Published:Updated:

`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்!

`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்!
`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்!

ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டம், சர்ச்சைகளுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் இருக்கக்கூடியது. காரணம், என்றைக்கும் இல்லாமல் கூல் கேப்டன் எனப் பெயரெடுத்த தோனி, நேற்று கோபமடைந்து, மைதானத்தில் நுழைந்த சம்பவம்தான். தோனியின் செயல் விதிகளின்படி தவறுதான் என்றாலும், அதை மறந்து தோனி கோபமடைந்ததை நாங்கள் பார்த்துவிட்டோம் என்கிற ரீதியில் கமென்ட்டுகளைத் தட்டிவிட்டுவருகின்றனர். இந்தச் சம்பவங்களைத் தாண்டி, நேற்று இன்னொரு நிகழ்வும் நடந்துள்ளது. அது, நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 17 வயதே ஆன இளம் வீரர், ஆல்ரவுண்டர் ரியான் பராக் அறிமுகம். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர்.

இந்த ஐபிஎல் சீசனில், பல்வேறு இளம் வீரர்கள் அறிமுகமானாலும்,  இவர்களில் தனி கேட்டகரி இந்த ரியான். 1948 முதல் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் இயங்கிவருகிறது. அப்போதிருந்து பல வீரர்கள் அஸ்ஸாமுக்காக விளையாடிவருகிறார்கள். ஆனால், அவர்களில் யாருமே இதுவரை தேசிய அணிக்குத் தேர்வானதில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலான அந்த சோகத்தைத் தீர்த்துவைத்துள்ளார், ரியான். இதனால்தான் 17 வயது ரியானை அஸ்ஸாம் மக்கள் கொண்டாடிவருகின்றனர். இவரது தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். அவரின் பயிற்சியாலேயே ரியான் இவ்வளவு தூரம் வந்துள்ளார். 2017ல் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், பிரித்திவி ஷாவுக்குப் பிறகு அதிக ரன் எடுத்தார். 14 இன்னிங்ஸில் ஒரு இரட்டைச் சதத்துடன் 642 ரன்கள் எடுக்க, கடந்த ஆண்டு நடைபெற்ற U19 கிரிக்கெட் போட்டிக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தனது சிறந்த பெர்ஃபாமன்ஸைக் கொடுத்தார். அந்தத் தொடரில், மூன்று அரை சதங்களை அடித்து, நட்சத்திர வீரராக ஜொலித்தார். 

 அதன்பின் நடந்த டி20 டோர்னமென்டிலும் அவர் ஜொலிக்க, ஐபிஎல் யோகம் அவர் கதவைத் தட்டியது. ராஜஸ்தான் அணி, அவரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதன்படி, நேற்றைய போட்டியில் அறிமுகமானார். நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கியவர்,    2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்தார். பௌலிங்கில் 3 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டியில், அவரது பெர்ஃபாமென்ஸைவிட, அவரின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. சிறுவயதில் தோனியுடன் அவர் நிற்கும் புகைப்படமும், சமீபத்தில் தோனியுடன் அவர் எடுத்த புகைப்படமும் சேர்த்து வைரலாகிவருகின்றன.

'மூன்று வயதில் தோனியை சந்தித்தவர், இன்று தோனிக்கு எதிராகப் பந்துவீசியுள்ளார்' என அஸ்ஸாம் மக்கள் சந்தோஷம் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் போட்டி முடிந்த பிறகு, ரியானுக்கு தோனி சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். அந்தப் புகைப்படமும் சேர்ந்து வைரலாகிவருகிறது. ``ரியான் எங்கள் மாநிலத்தின் நம்பிக்கை. அஸ்ஸாமில் இருந்து யாரும் தேசிய அணிக்குத் தேர்வானதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார். இதற்கு முழுக் காரணம், அவரது பெற்றோர்கள்தான். அஸ்ஸாமின் கனவை 100 சதவிகிதம் அவர் இன்னும் நிறைவேற்றுவார்" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்.

``ரியானுக்கு சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம். அவனுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தது எல்லாம் அவரது அப்பாதான். `வேறு ஏதேனும் துறையில் ஆர்வம் இருக்கிறதா; நாங்கள் வற்புறுத்தியதால் கிரிக்கெட் உனக்குப் பிடித்திருக்கிறதா' என்று அவனிடம் பல முறை கேட்டுள்ளோம். ஆனால், அவனுக்கு கிரிக்கெட்டில்தான் ஆர்வம் இருக்கிறது என்று தெளிவாக இருந்து உழைத்தான். அவனுக்காக, எட்டு வயதிலேயே எங்கள் சொந்த ஊரில் இருந்து வேறு ஒரு ஊருக்கு இடமாற்றம் ஆகிவிட்டோம். அவனது கனவு இன்று நனவாகியுள்ளது" என அவரது தாய் நெகிழ்ச்சிபொங்கக் கூறியுள்ளார்.