Published:Updated:

நீங்க ரன் அடிங்க... ஏன் நீங்க அடிக்கிறது? - இப்படியாக வெற்றி பெற்ற சென்னை! #CSKvKKR

நீங்க ரன் அடிங்க... ஏன் நீங்க அடிக்கிறது? - இப்படியாக வெற்றி பெற்ற சென்னை! #CSKvKKR
News
நீங்க ரன் அடிங்க... ஏன் நீங்க அடிக்கிறது? - இப்படியாக வெற்றி பெற்ற சென்னை! #CSKvKKR

சென்னை அணியைப் பொறுத்தவரை சேப்பாக்கத்தில் இனி ஆடப்போகும் லெவன் இதுவாகவே இருக்கும். பிராவோ குணமானால் மாற்றங்கள் இருக்கலாம்.

புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் விக்கெட் மழை பொழிகிறார்கள். கொல்கத்தாவின் `கோடை இடி குமாரு' ரஸல் செம ஃபார்மில் இருக்கிறார், ஐ.பி.எல்லின் அதிபுத்திசாலி கேப்டனான தோனியின் திட்டங்கள் என்னென்ன? என ஏகப்பட்ட பரபரப்புகள் இந்த ஆட்டத்திற்கு. ஆனால் செம பசியில் இருந்தவனுக்கு குஸ்கா கிடைத்ததும் ஏமாற்றத்தில் பசி அடங்குவதுபோல ஆகிவிட்டது இந்த மேட்ச்.

இந்த பிட்ச்சில் டாஸ் ஜெயிக்கும் அணிக்கே வெற்றி என்பது சென்டிமென்ட். அதுவும் நேற்று பிட்ச் இருந்த நிலைமைக்கு செகண்ட் பேட்டிங்கே பொருத்தம் என்றார்கள் வல்லுநர்கள். அதைப் போலவே தோனியும் டாஸ் ஜெயித்து ஃபீல்டிங் அறிவித்தார். எதிர்பார்த்தபடியே இரண்டு அணிகளிலும் மாற்றங்களில்லை. அதுவும் சென்னை அணியைப் பொறுத்தவரை சேப்பாக்கத்தில் இனி ஆடப்போகும் லெவன் இதுவாகவே இருக்கும். பிராவோ குணமானால் மாற்றங்கள் இருக்கலாம்.

முதல் ஓவர் வழக்கம் போல ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் சஹார். சர்... சர்ரென எகிறி வந்த பந்துகளை சமாளிக்க முடியாமல் எல்.பி.டபிள்யூ ஆனார் க்றிஸ் லின். அடுத்த ஓவர் ஹர்பஜன். க்ரீஸில் இருந்தது நரைன். ஓவரின் ஐந்தாவது பாலை அலேக்காக தூக்கிப் போட இறங்கிவந்து அடித்தார் நரைன். டாப் எட்ஜில் பட்டு பறந்த பந்தை சஹார் லபக்கினார். அடுத்ததாக களமிறங்கியது நிதிஷ் ரானா. அந்த அணியின் மிடில் ஆர்டர் தூண். சஹார் வீசிய லென்த் பாலை புல் ஷாட் அடிக்க முயன்று ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். `தம்பி இப்போதான் இப்படி, ஒருகாலத்துல நாங்க கீப்பர் தெரியும்ல' என பாடி லாங்குவேஜில் சொன்னார் சி.எஸ்.கேவின் பாகுபலி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உள்ளூர் பையன் தினேஷ் கார்த்திக்கின் முறை இப்போது. உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க அவருக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இந்தத் தொடர்தான். பழகிய பிட்ச் வேறு. ஃபார்முக்கு வர இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. ஆனால் தோனியின் பிளான் வேறாக இருந்தது. இரண்டு வலதுகை பேட்ஸ்மேன்கள் என்றவுடன் ஜடேஜாவை உள்ளே கொண்டுவந்தார். ரன்கள் எடுக்கத் திணறியது கொல்கத்தா. சஹார் வீசிய ஐந்தாவது ஓவரில் தேவையே இல்லாமல் தூக்கியடித்து அவுட்டானார் உத்தப்பா. சீனியர் வீரராகப் பொறுப்பாக ஆடியிருக்கலாம். பவர்ப்ளே முடிவதற்குள் சஹாருக்கு மூன்று விக்கெட்கள். இந்த இரண்டு சீசன்களுக்கும் சேர்த்து பவர்ப்ளேயில் மட்டும் 17 விக்கெட்கள் எடுத்திருக்கிறார் சஹார்.

பௌலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் தோனி. `நீங்க என்ன மாத்தினாலும் நாங்க மாறமாட்டோம்' எனக் கட்டை வைத்துக்கொண்டே இருந்தார்கள் பேட்ஸ்மேன்கள். `சரி வேலக்காகாது' என பராசக்தி எக்ஸ்பிரஸை உள்ளே கொண்டுவந்தார் தல. கிட்டத்தட்ட ரானா போலவே அடித்து அவுட்டானார் தினேஷ் கார்த்திக். எல்லாரும் காத்திருந்த ரஸல் களத்தில் இறங்கினார். ஸ்கோர் ஒன்பது ஓவர் முடிவில் 44/5. இருக்கும் ஒரே அதிரடி பேட்ஸ்மேன் அவர்தான் என்பதால் வழக்கம் போல ஆர்ம்ஸ் காட்டி அடிப்பாரா அல்லது விக்கெட்கள் விழுவதால் அடக்கி வாசிப்பாரா என மொத்தக் கூட்டமும் குழம்பிப் போயிருந்தது.

அடக்கித்தான் வாசித்தார் ரஸல். அதுவும் தாஹிர் ஓவரில் அம்மாவைக் கண்ட எடப்பாடி போல அப்படி ஓர் அடக்கம். `சரி அப்ப நானாவது அடிக்கிறேன்' என லேசாக இறங்கிவந்த சுப்மன் கில்லையும் `போய்ட்டு வாங்க தம்பி' என அனுப்பிவைத்தார் தாஹிர். ரன்ரேட் நத்தையோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தது. `சரி அடிச்சுடுவோம்' என ரஸல் முடிவெடுத்து தாஹிர் பாலில் சுத்த, அது டாப் எட்ஜாகி மேலே மேலே மேலே சென்றது. கீழே வருவதற்குள் நீங்கள் போய் டீ அடித்துவிட்டே வரலாம். கிட்டத்தட்ட படேல் சிலை உயரத்திற்கு பறந்தால் பாவம் பாஜி என்ன செய்வார்? குறிபார்த்து கோட்டைவிட்டார். பிடித்திருந்தால் மேட்சே மாறியிருக்கும் எனச் சொல்ல ஆசைதான். ஆனால் அந்த டார்கெட்டையும் சி.எஸ்.கே கடைசிவரை இழுத்துச் சென்றிருப்பார்கள் என்பதால் பெரிதாக வித்தியாசமில்லை.

சிக்கிய பந்தை மட்டும் அடித்தபடி இருந்தார் ரஸல். மறுமுனையில் `நான் அடிச்சு பாத்தது இல்லையே' என விறுவிறுவென இறங்கிவந்தார் பியூஷ் சாவ்லா. `உன்னை யாரும் அடிக்கவிட்டதே இல்லையே' என வைடாக இறக்கி ஸ்டம்பிங் அடிக்க வைத்தார் ஹர்பஜன். அதற்கடுத்த பந்தில் ரஸலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க நினைத்த குல்தீப்பும் ரன் அவுட். `ரஸலுக்கு ஸ்ட்ரைக் வராமயே மேட்ச் முடிஞ்சிடும் போலயே' எனப் பதற்றமானது கொல்கத்தா முகாம். அதற்கேற்றாற்போல பிரஷித் கிருஷ்ணாவும் அவுட். 17 ஓவர்கள் முடிவி ஸ்கோர் 79/9.

