Published:Updated:

'எனக்கு எண்டே கிடையாது' - மலிங்கா விட்ட சவுண்ட் ஸ்டேட்மென்ட்! #MIvRCB

ஏற்கெனவே வீக்காக இருக்கும் மிடில் ஆர்டரில் மூன்று வெளிநாட்டு வீரர்களோடு மட்டும் களமிறங்குவது ஏன் என்பது கோலிக்கே வெளிச்சம். பவர்ப்ளேயில் இந்த சீசனில் மொத்தமாகவே 3 விக்கெட்களைத்தான் எடுத்திருக்கிறது பெங்களூரு.

'எனக்கு எண்டே கிடையாது' - மலிங்கா விட்ட சவுண்ட் ஸ்டேட்மென்ட்! #MIvRCB
'எனக்கு எண்டே கிடையாது' - மலிங்கா விட்ட சவுண்ட் ஸ்டேட்மென்ட்! #MIvRCB

தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வெற்றியை டேஸ்ட் செய்த பெங்களூருவும், தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து கடந்த போட்டியில் தோல்வியைத் தொட்ட மும்பையும் நேற்று மோதிக்கொண்டன. பெங்களூருவின் மொமென்ட்டம் அப்படியே இருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் அதன் ரசிகர்கள். ஆனால், டீமும் அப்படியே இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. கோலி எப்போதுமே ஃபாஸ்ட் பவுலர்கள் மேல் அதீத பாசம் வைப்பார். அதற்காக ரன்களை வாரிக்கொடுக்கும் டிண்டாவின் சிஷ்யப்பிள்ளையான சிராஜை எல்லா போட்டிகளிலும் ஆடவைப்பது சரியல்ல. மும்பை தன் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான மலிங்காவைத் திரும்பக் கொண்டுவந்தது. #MIvRCB

டாஸ் ஜெயித்த மும்பை கேப்டன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே டாஸ் ஜெயிக்கும் அணிகள் பெரும்பாலும் பீல்டிங்கையே தேர்வு செய்கின்றன. ஓபனிங் இறங்கினார் கோலி பார்த்தீவோடு! முதல் இரண்டு ஓவர்களில் பெரிதாக ரன்கள் எதுவுமில்லை. 'சரி செட்டாயிட்டு நம்மாளு அடிப்பாப்ல' என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்சைட் எட்ஜ் கொடுத்து 'போய் சாப்பிட்டு வர்றேன்' என கிளம்பிப் போனார் கோலி. 

ஒன்டவுனில் டிவில்லியர்ஸ். பெஹர்ன்டார்ஃப்பின் ஐந்தாவது ஓவரில் படேல் 19 ரன்கள் குவிக்க ரன்ரேட் டீசன்ட்டாக ஏறியது. பவர்ப்ளே முடிவில் 45 ரன்கள். ஹர்டிக் பாண்ட்யாவின் அடுத்த ஓவரிலேயே படேலும் நடையைக் கட்டினார். அடுத்து இறங்கியது மொயின் அலி. இந்த ஐ.பி.எல்லில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளேயர்களில் ஒருவர். ஆனால் 'நானும் டீமுல இருக்கேன்' என்றளவிற்குத்தான் ஆடியிருக்கிறார். இந்த ஆட்டத்திலும் அதே நிலைமை என்றால் ஆர்.சி.பியை அவெஞ்சர்ஸால் கூட காப்பாற்றமுடியாது!

ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக சலங்கை கட்டி ஆடினார் மொயின். அவரும் டிவில்லியர்ஸும் ரன்ரேட்டை எட்டுக்குக் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். மாறி மாறி சிக்ஸும் பவுண்டரியுமாக விளாசினார்கள். பெஹர்ன்டாஃப் போட்ட 16-வது ஓவரில் 17 ரன்கள். ஸ்கோர் 136-ஐத் தொட்டு நின்றது. நான்கு ஓவரில் ஐம்பது ரன்கள். இதே ஸ்பீடில் எடுத்தால் செம சவாலான ஸ்கோராக இருக்கும் என எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், களத்தில் இருப்பது ஆர்.பி.சி ஆச்சே! 'எங்களை எப்படி நீங்க நம்பலாம்?' என்பதுபோல அரைசதம் அடித்ததும் அவுட்டானார் அலி.

'ஆர்.சி.பி இனி வேலைக்காகாது, ஆஸ்திரேலியா டீமுக்காவது போய் ரெடி ஆகலாம்' என்ற மைண்ட்செட்டுக்கு வந்திருப்பார் போல ஸ்டாய்னிஸ். சுமாரான ஷாட்டை வெகு சுமாராக ஆடி டக் அவுட்டானார். பும்ரா வீசிய அடுத்த ஓவரில் பத்து ரன்கள்தான். டிவில்லியர்ஸை யார்க்கர்களால் திணறடித்தார் பும்ரா. மலிங்கா வீசிய இறுதி ஓவரில் டிவில்லியர்ஸும் நடையைக் கட்ட 171 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆர்.சி.பி. கோலி, டிவில்லியர்ஸ் இல்லையென்றால் ஸ்கோர் ஏறாது என 101-வது முறையாக ப்ரூவ் ஆனது. மலிங்காவுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் நான்கு விக்கெட்கள். 

