Published:Updated:

டெல்லியின் தலையெழுத்தை மாற்றுமா கங்குலி, பான்டிங் கூட்டணி?! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

டெல்லியின் தலையெழுத்தை மாற்றுமா கங்குலி, பான்டிங் கூட்டணி?! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

பான்டிங், கங்குலி என இரு சிறந்த கேப்டன்கள் இணைந்தும் டெல்லியை மீட்கமுடியவில்லை என்றால், வேறு யாராலும் முடியாது.

டெல்லியின் தலையெழுத்தை மாற்றுமா கங்குலி, பான்டிங் கூட்டணி?! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

பான்டிங், கங்குலி என இரு சிறந்த கேப்டன்கள் இணைந்தும் டெல்லியை மீட்கமுடியவில்லை என்றால், வேறு யாராலும் முடியாது.

Published:Updated:
டெல்லியின் தலையெழுத்தை மாற்றுமா கங்குலி, பான்டிங் கூட்டணி?! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

12 ஆண்டுகள் ஆடியும் ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்குள் நுழையவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக, கடைசி 3 இடங்களை மட்டுமே பிடித்திருக்கிறது. 5 வேறு பயிற்சியாளர்களையும் 7 கேப்டன்களையும் பார்த்துவிட்டது அந்த அணி. சீசனுக்கு ஒரு கேப்டன் மாற்றியாகிவிட்டது. வெளிநாட்டு வீரர்களை ஒவ்வொரு சீசனும் மொத்தமாக மாற்றிப் பார்த்தாகிவிட்டது. எதுவும் பலனிக்கவில்லை. என்னதான் செய்வது? பெயரையே மாற்றினால் என்ன! டெல்லி டேர்டெவில்ஸ் டு டெல்லி கேபிடல்ஸ்... தங்கள் தலையெழுத்தை மாற்ற அடையாளத்தை மாற்றிக் களமிறங்குகிறது டெல்லி. 

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஷ் ஐயர், காலின இங்ரம், ரிசப் பன்ட் என மிரட்டலான பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ளது டெல்லி கேபிடல்ஸ். டாப் 5-ல் இந்தியாவின் தவிர்க்க முடியாத 4 டி-20 பேட்ஸ்மேன்களைக் கொண்டிருப்பது அவர்களின் மிகப்பெரிய பலம். சொந்த ஊர் வீரர் தவான் 10 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி அணிக்குத் திரும்பியிருக்கிறார். பிரித்வி ஷாவுடனான அவரது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நிச்சயம் எந்த பௌலிங் அட்டாக்கையும் மிரட்டும். 

ரிசப் பன்ட், கிட்டத்தட்ட உலகக் கோப்பை வாய்ப்பை இழந்துவிட்டார். அதனால் எந்த நெருக்கடியும் இல்லாமல், கடந்த ஆண்டைப் போல் இன்னோர் அட்டகாசமான பர்ஃபாமன்ஸ் கொடுத்தால், அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு எடுத்துச் செல்லலாம். இவர்கள் போக, காலின் முன்றோ, ஹனுமா விஹாரி போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் பேக் அப்பில் இருப்பது, அவர்கள் பேட்டிங்கை இன்னும் பலப்படுத்துகிறது. பிரித்வி ஷாவுக்குக் கடந்த ஆண்டு வாய்ப்பு கொடுத்தது போல், இம்முறை மஞ்சோத் கல்ராவுக்குச் சில வாய்ப்புகள் கொடுக்கலாம். இன்னோர் இளம் ஸ்டாரை இந்தியாவுக்கு அடையாளப்படுத்தலாம். 

ஆல் ரவுண்டர் ஏரியாவில் கிறிஸ் மோரின், அக்சர் படேல் இருவரும் அணியின் ஆப்ஷன்களை அதிகப்படுத்துகின்றனர். கடைசி கட்ட அதிரடி, 8 ஓவர்கள் என பேட்டிங், பௌலிங் இரண்டையும் வலுவாக்குகிறது அந்தக் கூட்டணி. ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜலஜ் சக்சேனா, பெரிய ரசிகர் கூட்டம் முன் கலக்கக் காத்திருக்கிறார். 

