Published:Updated:

போராடிய ராஜஸ்தான்; விக்கெட்டுகளால் மிரட்டிய பௌலர்கள் - சி.எஸ்.கே வெற்றி!

போராடிய ராஜஸ்தான்; விக்கெட்டுகளால் மிரட்டிய பௌலர்கள் - சி.எஸ்.கே வெற்றி!
போராடிய ராஜஸ்தான்; விக்கெட்டுகளால் மிரட்டிய பௌலர்கள் - சி.எஸ்.கே வெற்றி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 12வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான மிட்செல் சாட்னர் களமிறங்குகிறார்.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குகிறது. இதையடுத்து சென்னை அணியின் இன்னிங்ஸை ஷேன் வாட்சன் மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோர் தொடங்கினர். ராஜஸ்தான் அணியிடம் வேகப்பந்துவீச்சு நன்கு எடுபடவே, சென்னை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தடுமாறினர். தவால் குல்கர்னி வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் ராயுடு ஆட்டமிழந்தார். அந்த ஓவரை ஆர்ச்சர் மெய்டனாக வீசினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் வாட்சனும் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த ஜாதவும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி 4.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் கேப்டன் தோனி கைகோத்தார்.

இந்த ஜோடி நிதானமாக ரன் குவிக்கத் தொடங்கியது. பவர் ப்ளே முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்திருந்தது.  9.3 ஓவர்களில் 50 ரன்களை சென்னை கடந்தது. 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரெய்னா 36 ரன்களுடன் வெளியேறினார். அதன்பின்னர் தோனியுடன் பிராவோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் ரேட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது.

அதிரடி காட்டிய தோனி - பிராவோ ஜோடி 5வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. பிராவோ 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தோனி, 39 பந்துகளில் அரைசதமடித்தார். ஐ.பி.எல் தொடரில் இது அவரது 21வது அரைசதமாகும். கடைசி 3 ஓவர்களில் 60 ரன்கள் குவிக்கவே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. தோனி 46 பந்துகளில் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 10 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 120 ரன்கள் குவித்தது.176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே, பட்லர் இணை துவக்கம் கொடுத்தது. தீபக் சஹார் வீசிய 2வது பந்திலே ரஹானே வெளியேறினார். தொடர்ந்து 3வது ஓவரிலே சாம்சனும், பட்லரும் நடையைக்கட்ட 4 ஓவருக்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் கைகோத்த ராஹூல் திரிபாதியும், ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்மித் ஒருபுறம் நிதானமான ஆட்டத்தை தொடர, ராஹூல் திரிபாதி பந்துகளை எல்லைக்கோட்டை நோக்கி விரட்டினார். 24 பந்துகளில் 34 ரன்களைச் சேர்ந்த திரிபாதியை 9வது ஓவரின் இறுதிப் பந்தில் இம்ரான் தாஹிர் பெவிலியனுக்குத் திருப்பினார். 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவர்களில 74 ரன்களைச் சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் ஸ்மித்துடன் கைகோத்தார். பின்னர் வந்த யாரும் பெரிய அளவில் ரன்களை சோபிக்கவில்லை. மறுமுனையில்  நிலைத்து ஆடிய ஸ்டோக்ஸை ப்ராவோ வெளியேற்ற, சி.எஸ்.கேவுக்கு வெற்றி எளிதானது. 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில், தீபக் சஹார், தாகூர், இம்ரான் தாஹிர், ப்ராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.