அந்த ஒரு விக்கெட் போய்விடக்கூடாது என்பதற்காக முடிந்தவரை ஸ்ட்ரைக்கில் இருந்தார் ரஸல். அந்த மூன்று ஓவர்களில் ஒன்பது டாட் பால்கள். காரணம், சிங்கிள் கூட எடுக்காமல் ஸ்ட்ரைக்கில் ரஸல் இருந்ததுதான். ஒருபக்கம் ஃபிட்னஸ் பிரச்னை அவரை படுத்தி எடுக்க, மறுபக்கம் ஸ்கோரை ஏற்றியாகவேண்டிய பிரஷர். திறமையாக ஆடி அரைசதம் அடித்தார் ரஸல். கடைசி ஓவரில் மட்டும் 15 ரன்கள். விக்கெட் இழப்புகளால் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 113தான். டார்கெட் 109.

குட்டி ஸ்கோர் என்பதால் எடுத்தவுடன் வேகம் காட்டினார் வாட்சன். இரண்டு பௌண்டரி, ஒரு சிக்ஸ் என 17 ரன்களை விறுவிறுவென எடுத்துவிட்டு அவர் நடையைக் கட்ட அடுத்து வந்த ரெய்னாவும் டைம் வேஸ்ட் செய்யவில்லை. சட்டென 13 ரன்களை வந்தவேகத்தில் எடுத்துவிட்டு வெளியேறினார். ஸ்கோர் 35/2, ஐந்து ஓவர்கள் முடிவில்! ரிசல்ட் அப்போதே முடிவாகிவிட்டது. பின் தொடங்கியது சி.எஸ்.கேவின் டெலிசீரியல் எபிசோட். ரொம்பவே பொறுமையாக ஆடி கொட்டாவி வரவைத்தார்கள் ராயுடுவும் டு பிளெஸ்ஸியும்!

ரெய்னா அவுட்டான பின் 14 ஓவர்கள் வரை மொத்தமே மூன்று பௌண்டரிகள்தாம். அந்தளவிற்குப் பொறுமையாக ஆடினார்கள் பேட்ஸ்மேன்கள். 15வது ஓவரில் ராயுடு அவுட்டாக செம குஷியானார்கள் ரசிகர்கள். காரணம், தோனி இறங்குவார் என்பதால். ஆனால், வெற்றி உறுதியாகிவிட்ட மேட்ச்களில் அடுத்தடுத்த வீரர்களை இறக்கி பழக்கிவிடுவதுதான் தோனி ஸ்டைல். எனவே ஜாதவ் இறங்கினார். அவருக்கும் பெவிலியனிலிருந்து சீரியல் பார்த்த பீல் இருந்திருக்கும் போல. வந்தவேகத்தில் பௌண்டரி அடித்தார். அந்த வேகம் டு ப்ளெஸ்ஸிக்கும் பற்றிக்கொள்ள அடுத்தடுத்து பௌண்டரிகள் அடித்தார். கடைசியாக நரைன் வீசிய வைடு பாலில் வெற்றி பெற்று பத்துப் புள்ளிகளோடு முதலிடத்தில் அமர்ந்தது சென்னை.

ரஸல் என்ற ஒருவரை நம்பியே கொல்கத்தா இருப்பது அணியின் மிகப்பெரிய பலவீனம். `எல்லாத்தையும் கீழ இருக்குறவன் பாத்துக்குவான்' என்பதுபோலவே ஆடுகிறது அந்த அணியின் டாப் ஆர்டர். தினேஷ் கார்த்திக், சுப்மன் கில் போன்றவர்கள் ஃபார்முக்கு வருவது அவசியம்.

மறுமுனையில் நேற்றைய பிட்ச் குறித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் தோனி. இது இந்த சீசனில் இரண்டாவது முறை. பௌலர்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கும் லோ ஸ்கோரிங் மேட்ச்கள் நல்லதுதான். ஆனால், அவை ஒன்சைடு மேட்ச்களாகவே இருப்பது பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும். போக, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவே மேட்ச்கள் மட்டுமே சென்னை அணிக்கு! அந்தப் போட்டிகளுக்கான ப்ளேயிங் லெவன் எப்படி அமையப்போகிறது என்பதில்தான் இருக்கிறது சி.எஸ்.கேவின் ஃப்ளே ஆஃப் நகர்வு.