Published:Updated:

24 பந்துகளில் 20 டாட் பால், 3 விக்கெட்... தீபக் சஹார் வீசிய மிரட்டல் ஸ்பெல்! #CSKvKKR

24 பந்துகளில் 20 டாட் பால், 3 விக்கெட்... தீபக் சஹார் வீசிய மிரட்டல் ஸ்பெல்! #CSKvKKR

இந்த 20 டாட் பால்களால், ஒரு ஐ.பி.எல் சாதனையும் படைத்துள்ளார் சஹார். ஐ.பி.எல் தொடரின் 12 ஆண்டுக்கால வரலாற்றில், எந்த பௌலரும் ஒரு போட்டியில் 20 டாட் பால்கள் வீசியதில்லை.

24 பந்துகளில் 20 டாட் பால், 3 விக்கெட்... தீபக் சஹார் வீசிய மிரட்டல் ஸ்பெல்! #CSKvKKR

இந்த 20 டாட் பால்களால், ஒரு ஐ.பி.எல் சாதனையும் படைத்துள்ளார் சஹார். ஐ.பி.எல் தொடரின் 12 ஆண்டுக்கால வரலாற்றில், எந்த பௌலரும் ஒரு போட்டியில் 20 டாட் பால்கள் வீசியதில்லை.

Published:Updated:
24 பந்துகளில் 20 டாட் பால், 3 விக்கெட்... தீபக் சஹார் வீசிய மிரட்டல் ஸ்பெல்! #CSKvKKR

சென்னை சூப்பர் கிங்ஸ், ஆண்ட்ரே ரஸல் இடையிலான போட்டியில், எளிதான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது நடப்பு சாம்பியன். என்னதான் ரஸல் கடைசிவரை நின்று அரைசதம் அடித்தாலும், எதிர்முனையில் இருந்தவர்களை வரிசையாகக் காலிசெய்து, ரஸல் மீது மறைமுக நெருக்கடியை ஏற்படுத்துவிட்டது சென்னை. சூப்பர் கிங்ஸின் இந்த சூப்பர் பர்ஃபாமன்ஸுக்கு மிகமுக்கிய காரணம் தீபக் சஹார்... 20 டாட் பால்களோடு அவர் வீசிய அந்த அட்டகாச ஸ்பெல்! 

டி-20 போட்டியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு டாட் பாலும் முக்கியம். ஒரு டாட் பால், பேட்ஸ்மேன் மீதான நெருக்கடியை அதிகரித்து அவரை நெருக்கடிக்கு ஆளாக்கும். மோசமான ஷாட் ஆடவைக்கும். ரன்ரேட் குறையும்போது, அவரது கேம் பிளானையும் மாற்றவைக்கும். நேற்றைய போட்டியில் தீபக் சஹார் செய்தது அதைத்தான். அட்டகாசமாகச் செயல்பட்டு, 24 பந்துகளில், 20 டாட் பால்கள் வீசி ஆட்டத்தை சென்னையின் பக்கம் எடுத்துச் சென்றார்! நேற்றைய போட்டியில், சென்னை பௌலர்கள் மொத்தம் 75 டாட் பால்கள் வீசியிருந்தனர். அதில் பல டாட் பால்கள், ரஸல் ரன் ஓட தவிர்த்ததால் ஏற்பட்டவை. ஆனால், சஹார் வீசிய முதல் ஸ்பெல் அப்படியில்லை. 

கொல்கத்தா பேட்ஸ்மேன்களை மொத்தமாகவே நிலைகுலையவைத்தது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய வரும்போது பெரும் நெருக்கடியோடுதான் வந்திருக்கும். சேப்பாக்கத்தில் இரண்டாவது பௌலிங் செய்வது மிகவும் சிரமம். அதிலும் கடந்த சில நாள்களாக பனி உச்சத்தில் இருக்கிறது. நரைன், குல்தீப், சாவ்லா என 3 ஸ்பின்னர்களுமே தடுமாறவேண்டியிருக்கும். அதனால் பெரிய ஸ்கோர் எடுத்தால் மட்டுமே, சென்னையின் பலமான பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்க முடியும். இப்படியொரு நெருக்கடியில் அவர்கள் களமிறங்க, அவர்களுக்குக் கொஞ்சம்கூட வாய்ப்பு வழங்கவில்லை சஹார். 

