Published:Updated:

சாம் கரன் ஹாட்ரிக்; சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள் - பஞ்சாப் வெற்றியை எளிதாக்கிய டெல்லி!

`ஒரு கட்டத்துக்கு மேல் பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். சொல்லப்போனால் கடைசி 4 ஓவர்களில் மட்டும் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது டெல்லி. இதன்மூலம் பஞ்சாப் அணியின் வெற்றியை எளிதாக்கிவிட்டது டெல்லி'

சாம் கரன் ஹாட்ரிக்; சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்  - பஞ்சாப் வெற்றியை எளிதாக்கிய டெல்லி!
சாம் கரன் ஹாட்ரிக்; சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள் - பஞ்சாப் வெற்றியை எளிதாக்கிய டெல்லி!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அவேஷ் கான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். அதேநேரம், பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கெய்ல் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக சாம் கரன் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் ஆண்ட்ரூ டைக்குப் பதிலாக முஜிபுகீர் ரஹ்மான் இடம்பிடித்தார். கெய்ல் இல்லை என்பதால் கேஎல் ராகுலுடன் சாம் கரன் ஓப்பனிங் வீரராகக் களம்புகுந்தார்.

முதல் ஓவரை அதிரடியுடன் துவக்கிய கே.எல் ராகுல் 11 ரன்களுடன் 2வது ஓவரிலேயே வெளியேற, 20 ரன்களில் நான்காவது ஓவரிலேயே சாம் கரன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மாயங் அகர்வால் கைகொடுக்கத் தவறினாலும், சர்ப்ராஸ் கான் - டேவிட் மில்லர் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் 39 ரன்களில் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து மில்லரும் பன்ட்டிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் பின் வந்த மற்ற வீரர்கள் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  


167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் இணை துவக்கம் கொடுத்தது. அஸ்வின் வீசிய முதல் பந்திலே கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நகர்ந்தார் பிரித்வி ஷா. பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும், தவானும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7 ஓவரில் ஸ்ரேயாஸ் நடையைக் கட்ட ரிஷப் பண்ட் களத்துக்கு வந்தார். 9 ஓவரில் தவானும் அவுட் ஆக, 3 விக்கெட்டுகளை இழந்து 10 ஓவருக்கு 83 ரன்களைச் சேர்த்திருந்தது டெல்லி. ரிஷப் பண்ட்டுன் கோலின் இங்ராம் கைகோத்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஷமி வீசிய பந்து ஸ்டம்பை பதம் பார்க்க பெவிலியனுக்குத் திரும்பினார் பன்ட்.

17-வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 144 ரன்களைச் சேர்ந்திருந்தது. அடுத்ததாக களத்துக்கு வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைக்கவில்லை. வந்ததும் போவதுமாகவே இருந்தனர். 16 ஓவரிலிருந்து விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிந்தன. மொத்தம் 5 பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தன. கெய்லுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சாம் கரன், தன்னை இணைத்ததற்கான நியாயத்தை வெளிப்படுத்தினார். ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி, டெல்லியை மிரட்டினார். தடுமாற்றத்திலே இருந்த டெல்லி 152 ரன்களில் சுருண்டது. பஞ்சாப் தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அஸ்வின், ஷமி 2 விக்கெட்டுகளும், ஹார்டஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.