Published:Updated:

சி.எஸ்.கே vs ஆர்.சி.பி... களமிறங்கப்போவது யார், கலக்கப்போவது யார்? #IPL2019

சி.எஸ்.கே vs ஆர்.சி.பி... களமிறங்கப்போவது யார், கலக்கப்போவது யார்? #IPL2019
சி.எஸ்.கே vs ஆர்.சி.பி... களமிறங்கப்போவது யார், கலக்கப்போவது யார்? #IPL2019

கடந்த சீசன் தொடங்கும் முன்னர், மிட்சல் சேன்ட்னர் காயத்தால் வெளியேற, இந்த முறை லுங்கி எங்கிடி வெளியேறிக்கிறார். அட்டகாசமான ஃபார்மில் இருந்த எங்கிடி வெளியேறியிருப்பது சென்னைக்கு சற்றுப் பின்னடைவுதான்.

கோலியும் தோனியும் நேருக்கு நேர் மோத, நடப்பு சாம்பியனின் குகையில், சென்னை ரசிகர்களின் கர்ஜனையில், மஞ்சள் கடலுக்கு நடுவில் தொடங்கப்போகிறது ஐ.பி.எல் தொடரின் 12-வது சீஸன். நடப்பு சாம்பியன் சி.எஸ்.கே, `ஈ சாலா கப்’ அடிக்கத் துடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் மோதும் முதல் போட்டியில் இரு அணியிலும் களமிறங்கப்போகும் வீரர்கள் யார், இரு அணிகளின் வெற்றி வாய்ப்பும் எப்படி இருக்கிறது? #IPL2019

கடந்த சீஸன் தொடங்கும் முன்னர், மிட்சல் சேன்ட்னர் காயத்தால் வெளியேற, இந்த முறை லுங்கி எங்கிடி வெளியேறிக்கிறார். அட்டகாசமான ஃபார்மில் இருந்த எங்கிடி வெளியேறியிருப்பது சென்னைக்கு சற்றுப் பின்னடைவே. அவரது இடத்தில் டேவிட் வில்லி சிறப்பாகச் செயல்பட வேண்டும். தீபக் சஹார் டெத் ஓவர்கள் வீசுவதில் பெரிய அனுபவம் கொண்டவர் இல்லையென்பதால் வில்லி மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் இம்ரான் தாஹிர், டுப்ளெஸி இருவரும் தாமதமாகத்தான் அணியோடு இணைந்துள்ளனர் என்பதால், முதல் போட்டியில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம். அதனால் சாம் பில்லிங்ஸ் இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. 

பந்துவீச்சைப் பொறுத்தவரை, டேவிட் வில்லி, ஜடேஜா, ஹர்பஜன், தீபக் சஹார், டுவைன் பிராவோ அடங்கிய கூட்டணி விளையாடவே வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது. கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் பகுதி நேர சுழல் கைகொடுக்கும் என்பதால், சி.எஸ்.கே கூடுதல் பந்துவீச்சாளரைக் களமிறக்க வாய்ப்பில்லை. 

``தோனி நான்காவது வீரராக விளையாடுவார்’’ என்று கூறியிருக்கிறார் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங். கேதர் ஜாதவ் அணிக்குத் திரும்பியிருப்பதால் மிடில் ஆர்டர் கடந்த ஆண்டைவிட இம்முறை பலமடைந்திருக்கிறது. பாகிஸ்தான் பிரீமியர் லீகில் கலக்கி, தான் ஃபார்மில் இருப்பதை நிரூபித்திருக்கிறார் ஷேன் வாட்சன். சதத்தோடு கடந்த சீஸனை நிறைவு செய்தவர், இந்த சீஸனை மீண்டும் ஒரு அதிரடி பெர்ஃபாமன்ஸோடு தொடங்கக் காத்திருக்கிறார். 

சென்னையின் பேக் அப் வீரர்கள் அசுர பலத்தில் இருக்கிறார்கள். முரளி விஜய், சையது முஸ்தாக் அலி டி-20 தொடரில் சதமடித்து அசத்தியிருக்கிறார். சாம் பில்லிங்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் அசத்தினார். டேவிட் வில்லி, சான்ட்னர் என எல்லோருமே செம பார்மில் இருப்பது சென்னை அணியைக் கடந்த ஆண்டைவிடப் பலப்படுத்தியிருக்கிறது. ஜடேஜா, ஜாதவ், ராயுடு என இவர்கள் மூவருமே இந்திய அணிக்குத் தொடர்ந்து ஆடிக்கொண்டிருப்பதால், அவர்களது அனுபவமும் அணிக்கு பலம் சேர்க்கும்.

