Published:Updated:

`பொல்லார்ட்னா பொட்டு வெச்சிட்டு, பொங்கல் சாப்பிடுறவன்னு நினைச்சியா?!' - #MIvKXIP

2015-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவருக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் லெவன்ஸில் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சித்தேஷ் லாடின் தந்தைதான், `ஹிட்மேன்' ரோகித் சர்மாவின் ஆரம்பக்காலப் பயிற்சியாளர். நேற்று, ரோகித்துக்குப் பதிலாகவே லேட் ஓப்பன் செய்தது சுவாரஸ்யமான நிகழ்வு!

`பொல்லார்ட்னா பொட்டு வெச்சிட்டு, பொங்கல் சாப்பிடுறவன்னு நினைச்சியா?!' - #MIvKXIP
`பொல்லார்ட்னா பொட்டு வெச்சிட்டு, பொங்கல் சாப்பிடுறவன்னு நினைச்சியா?!' - #MIvKXIP

பிளே ஆஃப்க்கான போராட்டம், அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இனி ஐபிஎல் ரசிகர்கள் அதில் இதமாய் குளிர்காயலாம் என்பதற்கு, தாறுமாறான உதாரணமாய் அமைந்தது, நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டி. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித், காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக `பீம்பாய்' பொல்லார்டு, அணிக்கு தலைமை தாங்கினார். ரோகித் ரசிகர்கள் அடுத்த மேட்சுக்கு `காயம்பட்ட சிங்கத்துடைய மூச்சு' என மீம் போடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். கிங்ஸ் லெவன் அணியில் மயங் அகர்வாலுக்குப் பதிலாக கருண் நாயர் விளையாடினார். டாஸ் வென்ற மும்பை அணி, கிங்ஸ் லெவன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

வழக்கம்போல் கே.எல்-கெயில் ஜோடி, பஞ்சாப் அணிக்காக ஓப்பன் செய்தது. பெரன்டார்ஃப் வீசிய முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே அடித்து அக்கவுன்டை ஆரம்பித்தனர். பும்ரா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் வெறும் மூன்று ரன் மட்டுமே. பெரன்டார்ஃப் வீசிய மூன்றாவது ஓவரில்தான் இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை விளாசினார் கே.எல்.ராகுல். செம ஸ்டைலீஷான ஷாட்! பேக்ஃபூட்டுக்குச் சென்று நச்சென பன்ச் ஒன்று வைக்க, கவர் ஃபீல்டரைத் தாண்டி சர்ரென எல்லைக்கோட்டைத் தொட்டது. ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீச வந்தார் அல்ஸாரி ஜோசப். அவர் ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினார் ராகுல். இந்த சிக்ஸில் இருந்து, கிங்ஸ் லெவனின் பேட்டிங் வேகமெடுக்கத் தொடங்கியது.

பெரன்டார்ஃப் வீசிய ஐந்தாவது ஓவரில், மூன்று சிக்ஸரும் ஒரு பவுண்டரியுமாக 23 ரன் அள்ளித்தந்தார் `கரீபியன் கரிகாலன்' க்றிஸ் கெயில். இன்னொரு பக்கம், முதல் மேட்சில் அரட்டியெடுத்த அல்ஸாரி ஜோசப்பின் பந்துகளை மிரட்டிக்கொண்டிருந்தார் கே.எல்.ராகுல். ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவர் வீச வந்த ஹர்திக் பாண்டியாவை, துவம்சம்செய்து `பாண்டியன் ஊறுகாய்' ஆக்கினார் கெயில். 13-வது ஓவரில் பெரன்டார்ஃப் வீசிய பந்தில் கெயில் 63 ரன்னில் அவுட்டாக, 116 ரன்னில் பார்ட்னர்ஷிஃப் முடிவுக்கு வந்தது. 

அடுத்து களமிறங்கிய மில்லர், 7 ரன் மட்டுமே எடுத்து ஹர்திக் வீசிய பந்தில் வெளியேறினார். கருண் நாயரும் 5 ரன்னோடு பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். பும்ரா வீசிய 18-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை `படார் படார்' என பவுண்டரிக்கு விரட்டிய சாம் கரண், மூன்றாவது பந்தில் `சடார்' என அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஹர்திக் வீசிய 19-வது ஓவர்தான், பஞ்சாப் அணிக்குக் கிடைத்த பரிசுப்பெட்டி. மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி என 25 ரன்னை கொத்தாக அள்ளினார் கே.எல்.ராகுல். பும்ரா வீசிய கடைசி ஓவரையும் சிக்ஸரோடு தொடங்கிய ராகுல், அதே ஓவரில் சதத்தையும் நிறைவுசெய்தார். கடைசிப் பந்தில் மந்தீப் ஒரு பவுண்டரியைத் தட்ட, 197-4 என்ற தரமான ஸ்கோரோடு இன்னிங்ஸை முடித்தது கிங்ஸ் லெவன்.

