Published:Updated:

`இந்த ஹர்டிக் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!’ - #MIvCSK ரிப்போர்ட்

`இந்த ஹர்டிக் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!’ - #MIvCSK ரிப்போர்ட்

தோனி, ஜடேஜா மற்றும் சாஹரின் விக்கெட்டுகளை எடுத்து `ஆர்ம்ஸ பார்த்தியாடா' என்றார் ஹர்திக் பாண்டியா. ப்ராவோவின் விக்கெட்டை எடுத்துவிட்டு `ஹேர்ஸ்டைலை பார்த்தியாடா' என்றார் மலிங்கா.

`இந்த ஹர்டிக் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!’ - #MIvCSK ரிப்போர்ட்

தோனி, ஜடேஜா மற்றும் சாஹரின் விக்கெட்டுகளை எடுத்து `ஆர்ம்ஸ பார்த்தியாடா' என்றார் ஹர்திக் பாண்டியா. ப்ராவோவின் விக்கெட்டை எடுத்துவிட்டு `ஹேர்ஸ்டைலை பார்த்தியாடா' என்றார் மலிங்கா.

Published:Updated:
`இந்த ஹர்டிக் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!’ - #MIvCSK ரிப்போர்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெர்சஸ் மும்பை இந்தியன்ஸ் மேட்ச், எப்போதும் சும்மா அனல்பறக்கும். கிரவுண்டில் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் மோதலைவிட, வெளியில் இரு அணி ரசிகர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள்தான் டரியலாய் இருக்கும். `உங்களுக்கு இந்தியா கேட்டு, எங்களுக்கு எல்.ஐ.சி வெயிட்டு. உங்களுக்கு கோவால பீச், எங்களுக்கு மெரினாதான் மாஸ். உங்களுக்கு ஹிட்மேன்னா, எங்களுக்கு கேப்டன் கூல்...' என பாட்ஷாவும் ஆன்டனியுமாகச் சண்டையிட்டு, மீம்களாலேயே மூன்றாம் உலகப் போருக்கு அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருப்பார்கள். நேற்றும் போட்டார்கள்..! கலவர பூமியான வான்கடே மைதானத்தில் நேற்றைய ஐபிஎல் போட்டி நடைபெற்றது. 

டாஸ் ஜெயித்த கேப்டன் கூல், பெளலிங்கை தேர்ந்தெடுத்தார். `மீசை வைத்த அமுல் பேபி' குயின்டன் டி காக்கும் `ஹிட்மேன்' ரோகித்தும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தார்கள். வழக்கம்போல், `டி20 மேட்ச்ல 200 அடிச்சு பார்த்ததில்லையே. இன்னைக்கு பார்ப்ப' என்ற காற்றில் கம்பு சுற்றிக்கொண்டிருந்தார்கள் ரோகித் ரசிகர்கள். முதல் ஓவரை வீசிய தீபக் சாஹர், வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார். இரண்டாவது ஓவரில்தான் சென்னை ரசிகர்களே எதிர்பாராத அந்த அதிசயம் அரங்கேறியது. வெறும் 1 ரன் மட்டும் கொடுத்து தன் முதல் ஓவரை முடித்து, அம்பயரிடம் அமைதியாகத் தொப்பியை வாங்கிக்கொண்டு கிளம்பினார் ஷர்துல் தாக்குர்.

