Published:Updated:

`எப்போதும் வயதைத்தான் கேட்கிறாங்க; ஆனால் அதை ஒத்துக்கிறோம்!'- சென்னை வீரர் பிராவோ

`எப்போதும் வயதைத்தான் கேட்கிறாங்க; ஆனால் அதை ஒத்துக்கிறோம்!'- சென்னை வீரர் பிராவோ
`எப்போதும் வயதைத்தான் கேட்கிறாங்க; ஆனால் அதை ஒத்துக்கிறோம்!'- சென்னை வீரர் பிராவோ

'வயது என்பது வெறும் நம்பர்தான்' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ பேசியுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி, இந்தத் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. நேற்றைய போட்டி, ஜூனியர் - சீனியர்களுக்கு இடையேயான ஆட்டம் என வர்ணிக்கப்பட்டது. டெல்லி அணியில் அதிக அளவில் இளம் வீரர்களும், சென்னை அணியில் அதிக மூத்த வீரர்களும் இருந்ததால் இப்படி வர்ணிக்கப்பட்டது. டெல்லியைப் பொறுத்தவரை தவான், அமித் மிஸ்ரா, இஷாந்த் போன்றோர் 30 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும், பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேலானவர்கள்தான்.

அதிலும், பிரித்திவி ஷாவுக்கு 19 வயதுதான். ஆனால் சென்னையைப் பொறுத்தவரை தோனி (37), ஷேன் வாட்சன் (35), டுவைன் பிராவோ (34), இம்ரான் தாஹிர் (39),  ஹர்பஜன் சிங் (38), ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் (34), அம்பதி ராயுடு (33), கேதர் ஜாதவ் (33), சுரேஷ் ரெய்னா (32) என 30 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்களை எளிதில் வீழ்த்தி, சென்னை அணி வெற்றி கண்டது. சென்னையின் வெற்றிக்கு வாட்சன் மற்றும் பிராவோ ஆகியோர் முக்கியக் காரணமாக அமைந்தனர். வாட்சன் 44 ரன்களும், பிராவோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். வெற்றிக்குப் பிறகு பேசிய பிராவோ-விடம் வயது பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், ``வயது வெறும் நம்பர்தான் என்பதை நாங்கள் கடந்த ஐபிஎல் சீசனிலேயே நிரூபித்துவிட்டோம். எப்போதெல்லாம் சென்னை அணியைப் பற்றிய பேச்சு வருகிறதோ, அப்போதெல்லாம் வயதைக் குறிப்பிட்டே பேசுகின்றனர். நாங்கள் ஒன்றும் 60 வயது ஆனவர்கள் கிடையாது. 30 வயதுக்கு மேல்தான் ஆகிறது எங்களுக்கு. நாங்கள் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறோம். எங்கள் உடற்தகுதியை சரியாகக் கவனிக்கிறோம். மற்றவர்களைவிட எங்கள் அணியில் உள்ள நிறையப் பேருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. இருப்பினும் எந்த விளையாட்டிலும் அனுபவம் மட்டும் வெற்றியைத் தேடித்தராது. 

மற்ற அணிகளை ஒப்பிடுகையில், எங்கள் வீரர்கள் வேகமாகச் செயல்படுபவர்கள் கிடையாது, ஒத்துக்கொள்கிறேன். ஆனால், எங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதுகுறித்து நாங்கள் அறிந்துவைத்துள்ளோம். உலகின் தலைசிறந்த கேப்டன் எங்களை சிறப்பாக வழிநடத்துகிறார். எங்களால் வேகமாக விளையாட முடியாவிட்டாலும், ஸ்மார்ட்டாக விளையாட முடியும். அதைத்தான் செய்து வருகிறோம்" என்று பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய கேப்டன் தோனி, ``ஃபீல்டிங்கைத் தவிர்த்து, நாங்கள் எல்லா ஏரியாக்களிலும் சிறப்பாக விளையாடுகிறோம். சிறப்பான ஃபீல்டிங் உள்ள அணி நாங்கள் இல்லை. ஆனால், ஓரளவுக்கு ஃபீல்டிங்கில் செயல்படுகிறோம். ஃபீல்டிங்கில் செய்யும் தவறுகளை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரிசெய்கிறோம்" என்று கூறினார்.