Published:Updated:

3 ஜெர்சி... ஆறு தொடர் தோல்விகள்... winter is coming டியர் ஆர்.சி.பி!

3 ஜெர்சி... ஆறு தொடர் தோல்விகள்... winter is coming டியர் ஆர்.சி.பி!
3 ஜெர்சி... ஆறு தொடர் தோல்விகள்... winter is coming டியர் ஆர்.சி.பி!

பன்ட்டும் அடுத்த ஓவரில் அவுட்டாக, சிரிப்பு வந்தது கோலி முகத்தில். அது வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கான சிரிப்பாக இருக்க வாய்ப்பில்லை. 'நாம பரவாயில்ல, டிசைன் டிசைனா தோக்குறோம். இவங்க ஒரே டிசைன்லதான் தோப்பாங்க போல' ரக சிரிப்பு அது.

ஐபிஎல்லின் இந்த வீக்கெண்ட் கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. நடந்த நான்கு போட்டிகளுமே லோ ஸ்கோரிங் கேம்தான். பேட்ஸ்மேன்கள் பொறுமையைச் சோதிக்க, பவுலர்கள் கொண்டாட்டமாகப் பந்துவீசினார்கள். 

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்று காயம்பட்ட புலியாகக் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ். மறுபக்கம் மிடில் ஆர்டர் சொதப்பலால் இரண்டு கேம்களை நழுவவிட்டு இந்தப் போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்போடு களமிறங்கியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இரு அணிகளிலும் எந்த மாற்றமுமில்லை. நியாயமாக, கடந்த போட்டியில் கிடைத்த மோசமான தோல்விக்குப் பின் ஆர்.சி.பி குறைந்தது வாஷிங்டன் சுந்தரையாவது அணிக்குள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கோலியைப் பற்றித்தான் தெரியுமே!

இஷாந்த் வீசிய முதல் ஓவரில் ஆறு ரன்கள்தான். மோரிஸ் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசிப் பாலில் நடையைக் கட்டினார் பார்த்திவ் படேல். கோலி, டிவில்லியர்ஸுக்கு அடுத்தபடியாக ஓரளவு ஃபார்மில் இருப்பது பார்த்திவ்தான். அவர் சீக்கிரமே அவுட்டாகிவிட்டதால் எக்ஸ்ட்ரா சுமை கோலியின் தலையில்! மூன்றாவதாகக் களமிறங்கினார் டிவில்லியர்ஸ். இதற்குத்தானே ஆசைப்பட்டது ஸ்டேடியம். கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகவே மோரிஸின் அடுத்த ஓவரில் தன் ஸ்டைலில் ஒரு சிக்ஸ் அடித்தார் டிவில்லியர்ஸ்.

இந்த இணையைப் பிரிக்காவிட்டால் இவர்கள் அடிக்கும் சிக்ஸ்கள் டெல்லி வரை பறக்கும் என்பதை உணர்ந்த ஸ்ரேயாஸ் தன் ட்ரம்ப் கார்டான ரபாடாவைக் கொண்டுவந்தார். பந்து மேல் பலன். டிவில்லியர்ஸ் காலி! பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 40/2. சின்ன ஸ்டேடியமான சின்னசாமியில் இது ரொம்பவே சுமாரான ஸ்கோர்தான். 'இதென்ன பிரமாதம்? ரன்ரேட்டை இன்னும் குறைக்கிறோம் பாருங்க' என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் சபதம் பூண்டு களமிறங்கினார்கள். அநியாயத்துக்கு பந்தைச் சாப்பிட்டார் ஸ்டாய்னிஸ். 17 பந்துகளில் 15 ரன்கள். அவர் அவுட்டானபோது ஸ்கோர் 11 ஓவர்களில் 66/3.

நிலைமையை உணர்ந்த மொயின் அலி களம் கண்ட வேகத்தில் ரன்கள் எடுக்கத் தொடங்கினார். அக்‌ஷர் படேல் ஓவரில் ஒரு சிக்ஸ், இஷாந்த் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என ஸ்கோரை விறுவிறுவென ஏற்றினார். லம்மிசேனே வீசிய முதல் பாலில் சிக்ஸ் அடித்துவிட்டு மூன்றாவது ஓவரில் கூக்ளிக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனாலும் 100-ஐத் தாண்டியிருந்தது ஸ்கோர். இன்னும் ஐந்து ஓவர்கள் இருக்கிறது, கோலியும் களத்தில் இருக்கிறார் என்பதால் எப்படியும் 170-ஐத் தொட்டுவிடலாம் என நினைத்தார்கள் ரசிகர்கள். 

ஆனால், ஆர்.சி.பி பேட்ஸ்மேன்கள் பெரிதாக கோலிக்கு ஸ்ட்ரைக் தரவே இல்லை. கடைசியாக கிடைத்த 17-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அடுத்த ஓவரில் ரபாடா வேகத்தில் நடையைக் கட்டினார். அவர் களத்தில் இருந்தது 84 நிமிடங்கள். ஆனால், 33 பந்துகள்தான் அவர் சந்தித்தது. இதனாலேயே ஸ்கோரும் ஏறவில்லை. அந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்களைக் கழற்றினார் ரபாடா. கடைசி 2 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆர்.சி.பி. டெல்லிக்கு இலக்கு 150 ரன்கள்.

