Published:Updated:

வார்னர் வந்தாச்சு... மீண்டும் ஃபைனல் போகுமா சன் ரைசர்ஸ்?! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

வார்னர் வந்தாச்சு... மீண்டும் ஃபைனல் போகுமா சன் ரைசர்ஸ்?! ஐ.பி.எல் ரவுண்ட் அப்
News
வார்னர் வந்தாச்சு... மீண்டும் ஃபைனல் போகுமா சன் ரைசர்ஸ்?! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

லெக் ஸ்பின்னர் ரஷீத், லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் ஷகிப் கூட்டணியை, கடந்த ஆண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் சிலபல போட்டிகளில் பதம் பார்த்தனர். அச்சுறுத்தும் இடதுகை பேட்ஸ்மேன்கள் கொண்ட அணிகளுக்கு எதிராக நபியைப் பயன்படுத்துவது பலன் தரும்.

அதே பலத்தோடு இருக்கிறது சன்ரைசர்ஸ். கடந்த ஆண்டு நூலிழையில் நழுவிய கோப்பையை இம்முறை வென்றுவிடும் உத்வேகத்தோடு இருக்கிறது அந்த அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் போல், இந்த அணியும் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றத்தோடுதான் களமிறங்கும். இரண்டு முறை ஆரஞ்சு கேப் வென்ற அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் கம்பேக் கொடுக்கப்போகிறார். ஷிகர் தவானுக்குப் பதில் அவர். அவ்வளவுதான். அவர் இல்லாமலேயே இறுதிப் போட்டிவரை முன்னேறிய அந்த அணி, இப்போது எவ்வளவு தூரம் செல்லும்?! அவர்களின் பலமான பந்துவீச்சுக் குழு எப்படி இருக்கிறது? அணியில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா? அலசுவோம்...

தவான் இல்லாமல் சன்ரைசர்ஸ் முதல் முறையாக ஒரு சீசனை எதிர்கொள்ளவிருக்கிறது. ஒருசிலர் அதைத் தவறான முடிவு என்று சொன்னாலும், அதனால் அவர்களுக்குப் பெரிய இழப்புகள் ஏற்படப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவானின் இடத்தை அப்படியே வார்னர் நிரப்பிவிடுவார். அதனால் கடந்த சீசனின் பேட்டிங் பலம் அணு அளவும் குறையப்போவதில்லை. அதிகமாகவே போகிறது. அதேசமயம், டெல்லி அணியோடு அவர்கள் செய்த டிரான்ஸ்ஃபர் அணியில் இருந்த சிக்கல்களை சரிசெய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஷபாஷ் நதீம், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் வருகை அவர்களின் பௌலிங் ஆப்ஷன்களை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. 

ரஷீத் கான், முகமது நபி தவிர்த்து, அனுபவ சுழல்பந்துவீச்சாளர்கள் இல்லாத அந்த அணிக்கு, நதீம் பலம் சேர்க்கிறார். சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களில் மூன்றாவது ஸ்பின்னரைக் களமிறக்கும் ஆப்ஷனை அணிக்குக் கொடுக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு கடுமையாக சொதப்பிய அவர்களின் மிடில் ஆர்டரை வலுவாக்கியுள்ளது விஜய் சங்கரின் வருகை. இதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது திணிக்கப்பட்ட நெருக்கடி குறையும். அபிஷேக் ஷர்மா - ஒரு குட்டி ஷகிப் அல் ஹசன். கடந்த ஆண்டு களமிறங்கிய 3 போட்டிகளிலும் அதிரடி காட்டினார் (ஸ்ட்ரைக் ரேட் -  190.90) இந்த 19 வயது வீரர். ஆக, எப்படிப் பார்த்தாலும் தவான் வியாபாரம் சன்ரைசர்ஸ் அணிக்கு லாபம்தான்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வார்னர் - பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடப்போவதில்லை. உலகக் கோப்பை வாய்ப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அவர் தன் ஆட்டத்தை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தன் மீதான விமர்சனங்களுக்கு, பேட்டிங்கால் அவர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால், இந்த ஐ.பி.எல் தொடர் மற்றவர்களை விட அவருக்கு ரொம்பவே முக்கியம். இதற்கு முன் அவர் ஃபார்ம் அவுட் ஆனதாகக் கேள்விப்பட்டதில்லை. எப்போதும் தன் அதிரடியைத் தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறார். அதனால், இம்முறை வார்னரிடம் மிகப்பெரிய விஸ்வரூபத்தை எதிர்பார்க்கலாம். மூன்றாவது ஆரஞ்ச் கேப் அவர் தலையை அலங்கரிக்கலாம்! 