ரோகித்துக்குப் பதிலாக சித்தேஷ் லாட், ஓப்பன் செய்தார். 2015-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவருக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் லெவன்ஸில் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சித்தேஷ் லாடின் தந்தைதான், `ஹிட்மேன்' ரோகித் சர்மாவின் ஆரம்பக்காலப் பயிற்சியாளர். நேற்று, ரோகித்துக்குப் பதிலாகவே லேட் ஓப்பன் செய்தது சுவாரஸ்யமான நிகழ்வு! தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, ஐ.பி.எல் பயணத்தைத் தொடங்கினார் சித்தேஷ். அதற்கடுத்த பந்தில் ஒரு பவுண்டரி. ராஜ்பூட் ஓவரில் அடித்தும், ஷமி ஓவரில் அடங்கியும் நிதானமாக ரன் சேகரித்துக்கொண்டிருந்தது டி காக்-லாட் இணை. 

முதல் மேட்ச் என்பதால் ஆர்வக்கோளாறு ஷாட் ஒன்றை ஆடப்போய், ஷமியின் பந்தில் க்ளீன் போல்டு ஆனார் லாட்.  ராஜ்பூட் வீசிய ஐந்தாவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை விரட்டி நம்பிக்கையளித்தார் சூர்யகுமார் யாதவ். ஆனால், அவரும் சாம் கரணின் பந்தில் ஹென்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக்கட்டினார். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த டி காக்கும், அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் அவுட்டானார். மும்பை ரசிகர்கள் தலையைச் சொறிந்தனர். 10 ஓவர் முடிவில் 65-3 எனப் பரிதாபகரமான நிலையில் இருந்தது மும்பை. ``அது அவ்ளோதான், டைம் முடிஞ்சது" எனக் கடுப்பானார்கள் ஜூனியர் ரசிகர்கள். ``பொல்லார்டு இருக்காப்ல, என்ன பண்றாப்லனு பார்த்துட்டுப் போவோம்" என சீனியர் ரசிகர்கள் மிளகளவு நம்பிக்கையோடு இருக்க,  ``அப்டிங்கிற அதுவும் கரெக்ட்தான்" என வெறுமையாக மேட்ச் பார்க்க அமர்ந்தனர் ஜூனியர் ரசிகர்கள். 

``பழைய பொல்லார்டு யாருன்னு தெரிஞ்சுக்க, பழைய ஸ்டாட்டிஸ்டிக்ஸை எடுத்துப் பார்க்க தேவையில்லை. இந்த மேட்சைப் பார்த்தாலே போதும்" என வெறியாகி, களத்தில் ருத்ரதாண்டவம் ஆடத் தொங்கினர் கேப்டன் பொல்லார்டு. அஸ்வின் வீசிய 11-வது ஓவரில் முதல் சிக்ஸர். சாம் கரண் வீசிய 12-வது ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி. அதே ஓவரில் இஷன் கிஷன் தேவையில்லாமல் ரன் அவுட்டாக, பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்தார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக்கும் அவர் பங்குக்கு, இரண்டு பவுண்டரிகளை விளாசினார். அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாச, ஒரே ஓவரில் பல்க்காக 19 ரன் கிடைத்தது. 15-வது ஓவரை வீசிய வில்ஜொயின் 7 ரன் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தினார். அடுத்த ஓவரை வீசிய ஷமியோ, 9 ரன் மட்டுமே கொடுத்து பாண்டியா சகோதரர்கள் இருவரது விக்கெட்டையும் கழற்றினார். மும்பையின் அசுரவேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டதுபோல் அமைந்தது இந்த இரண்டு ஓவர்கள்.

கடைசியில், 12 பந்துகளுக்கு 32 ரன் தேவைப்படும் என்ற நிலைக்கு மூச்சுத்தள்ள ஓடிவந்தது மும்பை இந்தியன்ஸ். சாம் கரண் வீசிய 19-வது ஓவரில், 1 பவுண்டரி மட்டும் இரண்டு சிக்ஸர்களை விளாசி, மும்பை ரசிகர்களைக் குதூகலமாக்கினார் பொல்லார்டு. அடுத்து, 6 பந்துகளுக்கு 15 ரன் வேண்டும் என்கிற நிலை. முதல் பந்தை வீச வந்த ராஜ்பூட், பந்தை வீசாமல் கீப்பரைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டுப் போனார். கூலாக இருக்கிறாராம்!

ராஜ்பூட் வீசிய முதல் பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு விளாசிவிட்டு கூலாக நின்றார் பொல்லார்டு. அந்தப் பந்தும் நோ-பால் என அம்பயர் சைகைக் காட்ட, மும்பை ரசிகர்களும் கூலாகினர். அடுத்த பந்து பவுண்டரி! அடுதற்கடுத்த பந்தில் பொல்லார்டு அவுட். வான்கடே மைதானத்தில் பாதிப்பேர் நெஞ்சைப் பிடித்தனர். கடைசியாக, 1 பந்தில் 2 ரன் வேண்டும் என்ற நிலையில், வின்னிங் ஷாட் அடித்து மேட்சை முடித்தார் அல்ஸாரி ஜோசப். ஹோம் கிரவுண்டில், மும்பையின் அதிகபட்ச சேஸிங் இதுதான். கே.எல்.ராகுல் அடித்த செஞ்சுரியை வீணாக்கியது கிங்ஸ் லெவன் அணியின் பவுலிங் யூனிட்! மேன் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கிவிட்டு வீரநடை போட்டுச் சென்றார் கெய்ரான் பொல்லார்டு.