`சூப்பரு 5 பந்தை மொத்தமா திண்ணுட்டு, கடைசி பந்துல சிங்கிள் தட்டி செட்டிலாகுதுடா சிங்கம்' என ரோகித் ரசிகர்கள் புன்னகைத்தார்கள். சாஹர் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி வீரநடை ஆரம்பித்த டிகாக், மூன்றாவது பந்தை கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ரோகித்துடன் களமாட சூர்யகுமார் இணைந்தார். ஷர்துல் தாக்குர் தன் முதல் ஓவரில் நிகழ்த்தியது உண்மையிலேயே அதிசயம்தான். ஏனென்றால், அதிசயம் எல்லாம் அடிக்கடி நிகழாது. தான் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில், சூர்யகுமாருக்கு இரண்டு பவுண்டரியையும் ரோகித்துக்கு ஒரு பவுண்டரியையும் கொடுத்துவிட்டு, அதேபோல் அமைதியாக அம்பயரிடம் தொப்பியை வாங்கிக்கொண்டு கிளம்பினார் தாக்குர். `இப்போதான் எல்லாம் நார்மலா நடக்குது’ என ஆசுவாசமானார்கள் சென்னை ரசிகர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாக்குருக்கு ஏற்பட்ட வலியைத் தானும் உணர நினைத்தாரோ என்னவோ, சாஹரும் ஐந்தாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் கொடுத்தார். ஆரம்பத்தில் அடக்கம் காட்டிய மும்பை, மெல்லப் பூகம்பத்தை ஆரம்பித்தது. மீண்டும் தாய் கழகத்தில் இணைந்திருக்கும் மோகித் சர்மா, தனது முதல் ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து தம்ஸ் அப் காட்டினார். ஆட்டத்தின் எட்டாவது ஓவரில், பந்து வீச வந்தார் ஜடேஜா. தலையில் அவர் அணிந்திருந்த `டின்டா' பேன்டை பார்க்கையில்தான் கொஞ்சம் `கெதக்' என்றிருந்தது. ஆனால், `கெதக்'கை எல்லாம் ஓரம் தள்ளி, ரோகித்தின் விக்கெட்டை `சதக்' எடுத்தார். யுவி களமிறங்கினார், 4 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு சோகமாகக் கிளம்பினார். விக்கெட் எடுத்த குஷியில், இன்னொரு முறை கிரவுண்டை அளந்து பார்த்தார் இம்ரான் தாஹிர். 

அடுத்ததாக, சூர்யகுமாருடன் க்ருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த இணை, 4வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தின. மும்பையின் இறுதி ஸ்கோருக்கு, இந்த 62 ரன்கள்தான் வலுவான அடித்தளம் போட்டது. சென்னை வீரர்கள் பாய்ந்து, விழுந்து, பறந்தெல்லாம் ஃபீல்டிங் செய்தார்கள். ஆனால், பந்துதான் கைகளில் சிக்கவேயில்லை. க்ருணால் கொடுத்த ஒரு கேட்சையும் கோட்டைவிட்டார் மோகித். அதற்குக் கைமாறாக 17-வது ஓவரில், க்ருணாலின் விக்கெட்டை எடுத்தார் மோகித். ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு, 32 பந்துகளில் 42 ரன்களோடு கிளம்பினார் க்ருணால். அதற்கு அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி, தன் அரைசதத்தைப் பதிவு செய்தார் சூர்யகுமார் யாதவ். 18-வது ஓவரின் கடைசிப்பந்தில் அவரும் அவுட்டாகி பெவிலியனுக்குத் திரும்பினார்.

இன்னும் இரண்டு ஓவர்கள்தான் மிச்சம் இருக்கிறது என்ற நிலையில், `மும்பை இந்தியன்ஸ்' அணியின் நிரந்தர உறுப்பினர் பொலார்டும் `கிரிக்கெட்டின் நெய்மார்' ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்த அடித்த அடியில் ஸ்கோர்போர்டில் ரன்கள் `டபக் டபக்' என எகிறியது. பிராவோ ஓவரில் ஹெலிகாப்டர் ஷாட் எல்லாம் அடித்தார் ஹர்திக். இருவரும் சேர்ந்து இரண்டே ஓவர்களில், 125 என்றிருந்த ஸ்கோரை 170 ஆக மாற்றினர். கடைசி ஓவரில் மட்டும் 29 ரன்கள் கொடுத்தார் பிராவோ. ``இந்த ஹர்டிக் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்" என வெறியாகி வெள்ளைப் பந்துகளை மேற்கொண்டு வெளுத்தெடுத்தார் ஹர்டிக். ஜடேஜா அணிந்திருந்த அந்த `டின்டா' பேன்டை, பிராவோதான் உண்மையில் அணிந்திருக்க வேண்டும். 

