Published:Updated:

பவுலிங்கில் அரைசத புவி, பேட்டிங் கேமியோ ரஷித்! #SRHvsRR

அடித்து ஆடவேண்டிய பவர்ப்ளேயில் நிதானமாக ஆடும் ஸ்டைல் கொண்ட ரஹானே பொருந்தமாட்டார் என கடந்த ஆண்டே விமர்சனங்கள் கிளம்பின. அதை மெய்யாக்குவதுபோல முதல் மூன்று ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான்.

பவுலிங்கில் அரைசத புவி, பேட்டிங் கேமியோ ரஷித்! #SRHvsRR
பவுலிங்கில் அரைசத புவி, பேட்டிங் கேமியோ ரஷித்! #SRHvsRR

முதல் போட்டியில் தோல்வி பெற்றிருந்த சன்ரைஸர்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் இரண்டு புள்ளிகளுக்காக நேற்று மோதின என்று சொல்லலாம்தான். ஆனால், அதைவிட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தது வார்னர் vs ஸ்மித் போட்டியைத்தான், இருவரும் ஓராண்டு தடைக்குப் பின் தங்களின் அணிக்காக களமிறங்குகிறார்கள். இந்த இரண்டு கங்காருகளில் சீறிப் பாயப்போவது யார் என்பதுதான் ரசிகர்களின் பிரதான கேள்வியாக இருந்தது. 

சன்ரைஸர்ஸ் அணியில் மிஸ்டர் அமைதி கேன் வில்லியம்சனும் ஸ்பின்னர் நதீமும் இடம்பெற்றிருந்தார்கள். ஷகிப்பும் தீபக் ஹூடாவும் அவுட். ராஜஸ்தான் அதே அணியோடு களமிறங்கியது. டாஸ் வென்ற ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

ஓபனிங் இறங்கினார்கள் ரஹானேவும் பட்லரும். ரஹானே ராஜஸ்தானுக்கு ஓபனிங் இறங்குவது குறித்து ஏற்கெனவே சில விமர்சனங்களுண்டு. அடித்து ஆடவேண்டிய பவர்ப்ளேயில் நிதானமாக ஆடும் ஸ்டைல் கொண்ட ரஹானே பொருந்தமாட்டார் என கடந்த ஆண்டே விமர்சனங்கள் கிளம்பின. அதை மெய்யாக்குவதுபோல முதல் மூன்று ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். 'சரி பாட்ஷா பாய் பட்லர் இருக்கார் பாத்துக்குவார்' என ரசிகர்கள் தெம்பான நேரத்தில் பொசுக்கென அவரை போல்ட் ஆக்கினார் ரஷித். ராஜஸ்தான் டக் அவுட் மொத்தமாக அதிர்ச்சியானது. பட்லர் vs ரஷித் போட்டியில் எப்போதும் ஜெயிப்பது ரஷித் தான்.

ஒன் டவுனில் இறங்கினார் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சஞ்சு சாம்சன். அவரும் நிதானமாகவே ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே முடிவில் 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான். ஆனால் அடுத்த ஓவரிலிருந்தே தன் வேலையைத் தொடங்கினார் சாம்சன். ஓவருக்கு ஒரு சிக்ஸ் அல்லது பவுண்டரி அடித்து ரன்ரேட்டை சீராக அதிகப்படுத்திக்கொண்டே சென்றார். 10,11,12 ஆகிய மூன்று ஓவர்களில் மட்டும் 39 ரன்கள் இந்த ஜோடி குவிக்க சட்டென ஸ்கோர் எகிறியது. 

ஸ்கோர் சட்டென ஏறும்போதெல்லாம் ரஷித்தை கொண்டுவருவது வில்லியம்சனின் பழக்கம். ஆனால் அவருக்கு வெறும் நான்கு ஓவர்கள்தானே! அந்த ஓவர்களில் மட்டும் அடக்கி வாசித்துவிட்டு மற்ற ஓவர்களில் வெளுத்து வாங்கினார்கள் ரஹானேவும் சாம்சனும். 38 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரஹானே. அடுத்த ஓவரிலேயே சாம்சனும் அரைசதம் கடந்தார். அதன்பின் ரன்குவிப்பில் வேகம் காட்டிய ரஹானே 70 ரன்களில் நதீமிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 2016க்குப் பின் ஐ.பி.எல்லில் ரஹானேவின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 

