் தேர்வு செய்வது இது நான்காவது முறையாகும்.

சென்னை அணிக்கு வாட்சன் மற்றும்  டூப்ளசிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 79 ரன்கள் சேர்த்தது. ஷேன் வாட்சன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூப்ளசிஸ் 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடக்க வீரர்களை இழந்த சென்னை அணிக்கு அடுத்துவந்த வீரர்கள் பெரிய பாட்னர்ஷிப் கொடுக்கத் தவறிவிட்டனர்.

ரெய்னா 13 ரன்களிலும், கேதர் ஜாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வாய்ப்பைப் பெற்ற சாம் பில்லிங்ஸ் ரன் கணக்கைத் தொடங்காமலே வெளியேறினார். 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராயுடு - ஜடேஜா இணை, மெதுவாக ரன் எடுக்க, சென்னை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணி கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதேபோல், இந்த போட்டியில் சென்னை அணி தரப்பில் டூப்ளசிஸ் அடுத்த 3 சிக்ஸர்கள் மட்டுமே. மற்ற வீரர்கள் யாரும் சிக்ஸர் அடிக்கவில்லை. ராயுடு 21 பந்துகளில் 25 ரன்களுடனும் ஜடேஜா 20 பந்துகளில் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.