Published:Updated:

`கிரிக்கெட் ஃபீவரை ஜாலி மூடுக்கு மாற்றுமா மும்பை இந்தியன்ஸ்?’ - ஐ.பி.எல் ரவுண்ட் அப்

`கிரிக்கெட் ஃபீவரை ஜாலி மூடுக்கு மாற்றுமா மும்பை இந்தியன்ஸ்?’ - ஐ.பி.எல் ரவுண்ட் அப்
`கிரிக்கெட் ஃபீவரை ஜாலி மூடுக்கு மாற்றுமா மும்பை இந்தியன்ஸ்?’ - ஐ.பி.எல் ரவுண்ட் அப்

மும்பை அணி ஓரிரு போட்டிகளிலாவது யுவியைக் களமிறக்குவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும். சி.எஸ்.கே நிர்வாகம் இர்ஃபான் பதானை ஒரு சீஸன் முழுக்க பென்ச்சில் அமரவைத்தது போன்ற நிகழ்வு யுவி விஷயத்தில் நடந்துவிடக் கூடாது.

நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வெளியான மும்பை இந்தியன்ஸின் `கிரிக்கெட் ஃபீவர்’ தொடர், பெரும்பாலும் சோகமும் கோவமும் நிறைந்ததாகவே இருந்தது. நடப்பு சாம்பியன்களாகக் கடந்த சீஸனைத் தொடங்கி, பல போட்டிகளில் கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்து, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது அந்த அணி. அந்த டாகுமென்டரியின் பல சீன்கள் மௌனத்திலேயே கடந்தன. ஜெயவர்தனே, சச்சின் என ஜாம்பவான்களின் முகங்களும் கலையிழந்திருந்தது. இந்தமுறை, அவையெல்லாம் மாற்றி மும்பையின் கலர்ஃபுல் முகத்தைக் காட்ட மும்பை இந்தியன்ஸ் மும்முரமாக இருக்கும். இரண்டாவது சீஸனில், கோப்பையோடு இருக்கும் டிரஸ்ஸிங் ரூமைக் காட்டுவதே அவர்களின் இலக்காக இருக்கும். அதற்கான சாத்தியங்கள் எப்படி இருக்கிறது?

இந்த சீஸன், மும்பை அணியின் பந்துவீச்சு படுமிரட்டலாக இருக்கிறது. பயிற்சியாளராக இருந்த மலிங்கா, இப்போது மீண்டும் யார்க்கர்கள் மிரட்டத் தயாராகிவிட்டார். பௌன்ஸ், யார்க்கர், ஸ்விங் என அனைத்து ஆயுதங்களையும் ஒரே ஓவரில் பயன்படுத்தக்கூடிய ஜேச பெரண்டார்ஃப், இந்த ஆண்டு ரோஹித்தின் துருப்புச் சீட்டாக இருப்பார். மலிங்கா, தென்னாப்பிரிக்க தொடரில் ஆடுவதாலும், பெரண்டார்ஃப், பாகிஸ்தானுக்கு எதிராக ஆடவிருப்பதாலும், இருவருமே தொடக்க வாரத்தில் ஆடமாட்டார்கள். அதனால் அந்த இடங்களை நியூஸிலாந்தின் மெக்லனகன், மில்னர் கூட்டணி நிரப்பும். 

இந்த வேகப்பந்துவீச்சு கூட்டணியின் பிரமாஸ்திரம் - ஜஸ்பிரீத் பும்ரா. உலகின் நம்பர் 1 பௌலர், கடந்த ஆண்டு சில போட்டிகளில் சறுக்கினார். ஆனால், இப்போது அவரது அனுபவம், அந்தத் தவறுகளை தவிர்த்துவிடும். ஒருவேளை பும்ராவுக்கு சில போட்டிகளில் ஓய்வளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தால், பரிந்தர் ஸ்ரன் விளையாடக்கூடும். இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களோடு சுழலில் கலக்க, மயாங்க் மார்கண்டே. அட்டகாசமான தன் முதல் சீஸனால், இந்திய அணியிலும் இடம்பிடித்துவிட்டார். டி-20 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிவருகிறார். மேலும், ராகுல் சஹார், ஜெயந்த் யாதவ் என இரு தரமான ஸ்பின்னர்கள் பேக் அப்பாக இருப்பது அந்த அணிக்குக் கூடுதல் பலம். 

