Published:Updated:

ஏயப்பா.... கோலிக்கு மரண அடி... ரஸ்ஸலின் காட்டடி! - ஆர்.சி.பியை சாய்த்த கே.கே.ஆர்

ஏயப்பா.... கோலிக்கு மரண அடி... ரஸ்ஸலின் காட்டடி! - ஆர்.சி.பியை சாய்த்த கே.கே.ஆர்
ஏயப்பா.... கோலிக்கு மரண அடி... ரஸ்ஸலின் காட்டடி! - ஆர்.சி.பியை சாய்த்த கே.கே.ஆர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். பெங்களூர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஹெட்மெயருக்குப் பதிலாக டிம் சவுத்தியும், உமேஷ் யாதவுக்குப் பதிலாக பவன் நெகியும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, டிம் சவுத்தி இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கிறார். கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக, நிகில் நாயக்கிற்குப் பதிலாக சுனில் நரேன் களமிறங்கினார்.

பெங்களூர் அணியின் இன்னிங்ஸை கேப்டன் விராட் கோலியும், விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலும் தொடங்கினர். முதல் ஓவரிலேயே இந்த ஜோடி அதிரடி காட்டத் தொடங்கியது. இதனால், பவர் ப்ளேவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது. 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பார்த்திவ் படேல் 8-வது  ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் கோலியுடன் டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, கொல்கத்தா அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன் குவித்தனர்.இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. 31 பந்துகளில் அரை சதமடித்த விராட் கோலி, 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிவிலியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர்களில் ஸ்டோயினிக்ஸ் அதிரடி காட்ட, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. ஸ்டோயினிக்ஸ் 13 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு க்ரிஷ் லைன் மற்றும் சுனில் நரேன் இணை துவக்கம் கொடுத்தது. நவ்தீப் ஷைனி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சுனில் நரேன். அடுத்ததாக களமிறங்கிய ராபின் உத்தப்பா, க்ரிஷ் லைனுடன் கைகோத்தார். அதிரடி காட்டிய இந்த ஜோடி பெங்களூர் பெளலர்களுக்கு டஃப் கொடுத்தது. 9- வது ஓவரில் நெகி வீசிய பந்தில் அவுட்டாகி நடையைக் கட்டினார் உத்தப்பா. 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களைச் சேர்ந்திருந்தது கொல்கத்தா. அடுத்ததாக நிதிஷ் ரானா களமிறங்கிய சிறிது நேரத்தில் க்ரிஷ் லைன் போல்டாக, தினேஷ் கார்த்திக் மைதானத்துக்குள் வந்தார்.

15 ஓவரில் நிதிஷ் ரானா கைக்கு கொடுத்த கேட்சை மிஸ் செய்தார் சிராஜ். அவர் பிடிக்கத் தவறிய இரண்டாவது கேட்ச் இது. ஆனால், அடுத்த பந்தில் மீண்டும் சாஹலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார் ரானா. அடுத்த ஓவரே தினேஷ் கார்த்திக்கும் வெளியேறிய நிலையில், ரஸ்ஸல் மற்றும் கில் இணை 17 ஓவரில் கைகோத்தது. ரஸல் பெங்களூர் பெளலர்கள் வீசிய பந்துகளில் வானவேடிக்கை நிகழ்த்தினார். அவரை வெளியேற்ற முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர். வீசிய பந்துகளையெல்லாம் சிக்ஸராக மாற்றிய அவர், 19 ஓவரிலே மேட்சை முடித்துக்கொடுத்தார். 13 பந்துகளில் 7 சிக்ஸர்களை அடித்து 48 ரன்களைச் சேர்ந்து மிரட்டினார். அவரது இந்த ஆட்டத்தால் கொல்கத்தாவின் வெற்றி இலகுவானது. பெங்களூர் அணி தரப்பில் அதிகபட்சமாக சைனி மற்றும் நெகி தலா 2 விக்கெட்டுகளையும், சாஹல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.