கடந்த ஆட்டத்தில் 'இந்தா அடிச்சுக்கு' என வாரிக் கொடுத்த டிம் சவுதி இந்த இன்னிங்ஸின் மூன்றாவது பந்தில் தவானை பெவிலியன் அனுப்பினார். ஸ்ரேயாஸ் மகிமையில் அவருக்கு இரண்டாவது விக்கெட்டும் கிடைத்திருக்கும் பார்த்திவ் கேட்ச் பிடித்திருந்தால்! கேட்ச் ட்ராப். ஆனால், அதெல்லாம் பரவாயில்லை எனச் சொல்வதுபோல அடுத்தடுத்து சூப்பராகச் சொதப்பினார்கள் ஆர்.சி.பி 'ஃபீல்டர்கள்'. சவுதி வீசிய 3வது ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள். மெனக்கெடவே இல்லை ப்ரித்வி ஷா. ஜென்டில் டச். 

டார்கெட் கம்மியென்பதால் இரு பேட்ஸ்மேன்களும் நிதானமாகவே ஆடினார்கள். வாகாக வரும் பந்துகளை மட்டும் பவுண்டரி தட்டுவது மற்றபடி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது எனப் பை பாஸில் செல்லும் பஸ் போல ஒரே வேகத்தில் சென்றார்கள். பவர்ப்ளே முடிவில் 53 ரன்கள். அடுத்தடுத்த ஓவர்களிலும் ரன்ரேட்டை 7க்கு குறையாமல் மெயின்டெயின் செய்தார்கள். 'என்ன இவ்ளோ கஷ்டப்படுறீங்க? இந்தாங்க!' என 11வது ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார் நெகி. அடுத்து வந்த மொயின் 2 ரன்கள் மட்டுமே கொடுக்க, 'பங்காளி நானும் தர்றேன் பாரு' என சாஹலும் 12 ரன்கள் கொடுத்தார். 13 ஓவர்களில் 108 ரன்கள். 

பாலுக்கு ஒரு ரன் எடுத்தாலே போதும். ஆனாலும் டெல்லி பஞ்சாப்போடு விளையாடியது கோலிக்கும் நினைவு இருக்குமே! அதனால் நம்பிக்கையாக இருந்தார். ஷாவுக்குப் பின் களமிறங்கிய இங்க்ரமை திருப்பியனுப்பினார் மொயின். மறுமுனையில் பொறுமையாக ஆடிய ஸ்ரேயாஸ் அரைசதம் கடந்தார். 17 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி. வெற்றிக்கு ஆறு ரன்கள் மட்டுமே தேவை. விதி மறுபடியும் டெல்லி டக் அவுட்டில் டான்ஸ் ஆடத் தொடங்கியது. ஸ்ரேயாஸ், மோரிஸ் இருவரும் அடுத்தடுத்து அவுட். 

பன்ட்டும் அடுத்த ஓவரில் அவுட்டாக, சிரிப்பு வந்தது கோலி முகத்தில். அது வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கான சிரிப்பாக இருக்க வாய்ப்பில்லை. 'நாம பரவாயில்ல, டிசைன் டிசைனா தோக்குறோம். இவங்க ஒரே டிசைன்லதான் தோப்பாங்க போல' ரக சிரிப்பு அது. தட்டுத் தடுமாறி அக்‌ஷர் பவுண்டரி அடிக்க, பந்தைப் போலவே டெல்லியும் வெற்றிக்கோட்டைத் தொட்டது. டெல்லிக்கு மிகவும் தேவையாக இருந்த இரண்டு புள்ளிகள்.

ஆறு முறை தொடர்ந்து தோற்றிருக்கிறது பெங்களூரு. கடைசியாக இப்படி சீஸன் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து ஆறு போட்டிகள் தோற்றது டெல்லி அணிதான். 2013-ல்! இப்போது அதே டெல்லி (பெயர் மாற்றத்தோடு) பெங்களூருக்கு அந்தப் பரிசை கொடுத்திருக்கிறது. அடுத்த போட்டியில் தோற்றால் ஆர்.சி.பி-யின் மோசமான சாதனைகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் சாதனையாக இருக்கும் அது.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது. இத்தனை நாள்களாக 'winter is coming... winter is coming' எனச் சொல்லிக்கொண்டே இருந்த பனிக்காலமும் வந்துவிட்டது. வின்டரின் ஒவ்வொரு நாளையும் தாக்குப்பிடிப்பதில் இருக்கிறது ஸ்டார்க், லானிஸ்டர் உள்ளிட்ட எல்லாக் குடும்பங்களின் எதிர்காலமும். தோற்றபின்னும் தேற்ற ஆயிரக்கணக்கில் கூடும் ஆர்.சி.பி குடும்பத்துக்கும் இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். அதில்தான் இருக்கிறது ஆர்.சி.பி-யின் எதிர்காலம். Your Winter is coming RCB... Are you ready?  

அடுத்த கட்டுரைக்கு