பேட்டிங் - சூர்யகுமார் யாதவ் தவிர்த்து, கடந்த ஆண்டு யாருமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ரோஹித் ஷர்மா கூட 2 அரைசதங்களே அடித்தார். அதனால், இம்முறை பேட்டிங்கில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பேட்டிங் ஆர்டரும் பல போட்டிகளுக்குப் பிறகுதான் அவர்களுக்குக் கைகூடியது. இந்த முறை, அதிக பரிசோதனை முயற்சிகள் செய்யாமல், தொடக்கத்திலிருந்தே சரியான பேட்டிங் ஆர்டரைக் கையாள்வது முக்கியம். 

டி காக் தாமதமாகவே அணியில் இணைவார் என்பதால், முதல் போட்டியில் அவர் களமிறங்குவது சந்தேகம்தான். "இந்த சீசன் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் நான் ஓப்பனராகவே விளையாடுவேன்" என்று சொல்லியிருக்கிறார் ரோஹித். அதனால் டி காக் அணியில் இணைந்தாலும் அவருக்கான இடம் ஏதுமில்லை! ரோஹித்துடன் லூயிஸ் ஓப்பனராக இறங்க, மிடில் ஆர்டரில் சூர்யா, சூர்யகுமார் யாதவ்; அடுத்து இஷான் கிஷான், பாண்டியா பிரதர்ஸ் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் மீதான பொறுப்பு அதிகரித்துள்ளது. சையது முஸ்தாக் அலி தொடரில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியிருக்கும் இஷான், அந்த ஃபார்மை இப்போதும் தொடர வேண்டும். இல்லையேல் மொத்தமாகத் தன் இடத்தை இழக்க நேரிடும். 

யுவி - 14 போட்டிகளிலும் நிச்சயம் அவரால் சோபிக்க முடியாது. ஆல் ரவுண்டர்கள் நிறைந்துள்ள அந்த அணியில், பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பதும் கடினம்தான். ஆனால், மும்பை அணி ஓரிரு போட்டிகளிலாவது அவரைக் களமிறக்குவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும். சி.எஸ்.கே நிர்வாகம் இர்ஃபான் பதானை ஒரு சீஸன் முழுக்க பென்ன்சில் அமரவைத்தது போன்ற நிகழ்வு யுவி விஷயத்தில் நடந்துவிடக் கூடாது. அன்மோல்ப்ரீத் சிங் (20 வயது), அனுகுல் ராய் (20), ராசிக் சலம் (17) போன்ற இளம் வீரர்களுக்கு ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கலாம்.

மும்பை கவனம்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் - வீரர்களின் ஃபிட்னஸ். கடந்த சீஸன், முதல் போட்டியிலேயே காயமடைந்தார் ஹர்டிக். அது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. இந்த ஓராண்டாக அடிக்கடி காயமடைந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்களுக்காகவும் இந்தியாவின் உலகக் கோப்பை வாய்ப்புகளுக்காகவும் மும்பை இந்தியன்ஸ் அணி பாண்டியாவை சரியாகக் கையாள்வது முக்கியம். அதேபோல் பும்ராவுக்கும் இடையே ஓரிரு போட்டிகளில் ஓய்வு கொடுப்பது நல்லது. 

மும்பை அணியின் பந்துவீச்சு முன்பைவிட மிகவும் பலமாக இருக்கிறது. அவர்களின் கோப்பை வாய்ப்புகளை நிர்ணயிக்கப்போவது முழுக்க முழுக்க அவர்களின் பேட்டிங்தான். பேட்ஸ்மேன்கள் கிளிக்கினால், மும்பை முதல் அணியாக நான்காவது கோப்பை வெல்லும். கிரிக்கெட் ஃபீவர், கொண்டாட்டங்களால் நிறையும்! 

இந்த 11 ஆண்டுகளில்...
 

வருடம் அணிகள் இடம்
2008 8 5
2009 8 7
2010 8 ரன்னர் அப்
2011 10 பிளே ஆஃப்
2012 9 பிளே ஆஃப்
2013 9 சாம்பியன்
2014 8 பிளே ஆஃப்
2015 8 சாம்பியன்
2016 8 5
2017 8 சாம்பியன்
2018 8 5

மொத்த ஐ.பி.எல் போட்டிகள் : 169

வெற்றி : 96

தோல்வி : 72

டை : 0

முடிவு இல்லை : 1

வெற்றி சதவிகிதம் : 56.80%

அதிகபட்ச ஸ்கோர் : 223/6 (20) vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை, 2017

குறைந்தபட்ச ஸ்கோர் : 87 (18.5) vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை, 2018

pic courtesy : twitter.com/mipaltan

அடுத்த கட்டுரைக்கு