முதல் ஓவர்... ஒரே திட்டத்தோடு வருகிறார் சஹார். ஷார்ட் லென்த்தில், ஸ்டம்ப் லைனில் பந்துகளை பிட்ச் செய்கிறார். முதல் இரண்டு பந்துகளும் லெக் ஸ்டம்ப் நோக்கியே செல்கின்றன. லின் சற்று தடுமாறுகிறார். மூன்றாவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்கிறது... அடிக்க முற்பட்டு ஏமாறுகிறார். நான்காவது பந்து மீண்டும் லெக் ஸ்டம்ப் நோக்கி - லெக் பை. மீண்டும் ஆறாவது பந்தில் ஸ்ட்ரைக் வருகிறார் லின். முன்பு சந்தித்த நான்கு பந்துகளுமே பெரும்பாலும் லெக் ஸ்டம்ப் நோக்கியே வருகின்றன. ஓரளவு பௌன்ஸ் வேறு. முந்தைய 4 பந்துகளும் டாட் பால்கள் என்பதால், `ஸ்லாக் ஷாட்' அடிக்க முற்படுகிறார். அதுவரை ஓரளவு பௌன்ஸ் கொடுத்த சஹார், இந்த பந்துக்கு பௌன்ஸ் கொடுக்கவில்லை. அதுவரை பெரிதாக மூவ்மென்ட் கொடுக்காதவர், அந்தப் பந்துக்குக் கொஞ்சம் மூவ்மென்ட்டும் கொடுக்கிறார். எதிர்பாராத லின்னின் பேடில், லெக் ஸ்டம்புக்கு நேராகப் படுகிறது பந்து. அப்பீல், அம்பயர் விரலை உயர்த்துகிறார்... ரிவ்யூ எடுக்கலாமா என்று நரைனிடம் கேட்காமலேயே நடையைக் கட்டுகிறார் லின். கொல்கத்தாவுக்கு முதல் அடி விழுகிறது.

4 டாட் பால்களில் நெருக்கடியை ஏற்படுத்தி, பந்தின் மூவ்மென்ட்டை கணிக்க முடியாமல் செய்தார் சஹார். இதுதான் அவரது அட்டகாச திறன். அதேபோல், பேட்ஸ்மேன்களை ஸ்ட்ரைக் ரொடேட் செய்யவிடாதவகையில் சிறப்பாகப் பந்துவீசினார். இரண்டாவது ஓவரில் ராணா ஆடும்போது ஆஃப் சைட், சர்க்கிளுக்கு உள்ளே ஃபீல்டர்கள் அணிவகுத்திருந்தனர். அதற்கு ஏற்றதுபோல், அடுத்த ஓவர்களில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசினார். பாயின்ட் திசையில் ஜடேஜா, கவரில் ரெய்னா, மிட் ஆஃப் திசையில் டுப்ளெஸ்ஸி எனத் தரமான ஃபீல்டர்கள் இருந்ததால், பேட்ஸ்மேன்கள் சிங்கிளுக்கு ரிஸ்க் எடுக்க பயப்பட்டனர். 

ஃபீல்டிங்குக்கு ஏற்றதுபோல் சரியாகப் பந்துவீசுவதே பெரிய விஷயம்தான். இப்போதெல்லாம் வேகத்தை மட்டுமே பிரதானப்படுத்தி, லைன், லென்த், ஃபீல்டிங் என எதைப்பற்றியும் கவலைப்படாத இளம் இந்திய பௌலர்களுக்கு மத்தியில் சஹார் ஒரு மிகப்பெரிய விதிவிலக்கு. அத்தனை விஷயங்களையும் நேற்று, பர்ஃபெக்டாகக் கையாண்டார். ஆஃப் சைட் ஆடும் பந்தெல்லாம் டாட் பால் ஆக, லெக் சைட் அடிக்க முற்படுகிறார் ராணா. பந்தின் வேகம், அவருக்குக் கைகொடுக்கவில்லை. ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். திட்டங்கள் ஒவ்வொன்றுமே அவருக்குக் கைகொடுத்தது. 

