Published:Updated:

ஸ்ரேயாஸ் - பன்ட் `ஸ்லோ' பாட்னர்ஷிப்; அசத்தல் கலீல் அகமது! - 155 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட டெல்லி #SRHvDC

ஸ்ரேயாஸ் - பன்ட் `ஸ்லோ' பாட்னர்ஷிப்; அசத்தல் கலீல் அகமது! - 155 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட டெல்லி #SRHvDC
ஸ்ரேயாஸ் - பன்ட் `ஸ்லோ' பாட்னர்ஷிப்; அசத்தல் கலீல் அகமது! - 155 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட டெல்லி #SRHvDC

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது.

ஹைதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்குத் திரும்பினார். முகமது நபிக்குப் பதிலாக அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருக்கிறார். அதேபோல், சித்தார்த் கவுல், மணீஷ் பாண்டே மற்றும் யூசப் பதான் ஆகியோருக்குப் பதிலாக அபிஷேக் ஷர்மா, ரிக்கி போயே மற்றும் கலீல் அகமது ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்கினர். டெல்லி அணியில்  காலின் இங்ரம் மற்றும்  டீவாட்டியா ஆகியோருக்குப் பதிலாக காலின் முன்ரோ மற்றும் அமித் மிஷ்ரா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர்.


டெல்லி அணியின் இன்னிங்ஸை ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடங்கினர். காயத்தில் இருந்து மீண்டுவந்த கலீல் அகமது, தொடக்க வீரர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். ப்ரித்வி ஷா, 4 ரன்களிலும் தவான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த முன்ரோ பவர் ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டினார். இதனால், 6 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது. முன்ரோ 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இளம் வீரர் அபிஷேக் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பன்ட் ஜோடி விக்கெட் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் வண்ணம் விளையாடியது. இதனால் ரன் ரேட்டில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களிலும் பன்ட் 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே டெல்லி அணி ரன் குவிக்கத் தடுமாறியது. இறுதி ஓவர்களை ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் வீசவே, டெல்லி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  ஹைதராபாத் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும்  வீழ்த்தினர்.