Published:Updated:

``இது லெவல் 2 குற்றம்!” - தோனிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

``இது லெவல் 2 குற்றம்!” - தோனிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
``இது லெவல் 2 குற்றம்!” - தோனிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

ஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. அதுவும் தோனி தலைமையிலான சென்னை போட்டி என்றால் சின்ன டார்கெட்டோ, பெரிய டார்கெட்டோ நாங்க கடைசி ஓவரில்தான் ஜெயிப்போம் என மீம்ஸ் போடும் அளவுக்குப் பரபரப்பாக இருக்கும். நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ஆட்டமாகதான் இருந்தது. 

Photo: IPLT20.COM

நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது போட்டியில் சென்னை ராஜஸ்தான் அணிகள் ஜெய்ப்பூர் மைதானத்தில் விளையாடினர். டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய ஜடேஜா 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். வெல்டன் ஜட்டு! 

Photo: IPLT20.COM

அதன் பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், சென்னைக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள். முதல் ஓவரில் வாட்சன் வெளியேற, இரண்டாவது ஓவரிலேயே ரெய்னா ஆர்ச்சரின் அற்புதமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆனார். டூப்பெளஸ்ஸும் கேதர் ஜாதவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பவர் ப்ளே முடிவில் சென்னை 24/4 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. 

அதன் பின்னர் களமிறங்கிய தோனி, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டார். மேற்கொண்டு விக்கெட் விழாமலும், தேவையான ரன்களை பெரும்பாலான ஓவர்களில் சேர்ப்பதிலும் வெற்றிபெற்றது இந்த ஜோடி. இறுதியாக அரைசதம் அடித்து ராயுடு வெளியேற, ஜடேஜா வந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை. முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார் ஜட்டு. அடுத்த பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. அது நோ பாலாக அமைய ஃப்ரீ ஹிட்டில் தோனி இரண்டு ரன் எடுத்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 

Photo: IPLT20.COM

அடுத்துக் களமிறங்கிய சான்ட்னர், ஃபுல் டாஸாக வந்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அப்போது முதல் நடுவர் நோ - பால் என கையைத் தூக்கினார். பின்னர் ஸ்கொயர் அம்பையர் நோ பால் இல்லை எனச் சொல்ல நோ பால் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது. களத்துக்கு  வெளியே இருந்த தோனி, முதலில் நீங்கள் ஏன் நோ பால் அறிவித்தீர்கள் என மைதானத்தின் நடுவில் வந்து அம்பையர்களிடம் கோபமாகக் கேட்டார். கூல் தோனியின் ரசிகர்கள், தோனியின் கோபத்தை ஆச்சர்யத்துடனும் மிரட்சியுடனும் பார்த்தனர். இறுதிப் பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசிப் பந்தில் சிக்சர் அடிக்க  ஐபிஎல் தொடரில் தோனிக்கு கேப்டனாக 100வது வெற்றி கிடைத்தது.  ஆட்டநாயகனாகவும் தோனி தேர்வு செய்யப்பட்டார். 

Photo: IPLT20.COM

இந்த நிலையில், நோ பால் சர்ச்சையின்போது மைதானத்துக்குள் தோனி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஐ.பி.எல் விதிமுறைகளை மீறியதாக தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான ஐபிஎல் நிர்வாகத்தின் அறிவிப்பில்,  ``சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தோனி ஐபிஎல் விதிமுறைகள் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக அறியப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo: IPLT20.COM

ஐபிஎல் விதிமுறைகளின்படி ஆர்ட்டிகிள் 2.20 என்பது, போட்டியின் ஸ்பிரிட்டுக்கு எதிராகச் செயல்படுவது குற்றம் என்றுள்ளது. அதில் குறைந்தபட்ச தண்டனையான ஊதியத்தில் 50% அபராதம் என்பதுதான் தோனிக்கு விதிக்கப்பட்டுள்ளது. தோனி லெவெல் 2 விதிமீறலை முதல்முறை செய்ததால் அவருக்குக் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Photo: IPLT20.COM

இந்த நிலையில், தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, தோனி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தோனி செய்தது தவறு என்றால் அம்பையர் செய்தது தவறில்லையா எனப் பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

கள நடுவர்களின் முடிவுகள் இந்தத் தொடரில் தொடர்ச்சியாகச் சர்ச்சையாகி வருகிறது. பெங்களுரூ - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் கடைசிப் பந்தில் நோ பால் வீசப்பட்டும் அதை நடுவர்கள் கவனிக்காமல் விட்டது சர்ச்சையானது. கடைசிப் பந்தில் பெங்களூர் வெற்றிபெற 6 ரன்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.