Published:Updated:

அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!

அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!
அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!

எல்லோரும் ஜென்டில்மேன்களாக இருந்தால், கீப்பர் கேட்ச்களுக்கு அம்பயரிடம் அப்பீல் செய்யவேண்டிய தேவையே இருக்காதே! எத்தனை பேட்ஸ்மேன்கள் அம்பயர் அவுட் சொல்லும் முன் வெளியேறியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் விளையாடிய இந்த விளையாட்டில் சச்சின், கில்கிறிஸ்ட் என மிகச் சொற்ப உதாரணங்களை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

`அஷ்வின் செய்தது சரியா தவறா’ என்ற வாதம்தான் நேற்றிரவில் இருந்து ஒவ்வொருவராலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஜாஸ் பட்லரை `மன்கடட்’ முறையில் அவர் வெளியேற்ற, `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ பாதிக்கப்பட்டுவிட்டது என்று பலரும் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.சி.சி நடத்திய ஒரு ஆன்லைன் கருத்துக்கணிப்பில் 72 சதவிகிதம் பேர் அதைத் தவறு என்று சொல்லியிருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களோடு, இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் அஷ்வினைக் குறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஐ.சி.சி விதியின்படி இது சரிதான் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆக, என்ன முடிவுக்குதான் வருவது? 

`கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம்’ என்று சொல்பவர்கள், அதில் இருக்கும் உண்மையை முழுதாக உணர்ந்தாலே, இவ்வளவு எமோஷன் ஆகத் தேவையிருக்காது. இந்த `மன்கடட்’ முறையில் ஒரு பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யலாம் என்ற விதி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? பௌலர் பந்துவீசுவதற்கு முன், பேட்ஸ்மேன்கள் பல அடி முன் சென்றுவிடுகிறார்கள் என்பதனால்தானே! பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை அவமதித்ததால் உருவாக்கப்பட்டதுதான் இந்த விதி. இருக்கும் விதியின்படி செயல்பட்ட ஒரு பௌலர் மட்டுமே இன்று குற்றவாளியாகத் தெரிவதன் காரணம் என்ன?

அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!

இந்த ரன் அவுட்டை விட்டுவிடுவோம். விக்கெட் கீப்பர்கள் இதுவரை புத்திசாலித்தனமாக ரன் அவுட் செய்ததையெல்லாம் நாம் பெரிதுபடுத்தாதது ஏன்? எத்தனை முறை பேட்ஸ்மேன்கள், கிரீசிலிருந்து காலை எடுப்பதற்குக் காத்திருந்து தோனி ஸ்டம்பிங் செய்திருக்கிறார். எத்தனை கீப்பர்கள், பௌலரை வைட் வீசச்சொல்லி ஸ்டம்பிங் செய்திருக்கின்றனர். முதல் ஐ.பி.எல் தொடரில், லட்சுமி ரத்தன் சுக்லாவை தோனி ரன் அவுட் செய்ததும் இதைப் போன்றதுதான். அதையெல்லாம் கீப்பர்களின் புத்திசாலித்தனமாக ஏற்றுக்கொண்டவர்கள், இப்போது கேம் ஸ்பிரிட் என்ற கொடி பிடிப்பது ஏன்?

பேட்ஸ்மேன்கள், பேலன்ஸ் மீறி கிரீசிலிருந்து கால் எடுக்கும்வரை காத்திருந்து ஸ்டம்பிங் செய்வதும், ஓடிவரும் பேட்ஸ்மேனின் பேட், கிரீசைத் தொட்டுவிட்டு மேலெழும்போது ரன் அவுட் செய்வதும் எந்த வகையில் கேம் ஸ்பிரிட்? அது தவறு என்பதை உணர்ந்துதானே `பந்து ஸ்டம்பைத் தாக்கும் முன் பேட்ஸ்மேன் ஒருமுறை கிரீஸை ரீச் ஆகியிருந்தால் போதும். காலோ, பேட்டோ தரையைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அது ஜென்டில்மேன் ஆட்டம் இல்லை என்பதால் ஏற்படுத்தப்பட்ட விதிதானே இது. பின்னர், ஏன் இதுவரை நாம் அதைப் பெரிதுபடுத்தவில்லை?

அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!

கிரிக்கெட் ஆரம்பகாலத்திலிருந்து ஜென்டில்மேன்களின் கேமாக மட்டும்தான் இருக்கிறதா. அதுவும் இல்லைதானே! பௌன்சர் என்ற விஷயமே கேம் ஸ்பிரிட்டை மீறிய `பாடி லைன்’ பந்துவீச்சிலிருந்து வந்ததுதானே! 1932-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியின் டாப் பேட்ஸ்மேன்களை சமாளிக்க, உடலைக் குறிவைத்தே தொடர்ந்து பந்துவீசினார்கள் இங்கிலாந்து பௌலர்கள். அதன் பிறகுதான் ஓவருக்கு இத்தனை பௌன்சர்கள்தான் வீச வேண்டும் என்று விதி ஏற்படுத்தினார்கள். இப்படிப் பல்வேறு தருணங்களில் கேம் ஸ்பிரிட் என்பது கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

எத்தனையோ பொய்யான பிம்பங்களின் வழியாகத்தான் நாம் உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றுதான் `கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் கேம்’ என்பது. பௌலர்கள் ரிவர்ஸ் ஸ்விங்குக்காகப் பந்துகளைச் சேதப்படுத்தியது, பேட்ஸ்மேன்கள் அதிக எடைகொண்ட பேட்களைப் பயன்படுத்தியது, கடைசிப் பந்தில் அண்டர் ஆர்ம் பால் வீசியது, பேட்ஸ்மேன் சதமடிக்க ஒரு ரன் இருக்கும்போது நோ பால் வீசியது என எப்போதுமே இது முழு ஜென்டில்மேன் கேமாக இருந்ததில்லை. சிலர் மட்டும் முழுமையான ஜென்டில்மேன்களாக விளையாடியிருக்கிறார்கள். சிலர் அந்தப் பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போக, விளையாட்டில் இன்று அப்படியான குணத்தை எதிர்பார்க்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எல்லோரும் ஜென்டில்மேன்களாக இருந்தால், கீப்பர் கேட்ச்களுக்கு அம்பயரிடம் அப்பீல் செய்ய வேண்டிய தேவையே இருக்காதே! எத்தனை பேட்ஸ்மேன்கள் அம்பயர் அவுட் சொல்லும் முன் வெளியேறியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் விளையாடிய இந்த விளையாட்டில் சச்சின், கில்கிறிஸ்ட் என மிகச் சொற்ப உதாரணங்களை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!

விளையாட்டைப் பொறுத்தவரை ஒருவன் தன் எதிராளியை `deceive’ செய்ய வேண்டும். அதாவது ஏமாற்ற வேண்டும். பெனால்டி அடிக்கச் செல்பவன் கோல்கீப்பரை ஏமாற்ற வேண்டும். செட்டராக நிற்பவன், டிராப் போடுவதுபோல் எதிரணி செட்டரை ஏமாற்ற வேண்டும். பேட்ஸ்மேன், பௌலரை ஏமாற்ற வேண்டும். பௌலர், பேட்ஸ்மேனை ஏமாற்ற வேண்டும். வெற்றி பிரதானமாகும்போது இவைதான் அதற்கு வழிவகுக்கும். வலது கை பேட்ஸ்மேனுக்கென லென்த், லைன் அனைத்தையும் பிளான் செய்து அந்த பௌலர் வீசும்போது, பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேன் ஸ்விட்ச் ஹிட் ஆடுவது deception தான். ஒருவர் இன்னொருவரை ஏமாற்றும் இடத்தில் எப்படி அது ஜென்டில்மேன்களின் கேமாக இருக்கும்? 

அஷ்வின் விஷயத்தில் வெளிநாட்டு வீரர்கள் அவரைக் குற்றம் சொல்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், `அஷ்வினால் இந்திய கிரிக்கெட்டின் பெயர் கெட்டுவிட்டது’ என்று சொல்பவர்களுக்கு ஒரு விஷயம்... அஷ்வின் மனைவி சோசியல் மீடியாவில் பகிர்ந்த அவரின் மகளின் புகைப்படத்துக்குக் கீழே `உன் தந்தை மோசடிக்காரன்’ என சில இந்தியர்கள் கமென்ட் போடுகிறார்கள். இவர்களுக்குத்தான் எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. `மன்கடட்’ என்ற இந்தப் பெயரே இந்திய வீரர் வீனூ மன்கட் முதல்முறையாகச் செய்ததால் வந்ததுதான் என்று இவர்களுக்குத் தெரியாதா? 1992-ம் ஆண்டு, மொத்த தேசமும் பாரபட்சமின்றி கொண்டாடும் கபில் தேவ்கூட இப்படி ஒரு தென்னாப்பிரிக்க வீரரை அவுட்டாக்கியுள்ளாரே! அப்போதெல்லாம் பாழாகாத, சூதாட்டப் புகார்களில் பாழாகாத இந்தியக் கிரிக்கெட்டின் பெயர்தான் இப்போது பாழாகிவிடப்போகிறதா?

அஷ்வின் செய்தது இருக்கட்டும்... `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ எப்பவோ செத்துப்போச்சு!

இங்கு `ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’தான் முக்கியம் என்று சொல்பவர்களில் வெற்றியைப் பிராதனப்படுத்தாதவர்கள் யாரும் இல்லை. அணி தோல்வியடைந்தால் வீரரின் வீட்டைத் தாக்குபவர்கள் அதிகம். இங்கு வெற்றியின் அடிப்படையில் மட்டுமே வீரர்களை மதிப்பிடும் மனநிலை கொண்டவர்கள் அதிகம். ஒரு டெஸ்ட் மேட்ச்சின் மூன்று நாள்கள் உயிரைக் கொடுத்து களத்தில் நிற்கும் பேட்ஸ்மேனைவிட, டி-20 போட்டிகளில் அரை மணி நேரம் களத்தில் நின்று சில சிக்சர்கள் அடிப்பவர்களை மட்டும் கொண்டாடுபவர்கள் அதிகம். விடிய விடிய காத்துக்கிடந்து டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் இருப்பது டி20-க்கா அல்லது டெஸ்ட் போட்டிக்கா. இங்கு கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீதான பார்வையே ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாசமாகத்தானே இருக்கிறது வெற்றியை மட்டும் பிராதனப்படுத்தும் இடத்தில் கேம் ஸ்பிரிட் எங்கிருந்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு