Published:Updated:

சி.எஸ்.கே-வின் நெயில் பைட்டிங் ஃபினிஷஸ் ஆரம்பம்! #DCvCSK

சி.எஸ்.கே-வின் நெயில் பைட்டிங் ஃபினிஷஸ் ஆரம்பம்! #DCvCSK
சி.எஸ்.கே-வின் நெயில் பைட்டிங் ஃபினிஷஸ் ஆரம்பம்! #DCvCSK

சி.எஸ்.கே-வின் நெயில் பைட்டிங் ஃபினிஷஸ் ஆரம்பம்! #DCvCSK

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் மோதிய ஐ.பி.எல் போட்டி, டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 19.4 ஓவரின்போது வெற்றியை உறுதிசெய்த சென்னை அணி, இந்த சீஸனின் முதல் `நெய்ல் பைடிங் ஃபினிஷை’த் தொடங்கியுள்ளது. #DCvCSK


பிராவோவின் ஒரு ஓவர்... இரண்டு விக்கெட்டுகள்

பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற டெல்லி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ப்ரித்வி ஷா, தவான் கூட்டணியின் அதிரடி தொடங்குவதற்குள், சஹார் பந்துவீச்சில் ப்ரித்வி அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், வெறும் 18 ரன்களுக்கு தாஹிரின் பந்தில் ஆட்டமிழந்தார். தவான் - பன்ட் கூட்டணி ரன் சேர்க்கத் தொடங்கியது. 15-வது ஓவரின் முடிவில் 120 ரன்களை எட்டியிருந்தது டெல்லி அணி. ஒருபுறம் தவான் நிதானமாக அடிக்க, மறுபுறம் பன்ட் அதிரடியைத் தொடங்கினார். 13 பந்துகளில் 25 ரன்கள். இந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பிராவோ வீசிய 15-வது ஓவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஒரே ஓவரில், பன்ட் (25), இன்கிராம் (2) ஆகியோர் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப, டெல்லியின் ரன் குவிப்பு கட்டுக்குள் வந்தது. 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.

வாட்சன் அதிரடி

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, வாட்சன் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். இரண்டாவது ஓவரிலேயே, இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ராயுடு. விக்கெட் சரிவினால் சென்னை அணியின் பேட்டிங் ஸ்லோவாகும் என நினைத்தபோது, ரெய்னா - வாட்சன் ஜோடி ரன் சேர்க்கத் தொடங்கியது. மூன்று சிக்சஸ்ர்கள், நான்கு பவுண்டரிகள் என வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் வாட்சன். அரை சதம் கடப்பார் என எதிர்பார்த்தபோது, மிஸ்ராவின் பந்தைத் தூக்கி அடிக்க நினைத்தபோது, பந்து விக்கெட் கீப்பர் பன்ட்டின் கைகளை எட்டியது. கிரீஸைவிட்டு நகர்ந்த நூலிழையில், பன்ட் ஸ்டம்பிங் செய்ய வாட்சனின் விக்கெட் வீழ்ந்தது. இதேபோல, மிஸ்ரா வீசிய பந்தை பன்ட் கேட்ச் பிடிக்க, ரெய்னாவும் வெளியேறினார். 11 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 105/3.

நெயில் பைட்டிங் ஃபினிஷ்

கேதர் ஜாதவும் தோனியும் களத்தில் நிற்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 54 பந்துகளில் 43 ரன்கள் தேவை. 12-வது ஓவரிலிருந்து அடுத்த ஐந்து ஓவர்களில் 18 டாட் பால்கள், ஒரு பவுண்டரிகூட போகவில்லை. கடைசி 18 பந்துகள் மீதமிருந்த நிலையில், 22 ரன் தேவைப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக போட்டி டெல்லியின் பக்கம் சாய்ந்தது. `ஜெயிக்கவேண்டிய போட்டியை இப்படி இழுக்குறாங்களே. இன்னிக்கும் ஒரு நெயில் பைட்டிங் ஃபினிஷ் இருக்கப்போகுது. எனக்கு பி.பி ஏறுது, டென்ஷன் ஆகுது' என அப்பவே சி.எஸ்.கே ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் புலம்பத் தொடங்கினர். கீமோ பால் வீசிய 18-வது ஓவரில் தோனி பவுண்டரி அடித்த பிறகுதான் சென்னை ரசிகர்கள் ஆசுவாசப்பட்டனர். மிஷ்ரா வீசிய 19-வது ஓவரில் 1 சிக்ஸ், 3 சிங்கிள்ஸ் என 9 ரன். ஒரு வழியாக, கடைசி ஓவருக்கு 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி ஆட்டத்தைத் தொடர்ந்தது.

ரபாடா மிரட்டல்

வெற்றி நிச்சயம் என சென்னை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியபோது, அடுத்த அடி. ரபாடா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட். அடுத்த இரண்டு பந்துகள் டாட். ஜாதவ் வெளியேற, பிராவோ ஸ்டிரைக் செய்யக் களமிறங்கினார். போட்டி மேலும் விறுவிறுப்பாக, சென்னை அணி வெற்றிபெற மூன்று பந்துகளில் இரண்டு ரன் தேவை. ஃபேரோஸ் ஷா கோடலாவில் சேஸிங் செய்து கடைசி ஓவரில் வெற்றிபெறுவது சென்னை அணிக்குப் பழக்கமானதுதான்.  

கோட்லா மைதானத்தில், சென்னை அணி சேஸிங் செய்து கடைசி ஓவர் வெற்றி பெற்றதிலேயே நேற்றைய போட்டியில்தான் குறைவான ரன் இலக்கைக்கொண்டிருந்தது. ஐ.பி.எல் தொடரின் முதல் சீஸனில், சேவாக், கம்பிர், டிவில்லியர்ஸ் இருந்த டெல்லி அணி 187 ரன் குவித்தது. கடினமாக இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 2010-ம் ஆண்டு, 185 ரன் சேஸ், 2014-ல் 178. இப்படி கோட்லாவில் கோட்டை கட்டிய சென்னை அணி, நேற்றைய போட்டியிலும் வெற்றிபெற தவறவில்லை. 19-வது ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்த பிராவோ, சென்னையின் வெற்றியை உறுதிசெய்தார். 

அடுத்த கட்டுரைக்கு