குறைந்தது 20 ரன்களையாவது கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்ற பாசிட்டிங் எனர்ஜியோடு களமிறங்கினார்கள் மும்பை ஓபனர்கள். பாசஞ்சர்களை ஏற்றப் பறக்கும் பாயின்ட் டூ பாயின்ட் ப்ரைவேட் பஸ் போல தயங்கவே தயங்காமல் அடி வெளுக்கத் தொடங்கினார்கள். ரோஹித் சந்தித்த முதல் பாலே சிக்ஸ். 9, 11, 16, 12 என முதல் நான்கு ஓவர்களும் தூக்கித் தூக்கிப் போட்டார்கள் ஆர்.சி.பியின் ஃபாஸ்ட் பவுலர்கள். 48 ரன்கள். இனி பொறுமையாக தட்டித் தட்டி ஆடினாலே ஜெயித்துவிடலாம் என்றானது நிலைமை.

ஆறாவது ஓவரில் 13 ரன்கள். பவர்ப்ளே முடிவில் 67 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது மும்பை.  சட்டென ஸ்பின்னர்களை இறக்கினார் கோலி. செம ரிசல்ட். நெகி வீசிய ஓவரில் மூன்றே ரன்கள். மொயின் வீசிய அடுத்த ஓவரின் முதல் பால் சூப்பராக சுழன்று ஸ்டம்ப்பை பறக்கவிட்டது. அதே ஓவரில் டி காக்கையும் எல்.பி.டபிள்யூ ஆக்கினார் மொயின். ஆட்டம் பெங்களூருவுக்கும் சாதகமானது.

அடுத்தடுத்த ஓவர்களில் நெகியையும் மொயினையும் கணித்து அடிக்க ஆரம்பித்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். தன் ட்ரம்ப்கார் சாஹலை இறக்கினார் கோலி. கேப்டன் சொல்லை மீறாத சுட்டிப்பிள்ளையான சஹால், இஷானை வைடாக பந்தை இறக்கி ஸ்டம்பிங் செய்யவைத்தார். அதன்பின் சாஹலும் மொயினும் ஓரளவிற்கு ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார்கள். ஆனால், டெத் ஓவர்கள் திரும்ப ஃபாஸ்ட் பவுலிங் என்பதால் மும்பைக்கே வெற்றி வாய்ப்பிருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலை.

நெஹ்ரா வெளியே இருந்து 'ஸ்பின்னரை இறக்கு' என ஐடியா கொடுக்க நெகியை பந்துபோட அழைத்தார் கோலி. ஃபாஸ்ட் பவுலர்களை ஹர்திக் காலை ஊன்றி அடித்து வெளுப்பது வழக்கம். ஸ்பின்னர்களிடம் இந்த ஸ்டைல் எடுபடாது என்பதால் இந்த ஐடியாவாக இருக்கலாம். ஆனால் நெகியின் டெத் ஓவர் ரெக்கார்ட் ஏற்கெனவே மோசம் என்பதை மறந்துவிட்டார்கள் போல. 22 ரன்களையும் அதே ஓவரில் எடுத்து ஆட்டையைக் கலைத்தார் பாண்டியா. 

மும்பையை பொறுத்தவரை டீம் செட்டாகிவிட்டது. பெரிதாக இனி மாற்றமாட்டார்கள். ஆனால், ஆர்.சி.பியில் இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. ஏற்கெனவே வீக்காக இருக்கும் மிடில் ஆர்டரில் மூன்று வெளிநாட்டு வீரர்களோடு மட்டும் களமிறங்குவது ஏன் என்பது கோலிக்கே வெளிச்சம். பவர்ப்ளேயில் இந்த சீசனில் மொத்தமாகவே 3 விக்கெட்களைத்தான் எடுத்திருக்கிறது பெங்களூரு. ஒரு போட்டியில்கூட தன்னை நிரூபித்திடாத சிராஜை நீக்க மறுக்கும் கோலி, உள்ளூர் ஆட்டங்களில் செம ஃபார்மில் இருந்த வாஷிங்டன் சுந்தரை இன்னமும் பெஞ்ச் தேய்க்க வைக்கிறார். சாஹலுக்குக் கைகொடுக்கும் ஸ்பின்னராகவும் லோயர் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டும் பேட்ஸ்மேனாகவும் சுந்தர் பொருத்தமாக இருப்பார். டி20களில் நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கும் க்ளாசனுக்கும் வாய்ப்பு தரவில்லை. தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் அறிவுரை சொல்லியாயிற்று. எப்போதுதான் கேட்பாரோ கோலி?

loading...