 உலகக் கோப்பை செலக்ஷன் என்ற நெருக்கடி எதுவும் இல்லாமல், இந்த முறையாவது தன் முழுத் திறனையும் மனீஷ் பாண்டே காட்டியாகவேண்டும். கடந்த ஆண்டு அநியாயத்துக்கும் சொதப்ப, பிளே ஆஃப் போட்டிகளில் ஓரம் கட்டப்பட்டார். இந்திய மிடில் ஆர்டரின் எதிர்காலமாகப் பார்க்கப்பட்டவர், பல கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டவர், பொறுப்பில்லாமல் ஆடுவது நல்லதல்ல. தீபக் ஹூட, சமீபத்தில் பெரிதாக தன்னை நிரூபிக்கவில்லை. இருந்தாலும் அணியில் இருக்கும் மற்ற பேட்ஸ்மேன்களைவிட இவரே சன்ரைசர்ஸ் நிர்வாகத்தின் சாய்ஸாக இருப்பார். சொல்லப்போனால், அந்த அணியின் ஒரே பலவீனம் இதுதான். சரியான இந்திய பேக் அப் பேட்ஸ்மேன்கள் இல்லை. யுசுஃப் பதான் ஃபார்ம் அவுட்டாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

பந்துவீச்சு - எப்போதும்போல் அதே பலத்தோடு இருக்கிறது. சொல்லப்போனால், அனைவருக்கும் ஓராண்டு அனுபவம் கூடியிருக்கிறது. புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கௌல் நேரடியாக பிளேயிங் லெவனுக்குள் நுழைந்துவிடுவார்கள். சையது முஸ்தாக் அலி கோப்பையின் 4 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய கலீல் அஹமது, சந்தீப் ஷர்மாவுக்கு முன்னதாக அணிக்குள் நுழைந்துவிடுவார். இடது கை பௌலர் என்பதால், அதுவும் அவருக்குச் சாதகமாக அமையும். புவிக்கு ஓய்வு வேண்டுமென்றால் ஒரு பிரச்னையும் இல்லை, சந்தீப், பசில் தம்பி, நடராஜன் என ஒரு ஆர்மியே காத்திருக்கிறது. 

தொடக்க வாரத்தில் அவர்களுக்கு இருக்கும் சிக்கல் - ஷகிப் காயம் காரணமாக ஆடுவது சிரமம். அந்த இடத்துக்கும் முகமது நபி இருக்கிறார். அவர் மட்டுமல்ல... ஜானி பேர்ஸ்டோ, மார்டின் குப்தில், பில்லி ஸ்டேன்லேக் என அவர்களின் மாற்று வீரர்களே மிரட்டலாக இருக்கிறார்கள். முகமது நபியை, ஷகீப் வந்தபின் ஒரே அடியாக ஓரங்கட்டாமல், பஞ்சாப், டெல்லி அணிகளுடனான போட்டிகளில் களமிறக்குவது அணிக்கு நல்லது. லெக் ஸ்பின்னர் ரஷீத், லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் ஷகிப் கூட்டணியை, கடந்த ஆண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் சிலபல போட்டிகளில் பதம் பார்த்தனர். அச்சுறுத்தும் இடதுகை பேட்ஸ்மேன்கள் கொண்ட அணிகளுக்கு எதிராக நபியைப் பயன்படுத்துவது பலன் தரும்.

பெங்கால் அணியின் இரு விக்கெட்கீப்பர்களில் யாரைக் களமிறக்குவது என்பது கொஞ்சம் தலைவலியாக இருக்கும். இருவருமே சையது முஸ்தாக் அலி தொடரில் நன்றாக ஆடியிருக்கிறார்கள். சஹா, ஒரு சதமும் இரண்டு அரைசதமும் (சராசரி - 30.60) அடிக்க, 3 அரைசதங்கள் (சராசரி - 36.90) அடித்தார் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி. இருந்தாலும், அனுபவத்தின் அடிப்படையில் சஹாவைத் தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும். வார்னர் ஒருபுறம் அதிரடி காட்ட, மறுபுறம் கொஞ்சம் நிதானம் காட்டுவது நல்லது. அதனால் சஹாவே சரியான தேர்வாக இருப்பார். 

டாம் மூடி, வி.வி.எஸ்.லட்சுமண், முரளிதரன் உள்ளடங்கிய பயிற்சியாளர் குழுவுக்கு இதைவிடப் பெரிய தலைவலி இருக்கிறது. விஜய் சங்கர், கலீல் அஹமது, சித்தார்த் கௌல் என மூவரும் சமீபத்தில் இந்திய அணிக்கு விளையாடியிருக்கின்றனர். இந்திய அணி அறிவிக்கப்பட இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால், அணித் தேர்வில் இந்த சீசனின் முதல் இரு வாரங்கள் ஓரளவு தாக்கம் ஏற்படுத்தும். ``ஐ.பி.எல் செயல்பாடு உலகக் கோப்பை தேர்வுக்கு முக்கியமில்லை" என்று கோலி சொல்லியிருக்கிறார். ஆனால், இந்தியாவுக்கு மிகச் சிறந்த 15 வீரர்கள் இல்லை என்பதால், கடைசி 2, 3 இடங்களை யார் வேண்டுமானால் கைப்பற்றக்கூடும். இதை அந்த வீரர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால், அது எந்த வகையிலும் அவர்களின் ஆட்டத்தைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். மூத்த வீரர்கள் இந்த விஷயத்தில் வீரர்களைச் சரியாகக் கையாளவேண்டும். 

மிடில் ஆர்டர் சரியாகக் கைகொடுத்தால், கௌல், கலீல் கூட்டணி சீராகப் பந்துவீசினால், இந்த ஐ.பி.எல் தொடரை சன்ரைசர்ஸ் வெல்வதற்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு. வார்னரின் தாண்டவத்தை நாம் காண்பதற்கு அதைவிட அதிக வாய்ப்புகள் உண்டு!