டிரென்ட் போல்ட், ககிசோ ரபாடா என மிரட்டலான வேகப்பந்துவீச்சுக் கூட்டணியைக் கொண்டிருக்கிறது டெல்லி அணி. பவர்பிளே, டெத் ஓவர்கள் என எந்த நேரத்திலும் விக்கெட் வேட்டை நடத்தக்கூடிய இருவரும் அந்த அணியின் மிகமுக்கிய துருப்புச் சீட்டுகள். இவர்களோடு இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமோ பாலும் மிரட்டக் காத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் முதல்தரப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால், இந்தத் தொடர் அவருக்கு `பிரேக்த்ரூ' கொடுக்கலாம். தென் ஆப்பிரிக்காவிலிருந்து ரபாடா வரத் தாமதாகும் என்பதால், ஒருசில போட்டிகளில் கீமோ வேகப்பந்தில் துணை நிற்கலாம். 

லெக் ஸ்பின் வீசி விக்கெட் வேட்டை நடத்தக் காத்திருக்கிறார்கள் சந்தீப் லாமிசான், அமித் மிஷ்ரா, ராகுல் தெவேதியா. நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே என்பதால் லாமிசான் வாய்ப்பு பெறுவது கடினம். அதேபோல் இடது கை ஸ்பின்னர் அக்சர் படேல் இருப்பதால், இரண்டு லெக் ஸ்பின்னர்களோடு களமிறங்குவதும் பயனற்றதாகிவிடும். அதனால் பிளேயிங் லெவனில் இவர்களுள் ஒருவர் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது. அமித் மிஷ்ரா அனுபவசாலி என்றாலும், தெவேதியா நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் முதல் போட்டியில் அவர் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம். 

அந்த அணியின் பிளேயிங் லெவனில் இருக்கும் ஒரு பலவீனமான இடம் - இந்திய வேகப்பந்துவீச்சாளர். அனுபவ இஷாந்த் ஷர்மா இருக்கிறார். ஆனால், அவரது ஐ.பி.எல் ரெக்கார்டு அவருக்குச் சாதகமாக இல்லை. அவேஷ் கான், ஹர்ஷல் படேல், நது சிங், எனச் சில இளம் வீரர்கள் இருந்தாலும், அவர்களால் தொடர்ந்து விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியே. பண்டாரு அய்யப்பா முதல் போட்டியைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மோரிஸ், அக்சர் இருவரும் 4 ஓவர்கள் வீசக்கூடியவர்கள் என்பதால், இந்த பௌலருக்கான ஓவர்களை ஓரளவு சமாளிக்கமுடியும். 

சௌரவ் கங்குலி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பான்டிங், கங்குலி என இரு சிறந்த கேப்டன்கள் இணைந்தும் டெல்லியை மீட்கமுடியவில்லை என்றால், வேறு யாராலும் முடியாது. கங்குலி அணியில் இருப்பதால் சீனியர் வீரர்களான இஷாந்த், மிஷ்ரா முதல் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு பெரும்பாலும் பந்துவீச்சைப் பொறுத்தே அமையும். பேட்டிங் பக்காவாக இருக்கிறது. அதிரடி வீரர்கள் நிறைந்து இருக்கிறார்கள். மிடில் ஓவர்களில் டெல்லி அணி எப்படிப் பந்துவீசுகிறது என்பதுதான் அவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும்.

டெல்லி டேர்டெவில்ஸாக...

வருடம் அணிகள் இடம்
2008 8 அரையிறுதி
2009 8 அரையிறுதி
2010 8 5
2011 10 10
2012 9 பிளே ஆஃப்
2013 9 9
2014 8 8
2015 8 7
2016 8 6
2017 8 6
2018 8 8

மொத்த போட்டிகள் : 162

வெற்றி : 67

தோல்வி : 92

டை : 0

முடிவு இல்லை : 3

வெற்றி சதவிகிதம் : 42.13

அதிகபட்ச ஸ்கோர் : 231/4 (20) vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி, 2011

குறைந்தபட்ச ஸ்கோர் : 66/10 (13.4) vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி 2017

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பிரிவ்யூ : ஆரம்பமே அடி... தாக்குப்பிடிக்குமா நைட் ரைடர்ஸ்?