மறுபக்கம் ஈவு இரக்கமே பார்க்காமல் வறுத்தெடுத்தார் சாம்சன். இந்தியாவின் முன்னணி பவுலரான புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் 24 ரன்களைக் குவித்தார் சாம்சன். புவனேஷ்வர் வீசிய 20வது ஓவரின் முதல் பாலில் பவுண்டரி அடித்து தன் இரண்டாவது ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்தார் சாம்சன். 34 பந்துகளில் அரைசதம் அடித்த சாம்சன் அடுத்த 20 பந்துகளில் சதமடித்தார். அசுர வேகம். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள். கடந்த ஆண்டு அவரை மிரட்டிய டெத் ஓவர் பவுலிங் பார்ம் அவுட் இந்த ஆண்டும் தொடர்வதுதான் சோகம். 20 வார்கள் முடிவில் 198 ரன்கள் குவித்திருந்தது ராஜஸ்தான்.

இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்வது வார்னர் அதிரடியாக ஆடினால் மட்டுமே சாத்தியம். 'அதான் நான் இருக்கேன்ல' என முதல் ஓவரிலிருந்தே விரட்டத் தொடங்கினார் வார்னர். வரிசையாக பவுண்டரிகள் அடித்து ஆறாவது ஓவரிலேயே அரைசதம் கடந்தார் வார்னர். ''When Warner is on strike the best seat on the ground is the non-striker's end'' என்பார்கள் வர்ணனையாளர்கள். உண்மைதான். மறுபக்கமிருந்த பேர்ஸ்டோவுக்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனாலும் வார்னர் அடிப்பதை 'கமான் பார்ட்னர் கமான் பார்ட்னர்' என கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தார்.

ருத்ரதாண்டவமாடிய வார்னர் அதன்பின் ஸ்ட்ரைம் ரொட்டேட் செய்ய பேர்ஸ்டோவும் தன் பங்கிற்கு வெளுத்தார். இந்த ஜோடியின் அதிரடியில் 9 ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்தது டீம் ஸ்கோர். அப்போதே வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் வார்னரும் பேர்ஸ்டோவும் அவுட்டாக, லைட்டாக நகம் கடிக்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள்.

அவர்களை மேலும் டென்ஷனாக்க வேண்டாமே என விஜய் ஷங்கர் சிக்ஸ்களை பறக்கவிடத் தொடங்கினார். 'யாரு சாமி நீ? எங்க இருந்த இத்தன நாளா?' என டெல்லிக்கு மானசீகமாக நன்றி சொன்னார்கள் ஹைதராபாத் ரசிகர்கள். 15 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அவுட்டானார் விஜய் ஷங்கர். 'பங்காளி உன்னைவிட நான் ஸ்பீடா அவுட்டாகுறேன் பாரு' என மனிஷ் பாண்டேவும் நடையைக் கட்ட, திரும்பவும் அதே நகம் கடிக்கும் சீன்கள்.

இத்தனை நாட்களாக தூக்காமல் டீமில் வைத்திருப்பதற்கு நன்றிக்கடனாக ஒரே ஒரு சிக்ஸ் அடித்தார் யூசுப் பதான். 'இது போதுமே' என மறுபக்கம் பந்தைப் புரட்டி எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் ரஷித். கடைசி நேரத்தில் களமிறங்கி 8 பந்துகளில் 15 ரன்கள் குவித்து பவுலிங்கிலும் அசத்திய ரஷித் கானுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் வழங்கப்பட்டது.

இரு அணிகளின் பவுலிங் யூனிட்களும் வீக்காக இருப்பதை இந்த ஆட்டம் உணர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு மிரட்டிய சன்ரைஸர்ஸ் பவுலர்களில் ரஷித் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் எக்கச்சக்க ரன்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். ராஜஸ்தான் நிலைமையோ இன்னும் மோசம். பல கோடிகள் கொடுத்து எடுத்த உனட்கட் ஃபார்மில் இல்லை. தேர்ந்த ஸ்பின்னரும் அணியில் இல்லை. ஆர்ச்சர் ஒருவரை நம்பியே ஆட்டம் முழுவதையும் ஆடுகிறது அந்த அணி. இந்த மேட்ச்சிற்குப் பின் இரு அணிகளின் பவுலிங் கோச்களுக்கும் எக்கச்சக்க வேலை இருந்திருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.