Published:Updated:

தெறிக்கவிட்ட அல்சாரி ஜோசப்; திணறிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் - மும்பை வெற்றி!

தெறிக்கவிட்ட அல்சாரி ஜோசப்; திணறிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் - மும்பை வெற்றி!
தெறிக்கவிட்ட அல்சாரி ஜோசப்; திணறிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் - மும்பை வெற்றி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 

ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதேவீரர்களுடன் களமிறங்குகிறது. மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மலிங்கா இலங்கை திரும்பியிருப்பதால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை.

அதேபோல், யுவராஜுக்கும் இன்றைய பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக இஷான் கிஷான் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மும்பை அணியின் இன்னிங்ஸை கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் டிகாக் ஆகியோர் தொடங்கினர். முகமது நபி வீசிய 4வது ஓவரில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 10வது ஓவரில் 50 ரன்களைக் கடந்த மும்பை அணி, 18.1 ஓவரில்தான் 100 ரன்களை எட்டியது.

14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே மும்பை எடுத்திருந்தது. கடைசி 3 ஓவர்களில் பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் சித்தார்த் கௌல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணை துவக்கம் கொடுத்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 33 ரன்களை சேர்த்தது. சாஹர் வீசிய பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பேர்ஸ்டோ. சிறிது நேரத்தில் வார்னரும் நடையைக்கட்டினார்.பின்னர் வந்த விஜய் சங்கரும் நிலைக்கவில்லை. 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களை சேர்ந்திருந்தது ஹைதராபாத். தடுமாற்றத்துடனே காணப்பட்ட ஹைதராபாத் அணி, மும்பையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதன் விளைவாக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

யூசுப் பதான், ரஷித் கான், சித்தார்த் கவுல் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலே நடையை கட்டினர். இதனால் ஹைதராபாத்தை 18 ஓவர்களுக்குள்ளாகவே சுருட்டியது மும்பை. அணியில் சேர்க்கப்பட்டதற்கு உரிய பலனை தந்தார் அல்சாரி ஜோசப். 3.4 ஓவரை வீசி 12 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்திய அவர், ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். பேஹரன்ட்ராப், பும்ரா தலா 1 விக்கெட்டையும், சாஹர் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.