171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு இன்னிங்ஸை ஆரம்பித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். தொட்டுத்தொடரும் பாரம்பர்ய முறைப்படி வாட்சனும் ராயுடுவும் ஓப்பனிங் இறங்கினர். பெஹண்டார்ஃப் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கேஸுவலாக வெளியேறினார் ராயுடு. போன சீஸன், கட்டமராயுடுவாக மாஸ் காட்டிய ராயுடு, இந்த சீஸன் மட்டமராயுடுவாகத் திண்டாடிக்கொண்டிருக்கிறார். மலிங்கா வீசிய அடுத்த ஓவரிலேயே வாட்சனும் அவுட். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் முகத்தில் மெள்ள மெள்ள சோகக்கலை தாண்டவமாடத் தொடங்கியது. ரெய்னாவும் கேதார் ஜாதவும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அவுட் ஆனார் ரெய்னா.

பந்தை ஸ்வீப்பர் கவர் பக்கமாக ரெய்னா விளாச, கையை நீட்டி, குட்டிக்கரணம்போட்டு, நெஞ்சைத்தட்டி, `ஆஹா'ன்னு சொல்வதுமாதிரி `சூப்பர் டூப்பர் டீலக்ஸ்' கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார் பொல்லார்டு. சென்னை ரசிகர்களுக்கு இப்போதே மயக்கம் வர ஆரம்பித்தது.  போதாக்குறைக்கு, தோனியின் ஆட்டம் வேறு கொட்டாவி வரவைக்க, ``இன்னைக்காவது டைமுக்கு தூங்குவோம்" என திடீர் பொறுப்பு வந்து கொசுவர்த்தி சுருளைத் தேட கிளம்பினார்கள் சி.எஸ்.கே ரசிகர்கள். தோனியும் கேதாரும் அவுட்டாக, மும்பையிடம் மொத்தமாகச் சரண்டர் ஆனது சென்னை.

தோனி, ஜடேஜா மற்றும் சாஹரின் விக்கெட்டுகளை எடுத்து `ஆர்ம்ஸ பார்த்தியாடா' என்றார் ஹர்திக் பாண்டியா. ப்ராவோவின் விக்கெட்டை எடுத்துவிட்டு `ஹேர்ஸ்டைலை பார்த்தியாடா' என்றார் மலிங்கா. `நான் மேட்சே பார்க்கலைடா' எனக் கடுப்பாகி டிவியை ஆஃப் செய்தார்கள் சென்னை ரசிகர்கள். ஆட்டத்தின் 20-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி இன்னொரு அதிசயத்தை நிகழத்த தொடங்கினார் ஷர்துல். ஆனால், அதற்கு மேல் பந்துகள் இல்லாததால் நிகழ மறுத்த அற்புதமாக அது மாறிப்போனது. கேதர் ஜாதவ் மட்டும் 54 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார். 

இறுதியில், 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். பாண்டியன்... ஹர்திக் பாண்டியனுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. ராயுடுவின் தொடர்ச்சியான சொதப்பல், சிலபல ஃபீல்டிங் தவறுகள், எடுபடாத டெத் ஓவர் பெளலிங், பொலார்டின் நம்பமுடியாத கேட்ச் எல்லாம் மொத்தமாகச் சேர்ந்து நேத்து சென்னையைக் காவு வாங்கிவிட்டது. அதான் அடுத்த மேட்ச் இருக்குல்ல, வாங்கயா வாங்கயா எங்க ஏரியாவுக்கு வாங்கயா..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism