Published:Updated:

தோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்! #CSKvRCB

தோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்! #CSKvRCB
தோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்! #CSKvRCB

பொதுவாக, டி20 போட்டியின் முடிவுகள் எட்டாவது ஓவரிலேயே முடிவுசெய்யப்படுவதில்லை. ஆனால், ஹெட்மயர்  ரன் அவுட்டாகி பெவிலியின் திரும்பியபோதே, ஆர்.சி.பி-க்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது. அதற்குப் பின் நடந்ததெல்லாம் வெறும் சம்பிரதாயம்.

ஏகப்பட்ட முரண்களோடு தொடங்கியிருக்கிறது 2019 ஐ.பி.எல் சீசன். கடந்தமுறை சேப்பாக்கத்தில் நடந்த சி.எஸ்.கே - கே.கே.ஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடிக்கப்பட்ட மொத்த ரன்கள் 407. இரு அணிகளின் ரன் ரேட்டும் எந்தக் கட்டத்திலும் பத்துக்குக் குறையவில்லை. ரசிகர்கள் சீட்டில் உட்காரவே இல்லை. விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லை. அன்று அடிக்கப்பட்ட மொத்த சிக்ஸர்கள் 31. அதில்  ஆண்ட்ரூ ரசல் அடித்தது 11. அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள் ஸ்டேடியத்தைத் தாண்டி வெளியே ரோட்டில் போய் விழுந்தது. #CSKvRCB

சேஸிங்கில் சாம் பில்லிங்ஸ் பறக்க விட்ட பந்துகளை வி.ஐ.பி ஸ்டேண்டில் இருந்த ஷாருக்கான் ஒவ்வொருமுறையும் அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டார். இந்தமுறையும் அப்படியொரு என்டெர்டெய்ன்மென்ட்டை எதிர்பார்த்து நேற்று `எல்லோ’ஜெர்ஸி அணிந்து சேப்பாக்கத்தில் நுழைந்தவனுக்கு எஞ்சியது பெரும் ஏமாற்றம். சேப்பாக்கத்தில் ஆர்.சி.பி வெற்றிபெறுவது அவ்வளவு எளிதில்லை என்பது தெரியும்தான். ஆனாலும்,  முதல் வெற்றி இப்படி இருந்திருக்க வேண்டாம். ஆர்.சி.பி இவ்வளவு மோசமாக அடிபணிந்திருக்க வேண்டாம். 

சி.எஸ்.கே Vs ஆர்.சி.பி. தோனி வெர்சஸ் கோலி. இந்த சீசனின் முதல் மேட்ச். ரைவல்ரி எப்படி இருந்திருக்க வேண்டும். உப்பச் சப்பில்லாமல் முடிந்துவிட்டது. ஆர்.சி.பி-யில் பார்த்தீவ் படேல் தவிர்த்து யாரும் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவில்லை. வெற்றி இலக்கான 71 ரன்களை அடிக்க 18-வது ஓவர் வரை உருட்டிக் கொண்டிருந்தது சி.எஸ்.கே. விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் இரவெல்லாம் காத்திருந்து டிக்கெட் வாங்கியவனும் சரி,  அடித்துப்பிடித்து புக் மை ஷோவில் டிக்கெட் புக் பண்ணியவனும் சரி, புலம்பாத குறைதான். டிவி-யில் பார்த்தவர்களும் கொட்டாவி விட்டுக்கொண்டேதான் பார்த்திருப்பார்கள். 

ஏற்கெனவே சொன்னதுபோல, இந்த மேட்ச் முரண்களால் நிறைந்திருந்தது. பொதுவாக, எந்தப் போட்டியாக இருந்தாலும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஹோம் கிரவுண்ட் என்பது உள்ளூர் அணிக்குச் சாதகமாகத்தான் இருக்கும். சென்னை பிட்ச் சுழலுக்குச் சாதகம் என்பது ஊரறிந்த விஷயம். இருந்தாலும், இவ்வளவு ஸ்லோவாக, பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கோலி, தோனி இருவருமே பிட்ச் மீது அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

 `பிட்ச் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நேரம் செல்லச்செல்ல களத்தில் பனியின் தாக்கம் எதிரொலிக்கும் என்பதால், 140- 150 என்பது கெளரவமான ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். பொதுவாக, டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும், அதை சேஸ் செய்ய வேண்டும் என்றுதான் இரு அணிகளும் விரும்பும். அதனால், இரு தரப்பும் இதுபோன்ற பிட்சில் விளையாடுவதை விரும்பாது என்றே நினைக்கிறேன்’’ என்றார் கோலி. அவராவது பட்டும்படாமல் சொன்னார். ஆனால், தோனி பட்டவர்த்தனமாகவே அதிருப்தி தெரிவித்து விட்டார்.

 ``இந்த பிட்ச் 2011 சாம்பியன்ஸ் லீக்கை நினைவுபடுத்துகிறது. அந்த சீசனில் ஐ.பி.எல் வென்றிருந்தோம். திரும்பிவந்தபோது பிட்ச் திருத்தி அமைக்கப்பட்டது. கணநேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதேபோல, இந்தப் பிட்சின் தன்மை இப்படியே நீடித்தால் நாளை எங்களுக்கும் சிக்கல் ஏற்படும். அதிக ரன்கள் குவிக்கும் வகையில் பிட்சை தயார்படுத்த வேண்டும்’’ என்றார் தோனி. அவர் மட்டுமல்ல, `ரன் குவிப்பது கடினமாக இருந்தது.  4 நாள் ஆட்டம் (ரஞ்சி) ஆடுவது போல இருந்தது பிட்ச்’’ என்றார் அம்பதி ராயுடு. ஆக, தோனி சொன்னதை வேதவாக்காகக் கொண்டு, அடுத்த போட்டிகளில் பிட்சை தயார்படுத்த வேண்டியது பிட்ச் கியூரேட்டரின் கடமை.  இல்லையெனில், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக சி.எஸ்.கே ரொம்பவே திணறும். 

பொதுவாக, டி20 போட்டியின் முடிவுகள் எட்டாவது ஓவரிலேயே முடிவுசெய்யப்படுவதில்லை. ஆனால், ஹெட்மயர்  ரன் அவுட்டாகி பெவிலியின் திரும்பியபோதே, ஆர்.சி.பி-க்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது. அதற்குப் பின் நடந்ததெல்லாம் வெறும் சம்பிரதாயம். ஜட்டு பந்தில் கிரந்தோம் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தபோது 'ரைட்டு... எல்லாம் முடிந்துவிட்டது' என்ற நிலைக்கு வந்துவிட்டனர் ஆர்.சி.பி-யன்ஸ். அவர்களை, `உங்களுக்கு இதென்ன புதுசா...’ என சி.எஸ்.கே-யன்ஸ் அப்போதே கேலி செய்யத் தொடங்கிவிட்டனர். 

சென்னை அணியின் பிளேயிங் லெவனில் ஹர்பஜன் பெயரைப் பலரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சீசனில் 12 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். பிப்ரவரி வரை ஒன்பது மாதங்களாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடவில்லை.  ஆடிய ஒன்றிரண்டு டொமஸ்டிக் போட்டிகளிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அப்படி இருந்தும்  ஹர்பஜனை ஏன் தேர்வு செய்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை. பரிசளிப்பின்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர்கூட  `ஹர்பஜனுக்கு வைல்ட் கார்ட் என்ட்ரியா’என தோனியிடம் கிண்டலாக கேட்டார்.  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஹர்பஜனை விட்டே பதில் சொல்ல வைத்தார் தோனி. 

ஸ்லோ பிட்ச். ரன் எடுப்பது சிரமம். எனவே, பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற சென்னை அணியின் கேம் பிளானை பக்காவாக நிறைவேற்றினார் ஹர்பஜன். கிட்டத்தட்ட ஒரே லென்த். பெரும்பாலான பந்துகள் குட் அண்ட் ஃபுல் லென்த்தில் ஒரே இடத்தில் பிட்சானது. மூன்றே மூன்று பந்துகள் மட்டுமே ஷார்ட் லென்த்தில் விழுந்தது. அந்த மூன்று பந்துகளிலும் விக்கெட். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் என்ற பெரு முதலைகளை ஹர்பஜன் பிடித்து விட, எஞ்சிய மீன்களை ஜடேஜா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர் பார்த்துக் கொண்டனர். சென்னையின் வெற்றி எளிதானது.

குறை சொன்னாலும், பயிற்சி போட்டியில் இதே பிட்சில் ஆடியிருந்ததால், ஆடுகளத்தைப் புரிந்து அதற்கேற்ப பிளேயிங் லெவனைத் தேர்வு செய்தார் தோனி. ஆர்.சி.பியில் டாப் ஆர்டரில் பார்த்திவ் படேல், மொயின் அலி, ஹெட்மயர் என இடது கை பேட்ஸ்மேன் இருந்ததால், அவர்களை ஆஃப் ஸ்பின்னர்களை வைத்து மடக்க முடியும் என நம்பினார். அதனால், டு ப்ளெஸ்ஸி எனும் பேட்ஸ்மேனை தாரை வார்த்து, ஸ்பின்னர்கள் அதிகம் இருக்கும் வகையில் அணியைத் தேர்வு செய்தார். பவர் பிளேவில் ஹர்பஜனை கீ பிளேயராக பயன்படுத்தினார். ஹர்பஜன் விக்கெட் வீழ்த்தியதைப் பார்த்ததும், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாகிர் இருவரையும் தங்கள் கோட்டாவை ஃபினிஷ் செய்யவைத்தார். ரெய்னாவும் தன் பங்குக்கு ஒரு ஓவர் போட்டார். இப்படி பிட்சின் தன்மைக்கேற்ப அணியைத் தேர்வு செய்திருந்தார் தோனி.

ஆனால், 'இந்தமுறை உள்ளூர் வீரர்களை அதிகம் பயன்படுத்தப் போகிறோம்' என்று சொல்லியிருந்த கோலி, பிளேயிங் லெவனை சரியாகத் தேர்வு செய்யவில்லை. சேப்பாக்கத்தை பற்றி அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்திருக்கும் வாஷிங்டன் சுந்தரை, அணியில் எடுத்திருக்கலாம்.  டி.என்.பி.எல் உள்பட உள்ளூர் போட்டிகளில் ஓப்பனராக சதம் அடித்திருக்கிறார். பவர்பிளேவில் ரன்களை கட்டுப்படுத்தியிருக்கிறார். அவரை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் பெஞ்சில் உட்காரவைத்தது தவறு.

`இக்கட்டான சூழலில் சரியான முடிவுகள் எடுக்கத் தவறியதே நாங்கள் கோப்பை வெல்ல முடியாததற்குக் காரணமாக இருக்கலாம்’ என போட்டிக்கு முந்தைய பிரஸ் மீட்டில்  கோலி சொல்லியிருந்தார். எத்தனை ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் கோலி!

அடுத்த கட்டுரைக்கு