ராயல் சேலஞ்சர்ஸைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் வழக்கம்போல்தான். கோலி, டி வில்லியர்ஸ், ஹிட்மேயர், ஹென்ரிச் கிளாசன் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பது அவர்களுக்குப் பலம். பந்துவீச்சில் டிம் சௌத்தி சீராக விளையாடுவதில்லை. உமேஷ், முகமது சிராஜ் போன்றவர்களின் நிலைமையும் அதுதான். அதனால் முழுக்க முழுக்க சஹாலை நம்பியே அந்த அணியின் பந்துவீச்சு சுழல்கிறது. நாதன் கூல்டர்நைல் தொடக்க வாரங்களில் ஆடாதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவு. டெத் ஓவர்கள் வழக்கம்போல் அவர்களைக் காவு வாங்கும். 

அதேபோல் ஆல்ரவுண்டர் இடமும் கொஞ்சம் சிக்கல்தான். ஸ்டாய்னிஸ், பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதால், அந்த இடத்தில் டி கிராந்தோம், மொயீன் அலி போன்றவர்கள் நிரப்ப வேண்டியிருக்கிறது. அவர்கள் நிச்சயம் 4 ஓவர்கள் பந்துவீசக்கூடியவர்கள் இல்லை. அதனால் இதுவும் அந்த அணிக்குப் பின்னடைவுதான். அதனால் அவர்கள் 5 ஸ்பெஷலிஸ்ட் பௌலர்களுடன் களமிறங்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதால் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதும் அவசியம்.

வாஷிங்டன் விளையாட வேண்டியதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. கோலி ஓப்பனிங்கில் இறங்கி, டி வில்லியர்ஸ் மூன்றாவது வீரராகக் களமிறங்கும்போது, அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமடைகிறது. அதனால் கோலி மூன்றாவது வீரராகக் களமிறங்குவதே அந்த அணிக்கு உகந்ததாக இருக்கும். பார்த்திவ் படேலுடன் ஓப்பனிங்கில் இறங்க வேண்டிய அந்த இடத்துக்கு வாஷிங்டன் நல்ல ஆப்ஷன். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், அந்த இடத்தில் ஆடி பட்டையைக் கிளப்பியிருக்கிறார். சமீபத்தில் நடந்த சையது முஸ்தாக் அலி தொடரில் டாப் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடினார். அதனால் அவர் அந்த இடத்துக்குச் சரியான தேர்வாக இருப்பார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் சுனில் நரைனை சோதனையாக வைத்துச் செய்ததை, ஆர்.சி.பி இவரை வைத்துச் செய்ய வேண்டும். 

பெங்களூரு அணியின் இன்னொரு பலவீனம் - பேக் அப் கீப்பர் இல்லை! பார்த்திவ் படேல் தவிர்த்து, கிளாசன் மட்டுமே அந்த அணியில் இருக்கும் கீப்பர். ஒருவேளை பார்த்திவ் சரியாக ஆடவில்லையென்றால், ஹிட்மேயர், கிராந்தோம் ஆகியோரில் ஒருவரை வெளியேற்ற வேண்டியிருக்கும். அது அணியின் கெமிஸ்ட்ரியை முற்றிலுமாகக் குறைக்கும். அதைச் செய்ய கோலி தயாரில்லையென்றால், கடைசி வரை பார்த்திவை வைத்தே ஓட்ட வேண்டும். எப்படிப் பார்த்தாலும், இரண்டுமே அந்த அணிக்குப் பின்னடைவுதான். 

கடந்த சில ஆண்டுகளாகச் சொதப்பலுடனேயே சீஸனைத் தொடங்கும் பெங்களூரு அணி, இந்த சீஸனை வெற்றி முகத்துடன் தொடங்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. ஆனால், சி.எஸ்.கே-வை அவர்களால் வீழ்த்த முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். சென்னை அணியின் அசுரபலம் கொண்ட பேட்டிங்கை வீழ்த்த எந்த ஸ்பெஷல் ஆயுதமும் பெங்களூரு அணியிடம் இல்லை. தோனி, ஜாதவ், பிராவோ என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கும் லோயர் ஆர்டரிடம், ஆர்.சி.பி-யின் பந்துவீச்சு சுத்தமாகச் செல்லுபடியாகாது. நாளை எப்படியும் இரண்டு அணிகளுமே சேஸிங் செய்யத்தான் விருப்பப்படும். அதனால் டாஸ் நிச்சயம் இந்தப் போட்டியில் முக்கிய அங்கம் வகிக்கும். 

அடுத்த கட்டுரைக்கு