உத்தப்பா விஷயத்தில், வேகத்தைக் கொண்டு அவரை ஏமாற்றினார் சஹார். ஐந்தாவது ஓவரின் முதல் பந்து, மணிக்கு 132.3 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட, அதை பௌண்டரி ஆக்கினார் உத்தப்பா. அடுத்த பந்து 124.2 - பௌண்டரி. இரண்டு பந்துகளுமே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டவை. மூன்றாவது பந்தை மட்டும் ஸ்டம்ப் லைனில் வீசுகிறார் (132.8) சஹார். அடித்து ஆடும் மனநிலையில் உத்தப்பா இருப்பது புரிந்து, மீண்டும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியிலேயே வீசுகிறார். பந்து கொஞ்சம் நன்றாக பௌன்ஸ் ஆனதால், புல் ஷாட் அடிக்கிறார் உத்தப்பா. நல்ல யோசனைதான். ஆனால், அதற்கு முன் சஹார் அவருக்கு வைத்த பொறி அவருக்குத் தெரியாமல் போனது!

முன்பு வீசிய 3 பந்துகளைவிட அந்தப் பந்தை இன்னும் ஷார்ட்டாக பிட்ச் செய்தார். அதுவரை வேகமாகப் பந்துவீசியவர், நான்காவது பந்தை `ஸ்லோ' பாலாகவே வீசினார். மணிக்கு 119.9 கிலோமீட்டர் வேகத்தில்தான் வீசப்பட்டது அந்தப் பந்து. அதைக் கூடுதல் பலத்தோடு அடித்தால் மட்டுமே, பௌண்டரி எல்லையைக் கடக்கும். ஆனால், உத்தப்பா பந்தின் வேகத்தை சரியாகக் கணிக்காமல் இருந்துவிட்டார். அதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், ஃபீல்டர் நின்றிருந்த இடம். பவர்பிளேயில், இரண்டு ஃபீல்டர்கள்தாம் சர்க்கிளுக்கு வெளியே இருக்க முடியும். வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பெரும்பாலும் தேர்ட் மேன், ஃபைன் லெக் திசையில்தான் அந்த இருவரும் இருப்பார்கள். ஆனால், உத்தப்பாவை கேட்ச் செய்த கேதர் ஜாதவ் நின்றிருந்தது டீப் ஸ்கொயர் லெக், டீப் மிட்விக்கெட் இரண்டுக்கும் இடையில். ஆக, இந்த புல் ஷாட்டை எதிர்பார்த்தே பந்துவீசியுள்ளார் சஹார்!

தீபக் சஹார் டூ ராபின் உத்தப்பா

உத்தப்பாவைத் தவிர, மற்ற இருவருமே சஹாரின் டாட் பால்கள் கொடுத்த நெருக்கடியால்தான் வெளியேறினார். அந்த அளவுக்கு ஆட்டத்தில் அவரது டாட் பால்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. மொத்தம் 20 டாட் பால்கள். அதிலும் 19-வது ஓவரில் ரஸலுக்கு 5 டாட் பால்கள் வீசியதெல்லாம் வேற லெவல். கடைசி இரண்டு பந்துகளில், அவர் சிங்கிள் எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும்போது, அற்புதமாக யோசித்து அவர் பௌன்சர் வீசியது, நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம். 

இந்த 20 டாட் பால்களால், ஒரு ஐ.பி.எல் சாதனையும் படைத்துள்ளார் சஹார். ஐ.பி.எல் தொடரின் 12 ஆண்டுக்கால வரலாற்றில், எந்த பௌலரும் ஒரு போட்டியில் 20 டாட் பால்கள் வீசியதில்லை. இதற்கு முன், 2009-ம் ஆண்டு, இதே நைட்ரைடர்ஸ் அணிக்கெதிராக அப்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் முனாஃப் படேல் 19 டாட் பால்கள் வீசியிருந்தார். நேற்று அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் சஹார்.

ஸ்பின்னர்கள் ஒருபக்கம் கொல்கத்தாவைப் புரட்டிப் போட்டாலும், சஹார் வீசிய அந்த ஸ்பெல்தான், சென்னையின் வெற்றிக்கு மிகமுக்கியக் காரணம். சொல்லப்போனால், தன்னுடைய மூன்றாவது ஓவரை முடித்தபோதே, தோனியின் கையில் இரண்டு புள்ளிகளைக் கொடுத்துவிட்டார் சஹார்! அவரது இந்த ஸ்பெல் (4-0-20-3), நிச்சயம் ஐ.பி.எல் வரலாற்றின் மிகச் சிறந்த பௌலிங் பர்ஃபாமன்ஸ்களில் ஒன்றாக இருக்கும்!